Breaking News
Home / ஆன்மீகம் / இன்று சனி ஜெயந்தி 2018: சனி பகவானின் கோரப்பார்வையிலிருந்து தப்பிப்பது எப்படி?

இன்று சனி ஜெயந்தி 2018: சனி பகவானின் கோரப்பார்வையிலிருந்து தப்பிப்பது எப்படி?

வைகாசி மாதம் முதல்நாள் அமாவாசை நாளில் பிறந்துள்ளது. இன்று சனி ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சனி பகவானை வணங்குவதோடு ஏழை, எளியவர்களுக்கு இயன்ற அளவு தானம் செய்யலாம் நன்மைகள் நடக்கும். ஏழரை சனி, ஜென்மசனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டக சனியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மைகள் நடக்கும்.

ஜோதிட சாஸ்திரத்தில் ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனீஸ்வரர்தான். இவர் நியாயவான், தர்மவான், நீதிமான் என போற்றப்படுகிறார். ஆயுள், ஆரோக்கியம், செல்வம், தொழில் ஆகியவற்றை அருள்பவர் சனீஸ்வர பகவான்தான். சாதாரண தொழிலாளியைகூட மிகப் பெரிய தொழிலதிபராக ஆக்கும் சக்தி சனீஸ்வரருக்கு உண்டு. சர்வ அதிகாரம் படைத்தவராக இருந்தாலும், கர்ம வினைப்படி அவர்களை சொல்லொணாத துன்பத்திற்கு ஆளாக்கக்கூடியவரும் இவர்தான்.

நம் ஜாதகத்தில் சனிபகவான் நல்ல பலம் பொருந்தி இருந்தால் ஆயுள், ஆரோக்கியம், அஷ்ட ஐஸ்வர்யம், பட்டம், பதவி தானாக தேடி வரும்.

தன்னுடைய திசா புக்தி காலங்களில் பல ஏற்றங்களை வழங்குவதில் சனிக்கு நிகர் சனிதான். அதேபோல் கோச்சார பலன்கள் தருவதிலும் வலிமை மிக்கவர். ஏழரை சனி, கண்ட சனி, அட்டம சனி, அர்த்தாஷ்டம சனி என்று ஒவ்வொருவருக்கும் 30 ஆண்டுகளுக்குள் பல விதமான கோச்சார பலன்களை தருகிறார்.

சனி பயோடேட்டா
 • நட்சத்திரங்கள் – பூசம், அனுஷம், உத்திரட்டாதி
 • பால் – அலி
 • நிறம் – கறுப்பு
 • தேவதை – யமன்
 • பிரத்தியதி தேவதை -பிரஜாபதி
 • இரத்தினம் – நீலக்கல்
 • மலர் – கருங்குவளை
 • குணம் – குருரன்
 • ஆசன வடிவம் – வில்
 • தேசம் – சௌராஷ்டிரம்
 • சமித்து – வன்னி
 • திக்கு – மேற்கு
 • சுவை – கசப்பு
 • உலோகம் – இரும்பு
 • வாகனம் – காகம்
 • பிணி – வாதம்,வாய்வு
 • தானியம் – எள்
 • காரகன் – ஆயுள்
 • ஆட்சி – மகரம், கும்பம்
 • உச்சம் – துலாம்
 • நீசம் – மேஷம்
 • மூலத்திரிகோணம் – கும்பம்
 • நட்பு – புதன், சுக்கிரன், இராகு, கேது
 • பகை – சூரியன், சந்திரன், செவ்வாய்
 • சமம் – வியாழன்
 • உபகிரகம் – குளிகன்
 • உறுப்பு – தொடை
 • திசை காலம் – 19 வருடங்கள்
 • கோசார காலம் – இரண்டரை வருடம்
 • ஸ்தலம் – திருநள்ளாறு, குச்சனூர்

ஈஸ்வரப்பட்டம் பெற்றவர் சனீஸ்வரன். அவரவர் வினைக்கேற்ப பலன்கனை வழங்குவதில் நீதி தவறாதவர் சனீஸ்வரன். எனவேதான் மக்களுக்குச் சனிபகவானிடம் சற்று அச்சம் உண்டு. சனிபகவானுக்கு பிடித்த தானியம் எள். அந்த எள்ளில் இருந்து எடுக்கப்பட்ட நல்லெண்ணெய் தீபம் ஏற்றி அவரை மனதார வேண்டினால் நன்மையே நடக்கும்.

இந்தியாவின் மிகப்பெரிய சனீஸ்வரர் கோயில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் அருகில் பாய் என்ற கிராமத்தில் உள்ளது. வடக்கு பார்த்த விநாயகரும் தெற்கு பார்த்த அனுமனும் இங்கு அருள்பாலிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சனி ஜெயந்தியன்று இங்கு 5 நாட்கள் கோலாகலமாக திருவிழா நடக்கிறது. ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி சனீஸ்வரனை தரிசிப்பர். அப்போது சனிக்கு அபிஷேகம், விசேஷ அலங்காரம் எல்லாம் நடைபெறும். நாமே சனிபகவானுக்கு அபிஷேகம் செய்யலாம். இதுதவிர கோயிலுக்கு வெளியே சனீஸ்வர பரிகார ஹோமங்களும் நடத்தப்படுகின்றன.

சனி அமாவாசை நாளும் இங்கு வெகு சிறப்பானது. அன்றைய தினம் முழுவதும் விரதம் இருந்து, மாலையில் சனீஸ்வரன் கோயிலுக்கு வந்து பூஜை, ஆரத்தி நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு, இரவு வீடு திரும்பி ஒரு வேளை மட்டும் உணவு உட்கொள்வார்கள். சனி அமாவாசை அன்று சனீஸ்வரனை தரிசித்தால் அவரால் வரும் சங்கடங்களை அவரே விலக்கி விடுவார் என்பது நம்பிக்கை.

விரல்களில் சனி விரல் நடு விரலாகும். அந்த விரலுக்கு கீழே உள்ள மேடு சனி மேடாகும். தொழில் காரகன் கர்ம காரகன் ஆன சனி பகவான் ஜாதகத்தில் ஆட்சி பெற்றால் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஆற்றல் உள்ளவர், ஒருவரின் ஜாதகத்தில் சனி பகவான் உச்சம் ஆனால் தொழில் துறையில் சாதனை படைப்பவராகவும் நீதிமானாக திகழ்வார்.

சனியின் கோபப் பார்வையில் இருந்து தப்பிக்க காக்கைக்கு தினந்தோறும் சாதம் வைக்க வேண்டும். உளுந்து தானியத்தை தானம் செய்யலாம். சனிக் கிழமை அதிகாலை வேளைகளில் குளித்து விட்டு சனி பகவானுக்கு எள் எண்ணெய் தீபம் போடலாம். எளியவர்களுக்கு செய்யும் உதவியும், தொண்டும் சனீஸ்வரருக்கு மிகவும் பிடித்தமானதாகும். இந்த சனி ஜெயந்தி அன்று சனிபகவான் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்.

Check Also

இன்றைய அதிஷ்டசாலி நீங்களா?… இதோ உங்களது ராசிபலன்

நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *