Breaking News
Home / இலங்கை / தமிழ் படும் அவலத்தை தமிழர் தாயகம் எதிர்கொள்ளும் அடக்குமுறையை யார் ஏற்படுத்தினார்கள்? தாயக மைந்தனின் குமுறல்

தமிழ் படும் அவலத்தை தமிழர் தாயகம் எதிர்கொள்ளும் அடக்குமுறையை யார் ஏற்படுத்தினார்கள்? தாயக மைந்தனின் குமுறல்

சிங்கள பேரினவாத அரசு தமிழரின் தாற்பரியமான தமிழ்த் தேசிய இன விடுதலைப் போராட்டத்தை அடக்குவற்கு கையாண்ட இனவழிப்பு நடவடிக்கையின் உச்சம் தான் முள்ளிவாய்க்கால் இனவழிப்பு என்று தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் குறிப்பிட்டுள்ளார்.

இதுப்பற்றி அவர் வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ,முள்ளிவாய்கால். தாயகனவுடன் சாவினைத் தழுவிய சந்தன மேனிகளை மடி கிடத்தி அமைதித்துயில் கொள்ள தாலாண்டும் யாக பூமி. தியாக பூமி. தமிழினம் வரலாறாய் நிமிர, உயர துஞ்சிடா வீரமும் துவளா மனமும் கொண்ட மக்கள் உதிரம் சிந்திய புண்ணிய பூமி.

முள்ளிவாய்கால் பேரவலத்தை சுமந்தவர்கள் அந்த அவலத்தில் இரத்தமும் சதையுமாக துயர் சுமந்த சாட்சிகள் இன்று மௌனமாக அதேசமயம் வெஞ்சினத்துடனும் வேகும் நெஞ்சுடனும் அவதானித்தபடி இருக்கின்றார்கள்.

மாறாக மே 18 2009 இல் தமிழருக்கு முள்ளிவாய்கால் பேரவலத்தை தந்த அரசுக்கு வாழ்த்தும் ஆசியும் வழங்கி தமிழர்களின் கூக்குரலுக்கு செவிசாய்காது மௌன தவம் செய்த பெருந்தகைகளை முள்ளிவாய்கால் பேரவலத்தை சிரமேற்கொண்டு அனுஸ்டிக்கின்றனர்.

வல்லாதிக்க மேலாதிக்க இனவாத சக்திகளுக்கு எடுபிடிகளாக தமிழினத்தின் உரிமைகளையே மெல்ல மெல்ல தாரைவார்க்க துணிந்து செயற்படும் எவரும் அவர்கள் பாதங்களை முள்ளிவாய்கால் மண்ணில் பதிவதால் அந்த மண் அவமதிக்கப்படுவதாகவே கருதுகின்றேன். அதை அந்த புனித மண்ணும் ஏற்றுக்கொள்ளாது என்பது வெளிப்படை.

போர் முடிந்ததாகக் கூறப்படும் காலம் ஒரு தகாப்தத்தை அண்மிக்கும் வேளையில் அன்று முள்ளிவாய்க்காலில் மக்கள் அழிந்து கொண்டிருக்க அரசுக்கு கொடிபிடித்துவிட்டு இன்று நினைவுநாளை அனுஸ்டிக்க அவர்களின் துயரத்தில் பங்குகொள்ள உரிமைகோரி மக்களை ஒற்றுமையாக அணிதிரளச் சொல்லும் சில தமிழ் அரசியல் தலைமைகளின் மனங்களை நினைக்கும் போது வியப்பாக உள்ளது.

அவர் வேண்டாம் இவர் வேண்டாம் என்று முள்ளிவாய்க்கால் மண் எவரையும் ஒதுக்கப்போவது இல்லை எல்லோரும் ஒற்றுமையாக எவ்விதபேதமின்றி முள்ளிவாய்க்கால் மண்ணில் ஒன்று கூடுவோம்.

அம்மண்ணில் கால்பதித்து எமது இனத்தின் உரிமைக்காக உயிர்கொடுத்தவர்களை மனதில் நிறுத்தி பிராத்திப்போம். இம் மண்ணில் கால்பதித்து பிரார்த்திக்கும் அதே நேரம் எம்மையும் மனதால் சுயபரிசோதனை செய்து கொள்வோம்.

அமுதிலும் இனிய தமிழ் படும் அவலத்தை தமிழர் தாயகம் எதிர்கொள்ளும் அடக்குமுறையை தமிழ் மக்கள் அனுபவிக்கும் அச்சுறுதல்களை எமது தனிநபர் சுயநல அரசியல் அனுகூலங்களை அபிலாசைகளை எட்டுவதற்காக பயன்படுத்தினோமா?

நாங்கள் முள்ளிவாய்க்கால் பேரவலம் நடைபெறும் போது மௌனமாக இருந்து விட்டு வாழ்த்துச் சொல்லி விட்டு தியாகமும் வீரமும் விதையுண்டிருக்கும் முள்ளிவாய்க்கால் புனித பூமியில் கால் பதிக்க எமக்கு எந்த வகையிலும் அருகதையுள்ளதா என்பதையும் அந்த ஒரு கணம் நாம் அனைவரும் எண்ணிப்பார்ப்போம்.

அரசியலை தமிழ்மக்களின் உதிரத்தாலும் கண்ணீராலும் உர மூட்ட முயலகூடாது. அவ்வாறு நாம் நடந்தால் வரலாறு எம்மை மன்னிக்க போவதுமில்லை.

இன்னமும் இனவெறி ஆட்சியாளர்களை ஆராதிப்பவர்களாக இருந்து கொண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவு நாள் மூலம் தம்மை தமிழ் தேசியவாதிகளாக வேடப்படுத்தி நிற்பவர்கள் யார் என்பதை முள்ளிவாய்கால் மண்ணில் தடம் பதிக்கும் நேரத்தில் கூட அவர்களாகவே உணராது விடினும் இந்த மக்களும் காலமும் நிச்சயம் அவர்களை அடையாளப்படுத்திக் கொள்ளும்.

முள்ளிவாய்கால் இனவழிப்பில் தம் உயிர்களை இழந்த அனைத்து உறவுகளையும் நினைவுகூர்ந்து ஒரு கணம் தலைசாய்து பூச்சொரிந்து அவர் தம் காலடியில் வணங்குகின்றேன் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் தனது மே 18 நினைவேந்தல் செய்தியில் ஆராதித்துள்ளார்.

வாழ்க தமிழ். வளர்க தமிழ்தேசம்
வெல்க தமிழர் விடுதலை இலட்சியம்

Check Also

விடுதலைப்புலிகள் மீளெழுச்சி? யாழில் இடம்பெற்றுவரும் தொடர் விசாரணை!

தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து விஐயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பில் கொழும்பில் இருந்து வருகை தந்திருந்த திட்டமிட்ட குற்றங்களைத் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *