Breaking News
Home / இலங்கை / கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி வீழ்ச்சிக்குப் பிரதான காரணம் தொண்டர் ஆசிரியர்கள்

கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி வீழ்ச்சிக்குப் பிரதான காரணம் தொண்டர் ஆசிரியர்கள்

கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி நிலை வீழ்ச்சிக்கு, தகுதியற்றவர்களைத் தொண்டர் ஆசிரியர்களாக்கி, ஆசிரியர் நியமனம் வழங்கி, பாடசாலைகளில் கற்பித்தல் பணிக்கமர்த்தியமையே பிரதான காரணம் என அதிபர்கள் கூட்டத்தில் கல்வி அதிகாரிகள் கூறி ஆதங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை பாடசாலையில் நடைபெற்ற ஆசிரியர் கூட்டத்தில் அதிபர் கூறி, அதனை நியாயப்படுத்த முற்பட்டதாக ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்திற்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து ஆசிரியகள் தெரிவிக்கையில்,

தொண்டர் ஆசிரியர்கள் என்று சொல்லுகிறார்கள். அப்படிச் சொல்வதே பிழையானது. தொண்டர் ஆசிரியர்கள் என்று சொல்பவர்கள் தகுதியற்றவர்களாகத்தான் நோக்கப்படுகின்றார்கள்.

இவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதே பிழையானதாகும். நோயாளிகளுக்கு வைத்தியம் பார்ப்பவன் வைத்தியன். அதேமாதிரி மாணவர்களுக்குக்கல்வி கற்பிப்பவன் ஆசிரியன். ஆசிரியனுக்குத் தகுதி இருக்க வேண்டும்.

எங்கேயாவது நோயாளிகளுக்கு வைத்தியம் பார்ப்பவர்களில் தொண்டர் வைத்தியர் என்றுள்ளார்களா? அப்படி யாராவது தகுதியற்றவர் தொண்டர் வைத்தியராக இருந்து சேவையாற்றினால் அந்த நோயாளிகளின் நிலை என்னவாகும்? தொண்டர் வைத்தியர்களாக இருந்து வைத்தியம் பார்த்து நிரந்தர வைத்தியராக நியமனம் வழங்கப்படுவதில்லை.

ஆனால் மாணவர்களுக்குக் கற்பிப்பதற்காக தொண்டர் ஆசிரியர்கள் என்னும் பெயரில் தகுதியற்றவர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு நிரந்தர ஆசிரியர் நியமனமும் வழங்கப்படுகின்றது.

இது எந்தளவுக்குப் பாரிய பிழையான விடயம். இதனால்தான் கிளிநொச்சி மாவட்டம் தொடர்ந்தும் கல்வியில் கடைசி நிலையில் இருந்து வருகின்றது.

தற்போதும் கிளிநொச்சியிலுள்ள தொண்டர் ஆசிரியர்கள் என அழைக்கப்படுபவர்கள் பலருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இதுமுற்றிலும் பிழையான ஒரு விடயம். யாழ்ப்பாணத்திலுள்ளவர்களுக்கு இதே நியமனம் வழங்கப்பட்டாலும் அது ஓரளவுக்குத் தகுதி, தராதரம் பார்த்து வழங்கப்பட்டுள்ளது.

அவர்கள் மேற்படிப்புக்களைப் படித்து தகுதியுடையவர்களாகத் தங்களை ஆக்கிக்கொண்டுள்ளார்கள். அதனால் அவர்கள் தகுதியுடையவர்களாக மாறியுள்ளார்கள்.

கிளிநொச்சியிலுள்ள தகுதியற்றவர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளமையால் அவர்கள் மேற்கொண்டு படிக்காமல் கற்பிக்கத் தகுதியற்றவர்களாகவேதான் காணப்படுகின்றார்கள் என்றும் கூறப்பட்டது.

அத்துடன், மாவட்டத்தில் முற்றுமுழுதாகத் தங்கியுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி மாவட்டப் பாடசாலைகளுக்குக் கற்பிப்பதற்காக வரும் தகுதியான ஆசிரியர்களுக்கு உரிய போக்குவரத்து வசதிகள், ஆசிரியர் விடுதி வசதிகளின்மை போன்ற பல வசதியீனங்கள் காணப்படுகின்றன.

கையொப்ப இயந்திரமும் இவர்களுக்கு சிரமத்தையே ஏற்படுத்துகின்றது. இப்படியான சில காரணங்களும் கிளிநொச்சி மாவட்ட கல்வி வீழ்ச்சிக்கு துணைக்காரணங்களாக இருந்த போதிலும், கிளிநொச்சியில் தகுதியற்றவர்களுக்கு தொண்டர் ஆசிரியர் நியமனம் வழங்கியுள்ளமையேதான் பிரதான காரணமாகக் காணப்படுகின்றது என அதிபர்களுக்கான கல்வி அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில் கல்வி அதிகாரிகளால் ஆதாரபூர்வமாக கூறப்பட்டதாக, பூநகரிப் பாடசாலையில் நடைபெற்ற ஆசிரியர்களுக்கான கூட்டத்தில் அப்பாடசாலையின் அதிபர் கூறிய இதுவேதான் உண்மையான விடயம்.

மாவட்டம் கல்வி நிலையில் பின்னடைவதற்குப் பிரதான காரணம் தகுதியற்ற தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டமையே என கூறி, மேற்படி விளக்கமளித்தமையால் அக்கூட்டத்தில் தொண்டர் ஆசிரியர்களாக நீண்ட காலம் கற்பித்து ஆசிரியர் நியமனம் பெற்ற ஆசிரியர்கள் அக்கருத்தை ஏற்காது மறுதலித்துக் கதைத்த வேளை,

ஒருவேளை நீங்கள் தகுதியுள்ளவர்களாக இருக்கலாம். கிளிநொச்சியின் பலபாகங்களில் குறிப்பாக அக்கராயன், ஆனைவிழுந்தான் போன்ற பல பகுதிகளில் தகுதியற்றவர்கள் ஆசிரியர்களாக இருந்து பாடசாலைகளைக் குழப்பி கற்பிக்காமல், கற்பிக்கத் தெரியாமல் மாணவர்களின் கல்வியைச் சீரழிக்கின்றார்கள் அது தெரியுமா என்று கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கப் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

வன்னியில் யுத்தம் நடைபெற்ற காலங்களில் கிளிநொச்சிக்கும் ஏனைய பகுதிகளுக்குமிடையிலான தரைவழிப் பாதைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தவேளை கிளிநொச்சியில் ஆசிரியர் பற்றாக்குறை அதிகளவில் காணப்பட்டது.

அந்த வேளைகளில் எவ்வித கொடுப்பனவுகளுமற்ற நிலையில் மாணவர்களது கல்வியைக் கருத்திற்கொண்டு காலத்தின் தேவைகருதி மிகவும் அர்ப்பணிப்புடன் நீண்ட காலமாகத் தொண்டர் ஆசிரியர்களாகச் சேவையாற்றியவர்களே தற்போது ஆசிரியர் நிரந்தர நியமனம் கிடைத்து இப்போதும் அர்ப்பணிப்பாக பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் காணப்படுகின்றார்கள்.

அக்காலப் பகுதியில் கிளிநொச்சிக் கல்வி நிலை முன்னோக்கிச் சென்றதே தவிர பின்னோக்கிச் செல்லவில்லை. வன்னியில் யுத்த காலங்களில் தொண்டர் ஆசிரியர்களாகச் சேவையாற்றியவர்களுக்கென்றொரு தனி வரலாறே உண்டு.

கிளிநொச்சி மாணவர்களுக்கு அர்ப்பணிப்புடன் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்குப் பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தி குழப்புவதற்கான பல்வேறுபட்ட செயற்பாடுகள், பல்வேறு இடங்களில் மிகவும் அடாவடித்தனமான முறையில் இடம்பெற்று வருவதாகக் ஆசிரியர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

Check Also

இலங்கை தமிழரை நாடு கடத்திய அவுஸ்திரேலியா: வெளியான பின்னணி தகவல்

அவுஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளரை அவரது பத்து மாத குழந்தை மற்றும் மனைவியிடம் இருந்து பிரித்து நாடு கடத்திய சம்பவம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *