Header Ads

Header Ads

பேரம் பேசிய ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் கொலையாளிகள்?

அடையாள அணிவகுப்பில் எம்மை அடையாளம் காட்டாது விட்டால் 5 இலட்சம் ரூபாய் பணம் வழங்குவோம் என ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை வழக்கின் சந்தேக நபர்கள் கூறியதாக நீதிவானின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.
ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் குறித்த வழக்கு நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன் போது குறித்த வழக்கின் சாட்சியமாக உள்ள வாய் பேச முடியாத சிறுவன் தம்மை அடையாளம் காட்டாது விட்டால் அந்த சிறுவனின் குடும்பத்திற்கு ஐந்து இலட்ச ரூபாய் பணம் தருவோம் என சந்தேக நபர்கள் கூறியதாக சட்டத்தரணி ஊடாக நீதிவானின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
குறித்த சிறுவனின் உறவு முறையை சேர்ந்த ஒருவர் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளார். அதனை அறிந்த சந்தேக நபர்கள் சிறுவனின் உறவு காரருடன் பேரம் பேசியுள்ளனர்.
குறித்த உறவுக்காரர் அதனை சிறுவனின் தாயாருக்கு தெரியப்படுத்தி உள்ளார். அதனை அடுத்து நேற்று திங்கட்கிழமை குறித்த விடயம் சட்டத்தரணி ஊடாக நீதிவானின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
அதனை அடுத்து பேரம் பேசப்பட்ட சிறுவனின் உறவுகாரிடம் காவல்துறையினர் வாக்கு மூலத்தை பதிவு செய்து அது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறு நீதிவான் உத்தரவு இட்டார்.

No comments:

Powered by Blogger.