Breaking News
Home / இலங்கை / தமிழினப் படுகொலையின் பேரவலம் ; தமிழர் தாயகத்தில் நினைவு கூர வேண்டும்

தமிழினப் படுகொலையின் பேரவலம் ; தமிழர் தாயகத்தில் நினைவு கூர வேண்டும்

தமிழர் தாயகம் எங்கும் எதிர்வரும் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் மனித பேரவலத்தை ஒற்றுமையாக நினைவு கூரவேண்டும் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்த் தேசியத்தின் எதிர்காலத்தை இன்றைய இருள்சூழ்ந்த நிலமையில் இருந்து விடிவை நோக்கி மாற்றியமைக்கும் ஆரம்பப் புள்ளியாக முள்ளிவாய்க்கால் மண்மீது உறுதியெடுப்போம் என்றும் மாணவர் ஒன்றியம் கூறியுள்ளது.

தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலை அரங்கேறிய நாளான மே 18 ஆம் திகதியான முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினத்தையொட்டி யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டது.

இதுகுறித்து அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘மானுடத்தின் மதிப்பை பேணிக் காப்பதில் அக்கறை கொண்டவர்களாக நாகரீமாகத் தம்மை அடையாளப் படுத்திக்கொள்ளும் உலக சமூகங்களின் மனச்சாட்சிக் கதவுகளை இறுக்கி மூடி வைத்தபடி,

அவசர அவசரமாக இருபத்தோராம் நூற்றாண்டில் எல்லோர் முன்னிலையிலும் நடந்தேறிய, மறைக்கவும், மறக்கவும் முடியாத, மிகவும் கோரமாக நடாத்தி முடிக்கப்பட்ட தமிழர்களுக்கெதிரான மாபெரும் மனிதப் பேரவலம் தான் மே 18 முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை.

இந்தப் பேரவலத்தை நாம் எல்லோரும் தமிழர்களாக நிமிர்ந்து நின்று, வரலாற்று வழித்தடத்தில் நெறிநின்ற அத்தனை அறவழி முறைகளில் இருந்தும் வழித்தடம் மாறாமல், உலகின் முன்னால் நிமிர்ந்து நின்று நீதி கேட்கும் அத்தனை உரிமைகளும் தமிழர்களாகிய எமக்குண்டு.

நாங்கள் நாங்களாக, தமிழர்களாக இருக்கும் வரையில் தான் எமது இன விடுதலையின் பயணம் வீறுகொண்டெழும், வியாபகம் பெறும்.

இல்லையேல் கால ஓட்டத்தில் வழித்தடம் மாறி, யார் யாரெல்லாம் எம்மை அழிக்க நினைத்தார்களோ அவர்களின் பாதையில் பங்காளிகளாகவும் கூட மாறநேரிடும்.
மே 18 முள்ளிவாய்க்கால் நினைவுதினமென்பது தமிழர்களின் ஒட்டுமொத்த துயரங்களாலும், தோல்விகளாலும் துவண்டுபோகும் நிகழ்வல்ல..!

மாறாக தமிழர்களின் மீளெழுச்சியைக் கட்டியங்கூறி நிற்கும் தார்மீக வடிவமாக, காலம்காலமாய்த் தொடர்ந்துவரும் அத்தனை வரலாற்றின் அடையாளங்களோடும் தமிழ்த் தேசியம் புத்துயிர்பெறுகின்ற பேரெழுச்சி நிகழ்வாக அமையவேண்டும்!

எம் தாய் நிலத்திலாயினும், புலம்பெயர்ந்த தேசங்களலாயினும், தமிழ்த் தேசியம் நோக்கிய வேலைத் திட்டங்களை முன்னெடுக்கும் தமிழர் அமைப்புக்கள் தங்களது செயற்பாடுகளுக்கேற்ப முள்ளிவாய்க்கால் நினைவு தினம் போன்ற தமிழ்த் தேசிய நினைவெழுச்சி நிகழ்வினை அதன் அடையாளங்களில் இருந்தும் வேறுபடுத்துகின்ற பிரத்தியேக நிகழ்வாக ஒருபோதும் கடைப்பிடிக்க முடியாது எனவும்,

ஒன்றாக ஓரிடத்தில் அந்தந்த நாடுகள் தழுவி தமிழர்களின் ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய மக்கள் பேரெழுச்சியாக எழுச்சிகொள்ள வேண்டும் எனும் தமிழ் மக்களின் பார்வையும், அவர்களது அபிலாசையும் புறக்கணிக்கமுடியாத சூழமைவொன்று இன்று மிகவும் வலுப்பெற்றுள்ளது.

இந்த விடயத்தினைப் பெரிதும் கருத்திற்கொண்டு இதுபற்றிய நேரடியான, நேர்மையான, ஆக்கபூர்வமான கலந்தாலோசனைகளோடு, இதனைச் செயற்படுத்த முனையுமாறு தமிழர்களின் விடுதலை நோக்கிய பயணத்தில் தம்மை ஈடுபடுத்தியிருக்கும் அனைத்து அரசியல் மற்றும் பொது அமைப்புக்களிடமும், எம்மினத்தின் எதிர்காலத் தூண்களான இளைய மாணவ சமுதாயம் அன்புரிமையுடன் வேண்டி நிற்கின்றது.

இதில் அனைத்துத் தமிழ் மக்களினதும், தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற தமிழர் அமைப்புக்களினதும் பூரண ஒத்துழைப்பை தமிழ் மாணவர்களாகிய நாம் எதிர்பார்த்து நிற்கின்றோம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Check Also

அகதிகளை ஏற்றுக் கொள்ளத் தயார், ஜேர்மனி அதிரடி அறிவிப்பு..

மத்தியதரைக்கடலில் படகு ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட 450 அகதிகளில் 50 பேரை ஏற்றுக் கொள்ளத் தயார் என ஜேர்மனி அறிவித்துள்ளது. பொறுப்புகளை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *