Breaking News
Home / Blog / இறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்!

இறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்!

இதய சுத்தியுடன் முன்னெடுக்க பட்ட ஒரு விடயம் அதன் சத்திய தர்மங்கள் தரக்கூடிய சாதக தன்மை தகர்ந்து போகின்ற நிலையில் அதன் கூடவே வாழுதல் என்பது கொடுமை.

அளந்து அளந்து கட்டிய கோட்டை கொஞ்சம் கொஞ்சமாய் தகர்ந்து கொண்டிருக்க இரத்த வெள்ளத்தில் தசைத்துண்டங்கள் மிதந்த கணங்களின் ஊடே ஒரு மாபெரும் சத்திய போராட்டத்தின் சேர்த்து வைக்கப்பட்ட கனவுகளும் மெல்ல மெல்ல கரைய தொடங்கியது.

நாம் ஏன் அழித்தொழிக்கப்பட்டோம்?

நாம் யாருக்கும் எந்த துரோகமும் செய்யவில்லை. எம் கரங்களில் இருந்த ஆயுதங்கள் எமக்கான பாதுகாப்பு கருவிகளாக செயலாற்றியதே தவிர அநியாயமாக அடுத்தவர் உயிர் குடிக்கும் அஸ்திரங்களாக செயலாற்றவில்லை.

எம் பயணம் எம்முடைய தாயக பூமியில் எம் சொந்த இனத்தின் ஆளுகையை வேண்டி இருந்ததே ஒழிய அடுத்தவன் தேசம் பிடிக்கும் நயவஞ்சக பயணமாக இருக்கவில்லை.

ஒரு ஒடுக்கப்பட்ட இனம் ஒன்று காலம்காலமாக கொன்று குவிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலினை அடியோடு தகர்த்து , எம் சாவு எமது சந்ததியின் பீடை தொடர்சியாய் தொடரும் அடிமை தனத்தின் ஆணிவேரை அடியோடு பிடுங்கி எறியட்டும் என்கின்ற உன்னத கனவுடன் ஆரம்பமானதே இந்த சத்திய பயணம்.

நாம் எப்போதும் சாவை விரும்பியவர்கள் அல்லர். எமது இனத்தின் சாவை தடுக்கும் கருவியாக நாம் வரித்து கொண்ட வலிய ஆயுதமே எமது சாவுகள். ஒரு பயங்கரவாத அரசை ஆட்டம் காணவைத்த எம் சரித்திர சாவுகள் சர்வதேசத்தின் கண்களுக்கு பயங்கரவாதமாக தெரிந்த விந்தை என்ன?

எமது விடுதலைப்போராட்டத்தில் நாம் எப்போதும் கடும் போக்கை கடைப்பிடித்தது இல்லை. பல சந்தர்ப்பங்களில் சர்வதேச அழுத்தங்களுக்கு மதிப்பளித்து சமாதன பாதையை நாம் தெரிவு செய்தும் கொண்டோம்.

காரணம், இன்றைய பூகோள வலைப்பின்னல் அரசியலில் சிக்கி தடுமாறும் விடயங்களில் எமது போராட்டமும் விதி விலக்காக இருக்கவில்லை. ஆனால் நாம் சர்வதேசத்துக்கு கொடுத்த மரியாதையை அது எமது மக்களுக்கு திருப்பி தந்ததா ?

எமது ஒரே அபிலாசையாகிய தமிழீழம் என்னும் தனிநாடு , எமது மக்களின் பிரச்சனைகளுக்கு ஒரே ஒரு தீர்வான தனி நாடு தான் ஆசிய பிராந்திய அச்சுறுத்தலுக்கு காரணமாக அமையுமென்று உலக நாடுகளின் மூளையில் கிள்ளிய காரணம் என்ன?

வெறும் ஆயுத குழுவாக என்றைக்கும் இருக்குமென்று தப்பு கணக்கு போடப்பட்ட ஒரு இயக்கத்தின் வளர்ச்சி பாரம்பரிய இராணுவத்தின் நிலையையும் கடந்து நிர்வாக அலகுகளை ஆட்சி செய்யும் ஒரு நிழல் அரசாங்கமாக உருவெடுத்த அதிசயம் உலக நாடுகளால் தாங்கி கொள்ளமுடியாத எரிச்சலை கொடுத்தது.

உலகளாவிய போராட்ட வரலாற்றின் பக்கங்கள் எப்போதும் துரோகங்களும், ரத்தக் கறை படிந்ததுமாகத்தான் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதன் மையம் எப்பொழுதும் அதிகார வர்க்கத்தின், அரச பயங்கரவாதத்தின் தலைமையில்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அதன் வழியிலேயே எப்போதும் சக நாடுகளின் கைகோர்ப்பும் இருந்து வந்தது.

இதை தான் உலக அரச பயங்கரவாதம் முள்ளிவாய்க்காலிலும் அரங்கேற்றியது. ஒரு நாட்டுக்கான கனவுகளுடன் வாழ்ந்து வந்த மக்களை குண்டு சிதறல்கள் மூலம் வேட்டையாடும் கொலை களமாக முள்ளிவாய்க்கால் மாற்றம் பெற்றது.

கொத்து குண்டுகளுக்கு இடையில் எமது மக்கள் குவியலாக கொன்று குவிக்கப்பட மறு புறத்தில் இன வீரம்,இன மானம் என்ற சொற்களுக்கு அடையாளமாக இருந்த எமது விடுதலை போராட்டம் மெல்ல மெல்ல தனது சட சடப்புகளை நிறுத்தி அமைதியானது.

இறுதிவரை எமது விடுதலைப்போராளிகள் சளைக்காமல் களமாடினார்கள். சர்வதேசத்தின் அரவணைப்புடன் அலையென இலங்கை இராணுவம் திரண்டு வந்த போதும் பல இடங்களில் மறிப்பு சமர்கள் மூலம் அவர்களை தடுத்து நிறுத்தி தமது ஒவ்வொரு நிலையையும் தெளிவாக சர்வதேசத்தின் முன் புலிகள் வெளிபடுத்திகொண்டே இருந்தனர்.

போர் முள்ளிவாய்க்காலின் நடு மையத்தை தொடுவதற்கு முன்னதாக ஏற்படபோகும் அனர்த்தத்தின் சரியான விபரம் புலிகளின் சர்வதேச அலுவலகங்கள் மூலம் சர்வதேசத்தின் கண் முன்னே கொண்டு செல்லப்பட்டது.

ஆனால் இவற்றையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளும் நிலையில் சர்வதேச நாடுகள் தயாராக இருக்கவில்லை.

கிழக்கில் இந்தியப் பெருங்கடலாலும் மேற்கில் நந்திக்கடல் காயலாலும் சூழப்பட்ட பகுதி. கிழக்கில் கடற்கரை. மேற்கில் நீர் நிரம்பி இருக்கும் சதுப்பு நிலக் காடுகள். இடையில் மண் திட்டு பகுதியில் உலகத்தின் மனசாட்சி போர்த்து உறங்க மாபெரும் மனித அழிவு ஒன்று நடந்தேறியது.

இன்று எமது ஆயுதங்கள் அமைதி அடைந்திருக்கலாம் , ஆனால் எமது மனங்களில் குடி கொண்ட உன்னத விடுதலை என்னும் பெரு நெருப்பு ஒவ்வொரு தமிழனின் உணர்விலும் கொழுந்து விட்டு எரிந்துகொண்டே இருக்கின்றது.

அழிவுகளின் ஊடே பல பாதைகளை கடந்து வந்தவர்கள் நாம். ஆனால் முள்ளிவாய்க்கால் எமது இனத்தில் நிகழ்ந்த மாபெரும் அழிவாக உள்ள போதும் இதை கடந்ததாகவே எமது பயணம் அமைய வேண்டும்.

நமது தமிழ் தேசிய விடுதலை என்பது வரலாற்றின் நிகழ்வுகளோடும் நமது விடுதலையைக் குறித்த தேடல்களோடும் நமது தேவையை உள்ளடக்கியதாகவும் இருக்கின்ற காரணத்தினால் நாம் புறம் சார்ந்த அரசியல் தத்துவார்த்த கோட்பாட்டின்படிதான் நமது விடுதலையை இணைக்க வேண்டும்.

அந்த பாதைகளை நமது விடுதலைப் போராட்டத்தோடு இணைப்பதின் மூலமே நமது விடுதலையின் முழு பொருளையும் புரிந்து கொள்ள முடியும். நமது விடுதலை என்பது எவ்வளவு முக்கியமோ, அதைப்போன்றே களங்களில் சமராடும் அடிமைத்தனத்தின் தளைகளை அறுத்தெறிய களமாடிய எண்ணற்ற போராளிகளின் இலக்கும், அவர்களின் ஈகம் செறிந்த பயணமும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதோடு, அந்த போராட்ட தன்மையோடு நமது அரசியல் போராட்டத்தை கலந்து பார்ப்பதிலே தான் நமது வெற்றி உள்ளடங்கி இருக்கிறது.

Check Also

லைக்கா நிறுவனம் இல்லை யென்றால் இலங்கையில் உள்ள தமிழர்களின் நிலை என்ன ?

லைக்கா மோபைல் என்னும் மாபெரும் நிறுவனம் இன்று இல்லை என்றால், ஈழத்தில் உள்ள தமிழர்களின் நிலை என்ன ஆகும் ? …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *