Breaking News
Home / வாழ்க்கைமுறை / கணவன் இந்த தேவைகளை பூர்த்தி செய்ய தவறும் போது, மனம் அலைபாய தான் செய்யும்…

கணவன் இந்த தேவைகளை பூர்த்தி செய்ய தவறும் போது, மனம் அலைபாய தான் செய்யும்…

கல்லூரிக் காலத்தில் இருந்தே காதல், கீதல் என்று எனக்கு எதுவும் இல்லை. என் வீட்டில் என்னை அப்படி வளர்த்திருந்தனர். ஆச்சாரம், அது, இது என நான் பின்பற்ற வேண்டிய ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ் நிறையவே இருந்தன. அதெல்லாம் எனக்கு புதியதாகவோ அல்லது கடுமையானதாகவோ தெரியவில்லை. என் வீட்டில், பாட்டி, அம்மா, அக்கா என அனைவரும் இப்படி தான் வாழ்ந்து வருகின்றனர். நான் அதை பார்த்தே வளர்ந்ததால், பெண்ணின் வேலை, கடமை இவை தான் என்றே எண்ணி வளர்ந்துவிட்டேன்.

எனக்கு 23 வயது இருக்கும். படிப்பு முடித்து இரண்டு ஆண்டுகள் ஆகியிருந்த காலம். சில வேலைகள் கிடைத்தும், எங்கள் வீட்டில் பெண்கள் வேலைக்கு போவது அனுமதியற்ற செயலாக காணப்பட்டதால் நான் வேலைக்கு போகவில்லை. அதற்கு மாறாக 23 வயதிலேயே எனக்கு திருமணம் செய்து வைத்தனர். என் கணவர் ஒரு நல்ல தொழிலதிபர். ஆனால், நல்ல கணவர் அல்ல.

என்ன குறை?

உனக்கு என்னமா நல்ல கணவர், கை நிறைய பணம், எல்லா வசதிகளும் இருக்கு… உனக்கு என்ன குறை..? வீட்டுக்கு லக்ஷ்மியே குடிவந்தது போல கல்யாணம் ஆன மறு வருஷமே ஒரு பெண் குழந்த… என்று பார்ப்பவர்கள் எல்லாம் புகழ்ந்து, புளகாங்கிதம் அடைந்து போவார்கள்.

ஆனால், என் கவலை மற்றும் வலி எனக்கு மட்டும் தான் தெரியும். ஒருவேளை, மகா லக்ஷ்மியாக இல்லாமல், கிருஷ்ணன் எனக்கு பிறந்திருந்தால், நான் இந்த திருமண பந்தத்தில் இருந்து விவாகரத்து பெற்றிருந்தாலும் வியக்க தேவையில்லை.

எல்லாம் குறை…

எங்கே தனது ஆண்மைக்கு பங்கம் வந்துவிடுமோ என்று தான் திருமணமான இரண்டே மாதத்தில் என்னை கர்ப்பம் ஆக்கிவிட்டார் என் கணவர். பிள்ளை பெற்றுக் கொள்வதில் எனக்கு எந்த ஒரு கவலையும் இல்லை.

ஆனால், பெண்கள் கணவரிடம் எதிர்பார்ப்பது பணமோ, தாம்பதியமோ அல்ல. அக்கறை, அன்பு, காதல், உறுதுணை போன்றவை தான். அவருக்கும் எனக்கும் மத்தியில் நடந்த தாம்பத்தியம் கூட அவசரகதியில் நடந்த ஒன்று தான்.

பேசவும் நேரமில்லை…

எனக்கு நாளை இந்த உணவு வேண்டும், நான் இரவு இந்நேரத்திற்கு தான் வருவேன், நாளை இந்த ஊருக்கு செல்லவிருக்கிறேன் போன்ற வாக்கியங்கள் மட்டுமே என் கணவர் என்னிடம் அதிகம் பேசியவை.

நான் நன்றாக இருக்கிறேனா? உடல்நலம் எப்படி இருக்கிறது, இன்றைய நாள் எப்படி போனது, எங்காவது போய்வரலாமா? உனக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது என்று அவர் எதுவுமே என்னிடம் பேசியதே இல்லை. பிஸ்னஸ், பிஸ்னஸ், பிஸ்னஸ்… என தொழிலை மட்டுமே கட்டிக் கொண்டு ஓடும் மனிதர்.

மகள்!

மகளாக இருப்பதால் அவளை எப்படியாவது நன்கு வளர்க்க வேண்டும், இந்த சமூகம் தனியே ஒரு பெண்ணை வாழவே விடாது, அதிலும் ஒரு பெண் குழந்தையுடன் என்றால் பாதுகாப்பே அளிக்காது இந்த சமூகம் என்ற அச்சம் என்னுள் அதிகம். சமூகத்தின் பார்வை, பேச்சு, பாதுகாப்பின்மை காரணமாகவே நான் இந்த திருமண பந்தத்தில் இன்னும் ஒட்டிக்கொண்டு இருக்கிறேன்.

என் கணவர் மோசமானவர் இல்லை. அவருக்கு எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லை. ஆனால், மனைவி, மகளுடன் எப்படியான உறவை பேணிக் காக்க வேண்டும் என்பது அவருக்கு தெரியாது.

நண்பன்!

இந்த காலக்கட்டத்தில் தான் எனது கல்லூரி நண்பன் ஒருவனை நீண்ட காலம் கழித்து ஃபேஸ்புக்கில் சந்தித்தேன். வாட்ஸ்-அப் எண் பகிர்ந்துக் கொண்டோம். நிறையவே பேசினோம் அவனுக்கும் திருமணமாகி ஒரு மகள் இருந்தாள். அவனுக்கும் நிச்சயம் செய்த திருமணம் தான்.

நிச்சயம் செய்த திருமணம் பெண்களை மட்டும் தான் வாட்டி எடுக்கிறது என்று எண்ணினேன், இல்லை அவன் மூலமாக ஆண்களும் கூட அவதிப்படுகிறார்கள் என்று அறிந்துக் கொண்டேன். அவன் துணையும் அவனை அன்போடும், அக்கறையோடும் நடத்துவது இல்லை என்பதை அவன் கூறியே அறிந்தேன்.

மெல்ல, மெல்ல…

நாட்கள் நட்புடன் நகர்ந்தன. ஓராண்டு காலத்திற்கும் மேல் நாங்கள் மிகவும் நெருங்கி நட்புடன் பழகி வந்தோம். நேரில் பார்த்துக் கொள்ள இயலாவிட்டாலும் வாட்ஸ்-அப் மூலம் தினமும் பேசிக் கொள்வோம்.

என் மகள் மீதும், என் மீதும் அளவுக் கடந்த அன்பு வைத்திருந்தான். நட்பு கொஞ்சம், கொஞ்சமாக காதலாக மாறியது. அவன் எங்கள் இருவர் மீது காட்டிய அன்பும், அக்கறையும், உணர்வு ரீதயாக அவனது உறுதுணையான பேச்சும், ஆதரவும் மனதை இலகுவாக்கியது.

நெருக்கம்..

ஒரு கட்டத்தில் நேரில் சந்தித்து பேசிக் கொள்ளவும் செய்தோம். அவன் என்னையும், என் மகளையும் அவன் குடும்பமாகவே கருதினான். ஆனால், ஒருபுறம் என்னுள் இது அச்சத்தையும் அதிகரிக்க செய்தது. நாங்கள் இருவருமே திருமணம் ஆனவர்கள்.

எங்கள் வீட்டில் தெரிந்தால் இது நிச்சயம் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும் என்பதை அறிந்தேன். ஆனால், நாங்கள் தவறாக எதுவும் பேசிக் கொண்டது இல்லை. எங்களுக்கு மன ரீதியான உறவு மட்டுமே இருந்தது.

ஒருநாள்..

நான் அறிந்தது போலவே, ஒரு நாள் என் நண்பனின் மனைவிக்கு நாங்கள் பேசிக் கொள்வது குறித்து தெரிய வந்தது. நானும், அவளும் வெளியே ஒரு காபி ஷாப்பில் சந்தித்துக் கொண்டோம். அப்போது தான் அவளது உண்மையான வலியை நான் புரிந்துக் கொண்டேன்.

சில சமயங்களில் மிகுதியான அன்பும் நாம் சந்தேகம் என்ற கண்ணோட்டத்தில் காண்கிறோம். அதேபோல, என் கணவர் அதிகம் உழைப்பது கூட எனக்கும், என் மகளுக்காகவும் தானே என்பதையும் நான் உணர துவங்கினேன்.

திட்டினேன்..

எப்படியாவது அவனது உறவில் இருந்து வெளிவர வேண்டும். நானும், அவனது மனைவியும் சந்தித்துக் கொண்ட விஷயம் அவனுக்கு தெரியாது. ஆகவே, அவனிடம் ஒருமுறை பேசும் போது வேண்டுமென்றே சண்டைப்போட்டு அவனது மனைவியை திட்டினேன்.

சண்டை முற்றியது, என்னையும், என் மகளையும் அசிங்கமாக திட்டி அழைப்பை துண்டித்துவிட்டான். அப்போது தான் அறிந்தேன், அவனுக்குள்ளும் அவன் குடும்பம் மீது எத்தனை பாசம் இருக்கிறது என்று. என்னதான் என்னை பிடித்திருந்தாலும் முதல் உரிமை யாருக்கு என்பதையும் அந்த சண்டையில் நான் உணர்ந்தேன்.

பிளாக்!

வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் என அனைத்து வகையிலும் அவனை பிளாக் செய்தேன். அவன் மனைவியிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டேன். அவன் மீண்டும் என்னை தொடர்பு கொள்ள முயற்சித்தான். ஆனால், அதற்கு வழி அமைக்க நான் விரும்பவில்லை. போதும், நானும் அவனும் இரண்டு வருடங்கள் காதலித்த அந்த தருணங்கள் போதும்.

அவன் என் மீது காட்டிய அந்த அன்பும், பாசமுமே போதும். நாங்கள் செய்தது தவறு என்பதை உணர்ந்தேன். பிரிந்துவிட்டேன். நிச்சயம் ஒரு நாள் என் கணவர் தொழில், பணத்தை விட்டு என்னையும், என் மகளையும் விரும்ப துவங்குவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.

Check Also

தந்தையின் உல்லாசத்துக்கு அழகியை தேர்ந்தெடுத்த மகள்கள்!

ரஷ்ய நாட்டின் பெரிய கோடீஸ்வர தொழிலதிபரான 54 வயதான கோன்ஸ்டாண்டின் ஷிஹிபினின் 5 முறை விவாகரத்து பெற்ற ஒருவர். இவர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *