Header Ads

Header Ads

வளம் தரும் வைகாசி மாத ராசி பலன்கள்

மேஷம்
காசு பணத்தைவிட நட்புக்கு அதிக முக்கியத்துவம் தரும் நீங்கள் கடந்த காலத்தை விட வருங்காலத்தைப் பற்றி அதிகம் யோசிப்பீர்கள். உங்கள் ராசிக்கு சுக்கிரன் இந்த மாதம் முழுக்க சாதகமாக இருப்பதால் உறவினர்கள், விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும்.
உங்கள் ராசியை விட்டு சூரியன் விலகியதால் கடந்த ஒருமாத காலமாக இருந்து வந்த சளித் தொந்தரவு, காய்ச்சல், முதுகு வலி போன்றவையெல்லாம் நீங்கும். அழகு கூடும். ஆனால், சூரியன் 2ல் நுழைந்திருப்பதால் பேச்சில் கடுமை வேண்டாம்.
முன்கோபத்தை குறைப்பது நல்லது. மனைவியுடன் சின்னச்சின்ன கருத்து மோதல்கள் வந்துப் போகும். அஷ்டமத்துச் சனி நடைபெறுவதால் அவ்வப்போது உடன்பிறந்தவர்களுடன் சச்சரவுகளும், அவர்களால் செலவுகளும் வந்துப் போகும்.
25ம் தேதி வரை செவ்வாய் 2ல் நிற்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாத செலவினங்கள் இருந்து கொண்டேயிருக்கும். ஆனால் 26ம் தேதி முதல் செவ்வாய் 3ம் வீட்டில் அமர்வதால் நிலைமைகளை சமாளிக்கும் சக்தி உண்டாகும். பிரச்னைகளிலிருந்து விடுபடுவதற்கான வழி வகைகள் கிடைக்கும்.
புதன் இந்த மாதம் முழுக்க சாதகமாக இருப்பதால் நட்பு வட்டம் விரியும். வி.ஐ.பிகள் வீட்டு விஷேங்களில் கலந்து கொள்வீர்கள். அயல் நாடு செல்ல விசா கிடைக்கும். குரு உங்களுடைய ராசிக்கு 6ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் சேமிப்புகள் கரையும். குடும்பத்திலும் வீண் விவாதங்களெல்லாம் வரும். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. சாதாரண விஷயத்திற்கெல்லாம் சண்டை வர வாய்ப்பிருக்கிறது.
மனைவியாக இருந்தாலும், மகனாக இருந்தாலும் இந்த நேரத்தில் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாமல் இடைவெளி விட்டுப் பேசுவது, பழகுவது நல்லது. மாணவர்களே! நீண்ட நாட்களாக பார்க்க வேண்டுமென்று நினைத்திருந்த இடத்திற்கு சென்று வருவீர்கள். எதிர்பார்த்த கல்விப் பிரிவில் போராடி சேர வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் வெற்றி உண்டு. புதியவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.
அரசியல்வாதிகளே! வெற்றி உண்டு. எதிர்க்கட்சிக்காரர்களை சமயோஜிதமாகப் பேசி திணறடிப்பீர்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். மாதத்தின் பிற்பகுதியில் லாபம் அதிகரிக்கும்.
புதிய வாடிக்கையாளர்களும் வருவார்கள். புது ஒப்பந்தங்களும் கூடி வரும். அஷ்டமத்துச்சனி நடைபெறுவதால் பங்குதாரர்களுடன் மோதல்கள் வெடிக்கும். அவர்களை அனுசரித்துப் போங்கள். கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். கட்டுமானப் பொருட்கள், ரியல் எஸ்டேட், மருந்து வகைகளால் லாபம் அதிகரிக்கும்.
உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகமானாலும் சமாளிக்கும் சக்தி உண்டாகும். சக ஊழியர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். கலைத்துறையினரே! புதிய வாய்ப்புகள் வரும். சம்பள பாக்கி கைக்கு வரும்.
விவசாயிகளே! மரப்பயிர், தோட்டப் பயிர் மூலமாக லாபமடைவீர்கள். சாமர்த்தியமாக காய் நகர்த்த வேண்டிய மாதமிது.
ராசியான தேதிகள்: மே 15, 16, 17,18,19, 26, 27, 28, 29 மற்றும் ஜூன் 3, 4, 5, 6, 13,14
சந்திராஷ்டமம்: ஜூன் 7ம் தேதி மாலை 6.15 மணி முதல் 8, 9ம் தேதி வரை.
பரிகாரம்: கும்பகோணத்திற்கு அருகேயுள்ள திருபுவனம் ஆலயத்திலுள்ள சரபேஸ்வரரை தரிசித்து வணங்கி வாருங்கள். பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள்.
ரிஷபம்
ரசிப்புத் தன்மை அதிகம் கொண்ட நீங்கள் ஏதேனும் ஒரு வகையில் சாதிக்க வேண்டுமென நினைப்பீர்கள். தவறுகளை பிறர்சுட்டிக் காட்டினால் தயங்காமல் திருத்திக் கொள்வீர்கள். குரு சாதகமாக இருப்பதால் சவாலான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். தடைகளையும் தாண்டி முன்னேறுவீர்கள்.
சிலருக்கு பரிசு, பாராட்டுகள் கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் இந்த மாதம் முழுக்க சாதகமாக இருப்பதால் திடீர் பணவரவு உண்டு. கண்டகச் சனி நடைபெறுவதால் பணப்பற்றாக்குறை குறையும். பழைய கடன் பிரச்னையை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். மற்றவர்களுக்காக ஜாமீன், கேரண்டர் கையொப்பமிடாதீர்கள்.
25ம் தேதி வரை செவ்வாய் ராசிக்குள் நீடிப்பதால் வேகமாக சில முக்கிய காரியங்களை முடிப்பீர்கள். 26ம் தேதி முதல் செவ்வாயின் போக்கு சரியில்லாததால் சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு பேசுவீர்கள். மற்றவர்களிடம் குடும்ப அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
உங்களின் தன, பூர்வ புண்யாதிபதியான புதன் சாதகமாக இருப்பதால் எதிர்பாராத பணவரவு உண்டு. தடைபட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். பிள்ளைகளின் உயர்கல்வி எதிர்பார்த்த கல்விப் பிரிவில் நல்ல நிறுவனத்தில் சேர்ப்பீர்கள். அவர்கள் எதிர்பார்த்தபடி அரசு பொதுத் தேர்வில் மதிப்பெண் வரும். அவர்களால் அந்தஸ்து ஒருபடி உயரும். மாணவர்களே! வேற்று மதத்தவர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள்.
போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். கன்னிப் பெண்களே! வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுவீர்கள். உயர்கல்வியில் முன்னேறுவீர்கள்.
அரசியல்வாதிகளே! மக்கள் மத்தியில் புகழடைவீர்கள். பெரிய பொறுப்புகள், பதவிகள் கூடி வரும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். சந்தை நிலவரத்திற்கேற்ப புதுத் தொழில் தொடங்கும் அமைப்பு உண்டாகும். புது ஏஜென்சியும் வந்தமையும். அடிக்கடி விவாதம் செய்து கொண்டிருக்கும், உங்கள் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடும் பங்குதாரர்களை நீங்குவீர்கள். புதிய பங்குதாரரை சேர்ப்பீர்கள். உணவு, மருந்து, வாகன வகைகளால் லாபம் அதிகரிக்கும்.
உத்யோகத்தில் மேலதிகாரி உங்களுக்கு சாதகமாக இருக்கிறாரா, பாதகமாக இருக்கிறாரா என்று உணர்ந்துக் கொள்ள முடியாமல் போகும். யார் எப்படி இருந்தாலும் நம்முடைய கடமையை சரிவர செய்துவிடுவோம் என்ற மனப்பான்மையில் நீங்கள் கடினமாக உழைப்பீர்கள். நேர்மூத்த அதிகாரியை விட, மேல்மட்ட அதிகாரி ஆதரவாக இருப்பார். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த இடமாற்றம் இப்போது கிடைக்கும்.
கலைத்துறையினரே! தடைப்பட்டிருந்த உங்களுடைய படைப்புகள் வெளியாகும். ரசிகர்கள் கூட்டம் அதிகரிக்கும். விவசாயிகளே! தண்ணீர் பற்றாக்குறையை நீக்க புது வழி கிடைக்கும். மரப்பயிர்களால் லாபமடைவீர்கள். இடைவிடாத உழைப்பாலும், சமயோஜித புத்தியாலும் சவால்களை சமாளிக்க வேண்டிய மாதமிது.
ராசியான தேதிகள்: மே 21, 22, 23, 28, 29, 30, 31 மற்றும் ஜூன் 2, 4, 5, 6, 8, 9.
சந்திராஷ்டமம்: ஜூன் 10, 11, 12ம் தேதி மாலை 5 மணி வரை.
பரிகாரம்: திருநெல்வேலி நெல்லையப்பரை தரிசித்து வணங்கி வாருங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவி செய்யுங்கள்.
மிதுனம்
வெள்ளை உள்ளமும், விடாப்பிடியான செயல்திறனும் கொண்ட நீங்கள், எப்போதும் கலகலப்பாக இருப்பவர்கள். பூர்வ புண்யாதிபதியான சுக்கிரனும், ராசிநாதனான புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள்.
கடந்த இரண்டு மாதங்களாக உங்களுக்கு சாதகமாக இருந்த சூரியன் இந்த மாதம் முழுக்க உங்கள் ராசிக்கு 12ல் அமர்வதால் பயணங்கள் அதிகமாகும். தவிர்க்க முடியாத செலவுகளும் கூடிக்கொண்டே போகும். சனிபகவான் உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். ஆனால், சின்னச் சின்ன பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும். 25ம் தேதி வரை செவ்வாய் 12ல் மறைந்திருப்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும்.
பணம் வந்தாலும் சேமிக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். சகோதர, சகோதரிகளால் அலைச்சல் இருக்கும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். உடல்நலத்தில் கவனம் தேவை. தினந்தோறும் நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. குரு 4ல் நிற்பதால் நிம்மதி இல்லாமல் இருப்பீர்கள். மன உளைச்சலுக்கு உள்ளாவீர்கள்.
எந்த நேரத்தில் எந்தப் பிரச்னை வருமோ என்றெல்லாம் அச்சப்படுவீர்கள். ராகு 3ல் அமர்ந்திருப்பதால் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். சவால்கள், விவாதங்களிலெல்லாம் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி உண்டாகும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். நகரின் எல்லையை ஒட்டியிருக்கும் பகுதியிலேயே நிலம், வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்.
மாணவர்களே! ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள். எண்ணெயில் பொாித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. போராடி உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள்.
கன்னிப் பெண்களே! பெற்றோருடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். காதல் விவகாரத்தில் தெளிவான முடிவுக்கு வருவீர்கள். அரசியல்வாதிகளே! கட்சி நிர்வாகிகள் உங்களை மதிக்கத் தொடங்குவார்கள். கோஷ்டிப் பூசலிலிருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கு தேவையான உதவிகள் கிடைக்கும். வெளிமாநிலம், அயல்நாட்டிலிருப்பவர்களால் ஆதாயம் உண்டு. புதிய பங்குதாரர்கள் கிடைப்பார்கள். வேலையாட்களால் இருந்து வந்த பிரச்னைகள் ஓயும்.
நல்ல அனுபவமிக்க வேலையாட்கள் அமைவார்கள். கன்ஸ்ட்ரக்ஷன், எலக்ட்ரிக்கல், வாகன வகை களால் லாபம் அதிகரிக்கும். அரசாங்கத்தால் இருந்த கெடுபிடிகள் குறையும். உத்யோகத்தில் உங்களுக்கு எதிராக பழி சுமத்தியவர்கள், எதிராக வேலைப் பார்த்தவர்கள் பலவீனமடைவார்கள். மேலதிகாரியுடன் நெருக்கமாவீர்கள். சக ஊழியர்களும் மதிக்கத் தொடங்குவார்கள்.
கலைத்துறையினரே! கன்னடம், மலையாளம் பேசுபவர்களால் நன்மை உண்டு. இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். விவசாயிகளே! பூச்சி, எலித் தொல்லை குறையும். கரும்பு, சவுக்கு லாபம் தரும். புதிய பாதையில் பயணிக்கும் மாதமிது.
ராசியான தேதிகள்: மே 15, 21, 22, 23, 24, 30, 31 மற்றும் ஜூன் 1, 2, 3, 8, 9, 10, 11.
சந்திராஷ்டமம்: மே16ம் தேதி காலை 9.35மணி முதல் 17,18ம் தேதி மாலை 6.15 மணி வரை மற்றும் ஜூன் 12ம் தேதி மாலை 5 மணி முதல் 13,14ம் தேதி வரை.
பரிகாரம்: திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாளை தரிசித்து வாருங்கள். ஏழை மாணவனின் கல்விக்கு உதவுங்கள்.
கடகம்
எப்பொழுதும் கலகலப்பாக சிரித்துப் பேசி அனைவரையும் சிந்திக்க வைக்கும் நீங்கள், சொன்ன சொல்லை தவற மாட்டீர்கள். இந்த மாதம் முழுக்க சூரியன் லாப வீட்டில் வலுவாக நிற்பதால் அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. யோகா, தியானம் மற்றும் ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.
சுக்கிரன் உங்களுடைய ராசிக்கு சாதகமான வீடுகளில் செல்வதால் பிரச்னைகளை சமாளிக்கும் சக்தி கிடைக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் வந்து சேரும். மனைவி வழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். தெலுங்கு, ஹிந்தி பேசுபவர்கள் மூலமாக ஆதாயமடைவீர்கள். ஒரு சொத்தை விற்று மற்றொரு சொத்து வாங்கும் அமைப்பு உண்டாகும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும்.
26ம் தேதி முதல் உங்களுடைய ராசிக்கு 12ல் செவ்வாய் வந்தமர்வதால் பிள்ளையார் பிடிக்க குரங்கான கதையாக நீங்கள் ஒன்று நினைக்க சில விஷயங்கள் வேறுவிதமாகப் போய் முடியும். நீங்கள் சாதாரணமாகப் பேசுவதைக் கூட சிலர் வேறு விதமாகப் புரிந்து கொள்வார்கள். சகோதரங்களுடன் மனக்கசப்பு வந்து நீங்கும்.
குருபகவான் 3ல் நிற்பதால் எந்த ஒரு காரியத்தை தொட்டாலும் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். மனதில் ஒருவித அலுப்பு, சலிப்பு வந்து நீங்கும். புதன் சாதகமாக இருப்பதால் ஷேர் மூலமாக பணம் வரும். குடும்ப வருமானம் உயரும். தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உங்களுடைய கருத்துகளை எல்லோரும் ஆதரிப்பார்கள். மாணவர்களே! தேர்வில் வெற்றி பெறுவீர்கள்.
ஒரே கல்வி நிறுவனம், கல்வி பிரிவை நம்பி இருக்காமல் இரண்டு, மூன்று கல்விப் பிரிவு, கல்லூரிகளில் உயர்கல்விக்காக நீங்கள் விண்ணப்பிப்பது நல்லது. கடைசி நேரத்தில் எதிர்பார்த்த பாடப் பிரிவில் சேர வாய்ப்பிருக்கிறது.
கன்னிப் பெண்களே! அடி வயிற்றிலிருந்த வலி குறையும். பழைய நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். காதல் விவகாரத்தில் தள்ளியிருங்கள். அரசியல்வாதிகளே! அடித்தட்டு மக்களுடன் நெருங்கிப் பழகுங்கள். கோஷ்டிப் பூசல் தலைதூக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள். உணவு, துணி, கட்டுமானப் பொருட்கள், ரியல் எஸ்டேட் வகை
களால் லாபமடைவீர்கள். கடையை விரிவுபடுத்தி, அழகுபடுத்துவீர்கள். பங்குதாரரை மாற்றுவீர்கள். வேலையாட்களால் இருந்த பிரச்னைகள் குறையும்.
அரசாங்க கெடுபிடிகள் நீங்கும். ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளால் வியாபாரத்தில் ஆதாயம் உண்டாகும். உத்யோகத்தில் வேலைச்சுமை ஒருபக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் செல்வாக்கு அதிகரிக்கும். உயரதிகாரிகள் உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சக ஊழியர்களிடையே நிலவி வந்த அதிருப்தி விலகும். இடமாற்றம் விரும்பியபடி கிடைக்கும். சிலருக்கு வேற்றுமாநிலம் தொடர்புள்ள நிறுவனத்தில் புது வாய்ப்புகள் கிடைக்கும்.
விவசாயிகளே! விவசாயத்தை மட்டுமே நம்பிக் கொண்டிருக்காமல் வேறு தொழில் தொடங்க முயற்சிகள் மேற்கொள்வீர்கள். செங்கல், மர வகைகளால் லாபம் உண்டாகும். கலைத்துறையினரே! தள்ளிப் போன பட வாய்ப்புகள் வரும். பழைய கலைஞர்கள் உங்களை பாராட்டுவார்கள். எதிர்பார்த்தவைகளில் சில நிறைவேறும் மாதமிது.
ராசியான தேதிகள்: மே 15, 16, 17, 23, 24, 25 மற்றும் ஜூன் 1, 2, 3, 4, 5, 10, 11, 12.
சந்திராஷ்டமம்: மே 18ம் தேதி மாலை 6.16 மணி முதல் 19, 20ம் தேதி வரை.
பரிகாரம்: தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலில் அமைந்துள்ள வாராஹி அம்மனை தரிசித்து வணங்கி வாருங்கள்.
சிம்மம்
தும்பைப் பூப்போல சிரிப்பும், துடிப்பான செயல்திறனும் கொண்ட நீங்கள், நம்பி வந்தவர்களை ஒருபோதும் கைவிட மாட்டீர்கள். கடந்த இரண்டு மாத காலமாக உங்களுக்கு தொல்லை கொடுத்து வந்த சூரியன் இப்போது 10ம் வீட்டில் நுழைந்திருக்கிறார். உறவினர், நண்பர்கள் மத்தியில் இருந்து வந்த அவப்பெயர் நீங்கும்.
தாழ்வுமனப்பான்மை விலகும். தன்னம்பிக்கை அதிகமாகும். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். எதிர்பார்த்திருந்த தொகை வரும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்குகள் சாதகமாகும். இளைய சகோதரர் உதவிகரமாக இருப்பார். சுக்கிரன் 31ந் தேதி முதல் 9ம் வீட்டில் நுழைவதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வாகனப் பழுது நீங்கும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும்.
வங்கியில் லோன் கிடைக்கும். மூத்த சகோதர வகையில் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கி அவர்களால் ஆதாயமடைவீர்கள். குரு 2ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் எதிலும் வெற்றி கிட்டும். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். கணவன் மனைவி மனம் விட்டு பேசி சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
பல மாதங்களால் அரைக்குறையாக பாதியிலேயே நின்ற வேலைகள் முடிவடையும். உங்களை தவறாகப் புரிந்து கொண்டு பேசாமலிருந்த உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். 26ம் தேதி முதல் செவ்வாய் லாப வீட்டில் அமர்வதால் பிரச்னைகளை சமாளிக்கும் சக்தி கிடைக்கும். சகோதரங்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். சொத்துப் பிரச்னை தீரும். குழப்பமான மனநிலையிலிருந்து விடுபட்டு தெள்ளத் தெளிவாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
முதிர்ச்சியான, அறிவுப் பூர்வமான பேச்சால் அனைவரின் இதயத்திலும் இடம் பிடிப்பீர்கள். நீங்கள் மிகவும் பக்குவப்பட்டு விட்டதாக சிலர் பாராட்டுவார்கள். எதிர்பார்த்த தொகையும் கைக்கு வரும். மாணவர்களே! நீங்கள் எதிர்பார்த்த பாடப்பிரிவு உங்களுக்கு கிடைக்கும். புகழ் பெற்ற நிறுவனத்தில் சேர்ந்து உயர்கல்வி தொடரும் வாய்ப்பு உண்டாகும்.
கன்னிப் பெண்களே! உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வாழ்க்கைத் துணை அமையும். திருமணம் கூடி வரும். பெற்றோரின் உங்களின் புது முயற்சிகளை ஆதரிப்பார்கள். அரசியல்வாதிகளே! எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். வாடகை இடத்திலிருந்து சொந்த இடத்திற்கு சிலர் கடையை மாற்றுவீர்கள். பங்குதாரர்கள் பணிவார்கள்.
உங்களுடைய புதிய திட்டங்களை ஆதரிப்பார்கள். வேலையாட்கள் உங்களுடைய அருமையை தெரிந்து கொள்வார்கள். பொறுப்பாக வேலையை கவனிப்பார்கள். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதனை அறிந்து அதற்கேற்ப சில மாற்று ஏற்பாடுகள் செய்வீர்கள். உத்யோகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வுஎல்லாம் இப்போது கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
மூத்த அதிகாரி உங்களுக்கு முக்கியத்துவம் தருவார். சிலருக்கு அதிக சம்பளத்துடன் கூடிய நல்ல வேலையும் கிடைக்கும். சக ஊழியர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். உங்களின் படைப்புகள் வெற்றிகரமாக பேசப்படும். விவசாயிகளே! மகசூல் பெருகும். தண்ணீர் வசதி கிட்டும். ஊரில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். வித்தியாசமான அணுகுமுறையால் வெற்றி பெறும் மாதமிது.
ராசியான தேதிகள் : மே 16, 17, 18, 19, 27, 28, 29 மற்றும் ஜூன் 4, 5, 6, 7, 13, 14.
சந்திராஷ்டமம்: மே 21, 22ம் தேதி வரை.
பரிகாரம்: திருவள்ளூர் வீரராகவப் பெருமாளை தரிசித்து வாருங்கள். அன்னதானம் செய்யுங்கள்.
கன்னி
பேதம் பார்க்காமல்எல்லோரிடமும் சமமாகப் பழகும் நீங்கள், மறப்போம் மன்னிப்போம் என்ற கொள்கையுடையவர்கள். சூரியன் 9ல் நுழைந்திருப்பதால் தந்தையாரின் ஆரோக்யம் பாதிக்கும். அவருடன் வீண் விவாதங்களெல்லாம் வந்துபோகும். உங்கள் யோகாதிபதியான சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் பணவரவு அதிகரிக்கும்.
மகனின் எதிர்காலத்தை நினைத்து வருந்துவீர்கள். 26ம் தேதி முதல் செவ்வாய் 10ல் நிற்பதால் குழந்தை பாக்யம் கிட்டும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் பொறுப்பற்ற போக்கு மாறும். நகரை ஒட்டி வீடு, மனை வாங்குவீர்கள். சகோதர, சகோதரிகள் பக்கபலமாக இருப்பார்கள். ஜென்ம குரு தொடர்வதால் உடல் உஷ்ணம் அதிகமாகும். வாயுக் கோளாறால் நெஞ்சு வலிக்கும். ஆனால், பெரிய பாதிப்புகள் இருக்காது.
சட்டத்திற்கு புறம்பான வகையில் எந்த உதவியும், யாரிடமிருந்து வந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டாம். ஆனால், கேது 6ல் நிற்பதால் தடைகளெல்லாம் விலகும். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். வாழ்க்கையின் சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள்.
வழக்கில் வெற்றி பெறுவீர்கள். ஷேர் மூலமாக பணம் வரும். உங்களிடம் பணம் வாங்கி ஏமாற்றியவர்களெல்லாம் பணத்தை வட்டியுடன் திருப்பித் தருவார்கள். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். மாணவர்களே! அலைந்து, கொஞ்சம் சிரமப்பட்டு விரும்பிய பாடப்பிரிவில் சேருவீர்கள்.
கூடாப்பழக்க வழக்கமுள்ளவர்களின் நட்பை விட்டு விலகுங்கள். கன்னிப் பெண்களே! முகப்பரு, அலர்ஜி நீங்கும். அழகு கூடும். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். நீங்கள் எல்லோரிடமும் சகஜமாகப் பேசுவதை சிலர் தவறாகப் புரிந்து கொள்வார்கள். அரசியல்வாதிகளே! தலைமைக்கு நெருக்கமானவருடன் மோதல் வரும்.
கோஷ்டி பூசலாலும் உங்கள் பெயர் கெடும். வியாபாரம் ஓரளவு சூடுபிடிக்கும். பற்று வரவும் உயரும். வேலையாட்களை நினைத்து வருத்தப் படுவீர்கள். பொறுப்பான, அமைதியான வேலையாள் நமக்கு அமையவில்லையே என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். வாடகை இடத்தில் கடையை வைத்திருப்பவர்களுக்கு கடை உரிமையாளரால் தொல்லை அதிகரிக்கும். வாடகை அதிகப்படுத்தப்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது.
கமிஷன், ஸ்டேஷனரி, துணி வகைகளால் ஆதாயமடைவீர்கள். உத்யோகத்தில் கூடுதலாக வேலை பார்க்க வேண்டி வரும். அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். சக ஊழியர்களிடம் மூத்த அதிகாரிகளைப் பற்றி எதுவும் சொல்லி வைக்காதீர்கள். செய்யாத தவறை உங்கள் மீது சுமத்த முயற்சிப்பார்கள். கவனமாக இருங்கள்.
விவசாயிகளே! வாய்க்கால் தகராறு, வரப்பு தகராறு எல்லாம் வேண்டாம். அக்கம்பக்கம் நிலத்துக்காரருடன் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. கலைத்துறையினரே! யதார்த்தமான படைப்புகளை தரப்பாருங்கள். பழைய கலைஞர்கள் உதவுவார்கள். ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாக இருந்து சாதிக்கும் மாதமிது.
ராசியான தேதிகள்: மே 15, 20, 21, 22, 28, 29, 30, 31 மற்றும் ஜூன் 1, 8, 9, 10, 11
சந்திராஷ்டமம்: மே 23, 24, 25ம் தேதி காலை 8.15 மணி வரை.
பரிகாரம்: கும்பகோணம் அய்யாவாடியில் அருளும் பிரத்யங்கரா தேவியை தரிசித்து வாருங்கள். கோயில் உழவாரப்பணியில் கலந்து கொண்டு உதவுங்கள்.
துலாம்
மென்மையும், விட்டுக் கொடுக்கும் மனமும், எல்லோருக்கும் உதவும் குணமும் கொண்ட நீங்கள், மற்றவர்களை அனுசரித்துப் போகக் கூடியவர்கள். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 6ல் மறைந்திருப்பதால் அதுவரை அலைச்சலும், பணப்பற்றாக்குறையும், கணவன் மனைவிக்குள் கருத்து மோதல்களும், சந்தேகத்தால் பிரிவுகளும் ஏற்படக்கூடும்.
சிறுசிறு வாகன விபத்துகள், வாகனம் பழுதாகுதல் போன்றவை நிகழும். ஆனால், 31ம் தேதி முதல் சுக்கிரன் 7ம் வீட்டில் வந்தமர்ந்து உங்கள் ராசியை பார்க்க இருப்பதால் தடைப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். சூரியன் 8ம் வீட்டில் இந்த மாதம் முழுக்க மறைந்து காணப்படுவதால் ஓய்வெடுக்க முடியாதபடி உங்களுக்கு அடுத்தடுத்து வேலைகள் இருக்கும்.
26ம் தேதி முதல் உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் செவ்வாய் நிற்பதால் தந்தையாருடன் மனத்தாங்கல் வரும். 12ல் குரு நிற்பதால் பயணங்கள் அதிகமாகிக் கொண்டே போகும். தவிர்க்க முடியாத செலவுகளால் திணறுவீர்கள். அவ்வப்போது பழைய கடனை நினைத்து பயம் வந்துபோகும். கடைசி நேரத்தில் உதவிகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
மற்றவர்களை குறைகூறிக் கொண்டிருக்காமல் உங்களுடைய பலம் எது, பலவீனம் எது என்பதனை அறிந்து அதற்கேற்ப செயல்படுவது நல்லது. புகழ் பெற்ற புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். 27ம் தேதி முதல் உங்களுடைய ராசிக்கு 8ம் வீட்டில் புதன் மறைந்திருப்பதால் நண்பர்கள், உறவினர்களால் செலவினங்கள் இருக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். அயல்நாட்டிலிருப்பவர்களும் உதவுவார்கள்.
மாணவர்களே! நல்லவர்களின் நட்பு கிடைக்கும். கூடாப்பழக்க வழக்கங்களிலிருந்து விடுபடுவீர்கள். படிப்பில் ஆரம்பத்திலிருந்தே கவனம் செலுத்துங்கள். அலட்சியமாக இருக்காதீர்கள். கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் வெற்றி உண்டு. நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று புது வேலையில் அமரும் அமைப்பு உண்டாகும்.
அரசியல்வாதிகளே! எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். தலைமையுடனான மோதல் நீங்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். பழைய பாக்கிகளும் வசூலாகும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிணக்குகள் நீங்கும். வேலையாட்கள் நிலைமையைப் புரிந்து கொண்டு உங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள். புது முதலீடுகள் செய்யலாம். கடையை விரிவுபடுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
வாகன உதிரி பாகங்கள், எலக்ட்ரானிக்ஸ், கெமிக்கல், மருந்து வகைகளால் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிகாரிகளுடன் இருந்த கருத்து மோதல்கள் நீங்கும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். மற்றொரு பக்கம் உங்களுடைய செல்வாக்கு அதிகரிக்கும். சிலருக்கு புது உத்யோக வாய்ப்புகளும் கூடி வரும்.
சிலருக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும். கலைத்துறையினரே! உங்களின் படைப்புத் திறன் வளரும். பழைய நிறுவனத்திலிருந்து புது வாய்ப்புகள் வரும். விவசாயிகளே! மாற்றுப் பயிர், மரப் பயிர் வகைகளால் லாபமடைவீர்கள். புதிதாக ஆழ்குழாய் அமைப்பீர்கள். ஈகோவாலும், உணர்ச்சிகரமான முடிவுகளாலும் சில வாய்ப்புகளை இழக்கும் மாதமிது.
ராசியான தேதிகள்: மே 15, 16, 17, 21, 22, 23, 24, 29, 30, 31 மற்றும் ஜூன் 1, 2, 4, 8, 9, 11, 14.
சந்திராஷ்டமம்: மே 25ம் தேதி காலை 8.16 மணி முதல் 26, 27ம் தேதி காலை 10.30 மணி வரை.
பரிகாரம்: திருவேற்காடு தேவி கருமாரியம்மனை தரிசித்து வாருங்கள். சாலைப்பணியாளர்களுக்கு நீர் மோர் கொடுங்கள்.
விருச்சிகம்
எளிமையான வாழ்க்கையும், வெகுளித்தனமான பேச்சும் கொண்ட நீங்கள், மனசாட்சிக்கு மதிப்பளித்து நடப்பவர்கள். உங்களுடைய ராசிக்கு 5ம் வீட்டில் சுக்கிரன் நிற்பதால் மனைவி வழியில் உதவிகள் உண்டு. மனைவி உங்களுடைய புதிய திட்டங்களை ஆதரிப்பார். ஆனால், 31ம் தேதி முதல் சுக்கிரன் 6ம் வீட்டில் சென்று மறைவதால் மனைவிக்கு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும்.
அவருடன் கருத்து மோதல்களும் வரும். உங்களுடைய ராசிக்கு 7ம் வீட்டில் சூரியன் அமர்ந்திருப்பதால் இந்த மாதம் முழுக்க குடும்பத்தில் நீங்கள் அனுசரித்துப் போக வேண்டிய சூழ்நிலை உருவாகும். 26ம் தேதி முதல் செவ்வாய் 8ல் தொடர்வதால் மனஇறுக்கமும், எதிர்காலம் பற்றிய பயமும், எந்த காரியத்தை தொட்டாலும் தாமதமாக முடியும் போக்கும் உண்டாகும். சகோதரங்களால் அலைச்சல் இருக்கும்.
முழுமையாக யாரையுமே நம்ப முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். கணவன் மனைவிக்குள் ஈகோ பிரச்னையால் சண்டைகள் வந்து நீங்கும். ராசிக்கு லாப ஸ்தானத்திலேயே இந்த மாதம் வரை குரு நீடிப்பதால் எதிர்பார்த்து ஏமார்ந்த தொகை கைக்கு வரும். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும்.
மூத்த சகோதரங்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். சிலருக்கு ஷேர் மூலமாகவும் பணவரவு அதிகரிக்கும். சமூகத்தில் பெரியபதவியில் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகளால் செல்வாக்கு உயரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். அவருக்கும் நல்ல வாழ்க்கைத்துணை அமையும். மாணவர்களே! ஏழரைச் சனி இருப்பதால் தொடக்கத்திலிருந்தே படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள்.
பெற்றோரின் ஆலோசனையை ஏற்றுக் கொள்வது நல்லது. கன்னிப் பெண்களே! புதிய நண்பர்களால் உற்சாகமடைவீர்கள். உயர்கல்வியில் வெற்றி உண்டு. வேலை கிடைக்கும். அரசியல்வாதிகளே! மக்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். புதிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
எதிர்கட்சிக்காரர்களிடம் இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகும். வியாபாரத்தில் இந்த மாதம் கொஞ்சம் போராட்டமாக இருக்கும். புது முதலீடுகள் வியாபாரத்தில் செய்ய வேண்டாம். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. அவர்களிடம் வியாபார ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். உத்யோகத்தில் இந்த மாதம் முழுக்க அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகமாக இருக்கும். ஆனால், சக ஊழியர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.
உத்யோகத்தில் இடமாற்றம் உண்டு. அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். சிலருக்கு அயல்நாடு தொடர்புடைய அலுவலகத்தில் வேலை கிடைக்கும். பழைய சம்பள பாக்கி கைக்கு வரும். கலைத்துறையினரே! தள்ளிப் போன வாய்ப்புகள் கூடி வரும். ஆனால் உங்களை யாரும் புரிந்துக் கொள்ளவில்லையென்று வருத்தப்படுவீர்கள்.
திறமையில்லாதவர்களுக்கெல்லாம் வாய்ப்புகள் கிடைக்கிறது. நமக்கில்லையே என ஆதங்கப்படுவீர்கள். விவசாயிகளே! ஏழரைச் சனி தொடர்வதால் விளைச்சல் மந்தமாக இருக்கும். தண்ணீர் பற்றாக்குறை, எலி, பூச்சித் தொல்லை வந்து நீங்கும். சகிப்புத் தன்மையும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் தேவைப்படும் மாதமிது.
ராசியான தேதிகள்: மே 16, 17, 18, 23, 24, 25 மற்றும் ஜூன் 1, 2, 3, 4, 5, 13, 14.
சந்திராஷ்டமம்: மே 27ம் தேதி காலை 10.31 மணி முதல் 28, 29ம் தேதி மதியம் 1.15 மணி வரை.
பரிகாரம்: உங்கள் வீட்டிற்கு அருகேயுள்ள ஷீர்டி பாபா கோயிலுக்குச் சென்று வாருங்கள். தந்தையிழந்த குழந்தைக்கு உதவுங்கள்.
தனுசு
எங்கும் எதிலும் முதலிடம் பிடிக்க நினைக்கும் நீங்கள், யாருக்காகவும் எதற்காகவும் தனது கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். கடந்த ஒருமாத காலமாக உங்கள் ராசிக்கு 5ல் அமர்ந்து கொண்டு பிள்ளைகளுடன் பிரச்னைகளை தந்து இடைவெளியை உருவாக்கிய சூரியன் இந்த மாதம் முழுக்க 6ம் வீட்டில் அமர்வதால் பிள்ளைகளுடன் இருந்து வந்த கருத்து மோதல் நீங்கும்.
மகளுக்கு நல்ல வரன் அமையும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாகும். இந்த மாதம் முழுக்க சாதகமான வீடுகளில் சுக்கிரன் செல்வதால் வீடு வாங்கும் யோகம் உண்டாகும். வீடு கட்டுவதும் நல்ல விதத்தில் முடியும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். ஆனால் 27ம் தேதி முதல் புதன் 6ம் வீட்டில் மறைவதால் செலவுகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறுவீர்கள்.
உறவினர், நண்பர்களுடன் கருத்து மோதல்கள், சலசலப்புகள் உண்டாகும். அதிக உரிமை எடுத்துக் கொண்டு யாரிடமும் பேசவோ, பழகவோ வேண்டாம். நெருக்கமானவர்களிடமும் இடைவெளியை பின்பற்றுவது நல்லது. பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது. பூர்வீகச் சொத்துப் பிரச்னை தலைதூக்கும்.
கேது 3ல் தொடர்வதால் உங்கள் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். சொந்த பந்தங்களில் நல்ல மனசு உள்ளவர்களை சேர்த்துக் கொள்வீர்கள். கோயில் விசேஷங்களில் முதல் மரியாதை கிடைக்கும். அண்டை மாநில புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். எதிர்ப்புகள் விலகும். 25ம் தேதி வரை செவ்வாய் 6ல் நிற்பதால் தைரியமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். சகோதரங்கள் பாசமாக நடந்துக் கொள்வார்கள்.
மாணவர்களே! சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். படிப்பில் முன்னேறுவீர்கள். தொடக்கத்திலிருந்தே வகுப்பாசிரியரின் அன்பை பெறப் பாருங்கள். கன்னிப் பெண்களே! பள்ளிக் கல்லூரி கால தோழியை சந்திப்பீர்கள். பெற்றோர் உங்களின் புதிய திட்டங்களை ஆதரிப்பார்கள்.
அரசியல்வாதிகளே! பொதுக்கூட்டம், போராட்டங்களில் முன்னிலை வகிப்பீர்கள். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் வீழ்வார்கள். வியாபாரம் செழிக்கும். அதிரடி லாபம் உண்டு. வாடிக்கையாளர்களை கவர புதிய சலுகைகளை அறிவிப்பீர்கள். ரியல் எஸ்டேட், மணல், செங்கல், எலக்ட்ரிக்கல்ஸ் வகைகளால் லாபமடைவீர்கள். கார் வாங்கி விற்கும் தொழிலும் ஆதாயத்தைத் தரும். புதிய பங்குதாரரை சேர்ப்பீர்கள். கடையை சொந்த இடத்திற்கு மாற்றுவீர்கள். புகழ்பெற்ற நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் செய்வீர்கள்.
உத்யோகத்தில் குரு 10ல் தொடர்வதால் உயரதிகாரிகள் பாரபட்சமாக நடந்து கொள்வார்கள். கூடுதல் நேரம் ஒதுக்கி நீங்கள் உழைத்தப் போதும் அதற்கு எவ்வித பாராட்டும் இல்லாமல் போகும். உங்களை விட வயதில் குறைந்தவர்கள், படிப்பில், தகுதியில் குறைந்தவர்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள்.
கலைத்துறையினரே! பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவிற்கு பிரபலமாவீர்கள். உங்களுடைய புதிய சிந்தனைகள் எல்லோராலும் பாராட்டப்படும். விவசாயிகளே! நிலத்தில் நீர் மட்டம் பெருகும். புதிதாக நிலம் கிரயம் செய்யுமளவிற்கு வருமானம் உயரும். எண்ணெய் வித்துப் பயிர்களால் ஆதாயமடைவீர்கள். போராட்டத்தில் வெற்றி பெறும் மாதமிது.
ராசியான தேதிகள்: மே 17, 18, 19, 20, 27, 28 மற்றும் ஜூன் 4, 5, 6, 7, 14.
சந்திராஷ்டமம்: மே 29ம் தேதி மதியம் 1.16 மணி முதல் 30,31ம் தேதி மாலை 5.15மணி வரை.
பரிகாரம்: கும்பகோணம் சுவாமிமலையில் அருள்பாலிக்கும் சுவாமிநாத சுவாமியை தரிசித்து வாருங்கள். கோயில் கும்பாபிஷேகத்திற்கு இயன்றளவு உதவுங்கள்.
மகரம்
மற்றவர்களின் மனநிலையை துல்லியமாகக் கணிக்கும் நீங்கள், நிறை, குறைகள் இருந்தாலும் சுற்றத்தாரை அனுசரித்து வாழக் கூடியவர்கள். உங்கள் ராசிக்கு யோகாதிபதியான சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த வேலைகள் நல்ல விதத்தில் முடியும்.
வி.ஐ.பிகள் உங்களுக்கு ஆதரவாக இருந்து உங்களுடைய பழைய பிரச்னைகளை தீர்ப்பதற்கு உறுதுணையாக இருப்பார்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். நல்ல காற்றோட்டம், தண்ணீர் வசதியுள்ள வீட்டிற்கு மாறுவீர்கள். சொத்துகளில் இருந்த வில்லங்கம் விலகும். சூரியன் 5ம் வீட்டில் நுழைந்திருப்பதால் பிள்ளைகளால் அலைச்சல், செலவினங்கள் அதிகமாகும். அவர்களுடைய திருமணம், படிப்பு, உத்யோகம் சம்பந்தப்பட்ட கவலைகள் வந்து போகும்.
அரசாங்கத்தால் சிறுசிறு இடையூறுகள் வரும். கனவுத் தொல்லை அதிகமாகும். கண் எரிச்சல், பித்தத்தால் லேசாக தலைச்சுற்றல் வந்துநீங்கும். ஆனால், இந்த மாதம் முழுக்க புதன் சாதகமான வீடுகளில் சென்று கொண்டிருப்பதால் வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். கண்டும், காணாமல் சென்று கொண்டிருந்த உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள்.
மகனுடன் இருந்துவந்த மனக்கசப்பு நீங்கும். மகனுக்கு நல்ல வரன் அமையும். புது வீடு கட்டுவதற்கு எம்.எம்.டி.ஏ., சி.எம்.டி.ஏ அப்ரூவல் கிடைக்கும். குருபகவான் சாதகமாக இருப்பதால் எல்லாப் பிரச்னைகளையும் சமாளிக்கும் மனதைரியம் கிடைக்கும். வி.ஐ.பிகளும் உதவியாக இருப்பார்கள். சில காரியங்கள் இழுபறியாக இருந்தாலும் குருவின் திருவருள் இருப்பதால் கடைசி நேரத்தில் நல்ல விதத்தில் முடிவடையும்.
உருட்டி, புரட்டி பணத் தட்டுப்பாட்டை சமாளிப்பீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். பிள்ளைகளால் மதிப்பும், மரியாதையும் கூடும். மாணவர்களே! ஆரம்பத்திலிருந்தே படிப்பில் அக்கறை காட்டுங்கள். கோபத்தைக் குறையுங்கள். சின்னச் சின்ன உடற்பயிற்சி செய்வது நல்லது. கன்னிப் பெண்களே! உற்சாகமாக காணப்படுவீர்கள்.
நல்லவர்களின் நட்பு கிடைக்கும். கூடாப்பழக்க வழக்கமுள்ளவர்களை விட்டுப் பிரிவீர்கள். அரசியல்வாதிகளே! சிலர் உங்கள் பெயரை தவறாகப் பயன்படுத்தி தலைமையிடம் நெருங்க விடாமல் தடுப்பார்கள். கோஷ்டிப் பூசலில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் இந்த மாதத்தில் கணிசமாக லாபம் கூடும். புதிய வாடிக்கையாளர்களை இழுக்க புது திட்டங்கள் தீட்டுவீர்கள். பழைய வாடிக்கையாளர்களால் உற்சாகமடைவீர்கள்.
உணவு, கமிஷன், புரோக்கரேஜ், ஏற்றுமதி இறக்குமதி வகைகளால் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். உங்களிடம் ஆலோசனைக் கேட்டு விட்டு அதை தாங்கள் யோசித்ததாக மூத்த அதிகாரிகளிடம் சிலர் நல்ல பெயர் வாங்கிக் கொள்வார்கள். உங்கள் திறமைகளை நேரடியாக மூத்த அதிகாரிகளிடம் சிலர் கொண்டு செல்ல மறுப்பார்கள்.
வேலைச்சுமை இருக்கும். சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னைகள் வந்து போகும். கலைத்துறையினரே! கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்று கலங்கி நிற்பீர்கள். இளைய கலைஞர்கள் மூலமாக ஆதாயமடைவீர்கள். விவசாயிகளே! பூச்சித் தொல்லையாலும், தண்ணீர் பற்றாக்குறையாலும் மகசூல் குறையும். நினைத்ததை நிறைவேற்றிக் காட்டும் மாதமிது.
ராசியான தேதிகள்: மே 20, 21, 22, 23, 24, 28, 29, 30 மற்றும் ஜூன் 6, 8, 9.
சந்திராஷ்டமம்: மே 31ம் தேதி மாலை 5.16 மணி முதல் ஜூன் 1, 2ம் தேதி வரை.
பரிகாரம்: சங்கரன்கோவில் கோமதி அம்பிகையை தரிசித்து வாருங்கள். முதியோர் இல்லங்களுக்குச் சென்று முடிந்தளவு உதவுங்கள்.
கும்பம்
பிறர் மதிக்கும்படி நடந்து கொள்ளும் நீங்கள், பணம் காசைவிட குணத்திற்கு முக்கியத்துவம் தருபவர்கள். சூரியன் 4ம் வீட்டில் நுழைந்திருப்பதால் தடைபட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். மனக் குழப்பங்கள், தடுமாற்றங்கள் நீங்கும். 26ம் தேதி முதல் செவ்வாய் 5ல் அமர்வதால் கர்ப்பிணிப் பெண்கள் நெடுந்தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. சகோதர வகையில் வார்த்தைப்போர் இருக்கும்.
மனைவிவழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். உங்கள் ராசிநாதனான சனிபகவான் வலுவாக 10ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பெரிய சவால்களில் வெற்றி பெறுவீர்கள். உங்களுடைய தனித்திறனும், ஆளுமைத் திறனும், நிர்வாகத் திறனும் இனிமேல் அதிகரிக்கத் தொடங்கும். சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் மகிழ்ச்சி, பணவரவு உண்டு. தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
உங்களின் புதிய திட்டத்திற்கு மனைவியின் ஆதரவு கிடைக்கும். மனைவி வழி உறவினர்களும் உதவியாக இருப்பார்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். கோபம் குறையும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றி புதிதாய் வாங்குவீர்கள். பெற்றோருடனான மனத்தாங்கல் விலகும்.
அக்கம் பக்கம் வீட்டாருடன் இருந்து வந்த சண்டை, சச்சரவு குறையும். குரு 8ல் மறைந்திருப்பதால் சேமிக்க முடியாதபடி செலவினங்கள் இருக்கும். திடீரென்று அறிமுகமாகுபவர்களை வீட்டிற்கு அழைத்து வரவேண்டாம். புதியவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். புது முதலீடுகள் செய்வதற்கு முன்பாக யோசித்து முடிவெடுப்பது நல்லது. மாணவர்களே! நட்பு வட்டம் விரியும்.
கணிதப் பாடத்தில் தொடக்கத்திலிருந்தே கவனம் செலுத்தப் பாருங்கள். கன்னிப் பெண்களே! தோலில் இருந்த நமைச்சல், அலர்ஜி நீங்கும். அழகும் கூடும். உயர்கல்வியிலும் வெற்றி பெறுவீர்கள். தோழிகளுடன் இருந்த மோதல்கள் விலகும். அரசியல்வாதிகளே! கோபத்தை கட்டுப்படுத்துங்கள்.
மேலிடம் உங்களை கண்காணிக்கும். கவனமாக இருங்கள். மேலிடத்திற்கு நெருக்கமான ஒருவர் உங்களுக்கு அறிமுகமாவார். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். சந்தை நிலவரத்தை அறிந்து அதற்கேற்ப புது முதலீடுகள் செய்வீர்கள். வேலையாட்களின் ஆதரவு கிட்டும். பங்குதாரர்கள் உங்களை கலந்தாலோசித்து முடிவுகள் எடுப்பார்கள். கட்டுமானப் பொருட்கள், மின்னணு, மின்சார வகைகளால் லாபம் அதிகரிக்கும்.
அரசுப் பதவியில் இருக்கும் அதிகாரி உங்களுக்கு வியாபாரத்தை விரிவுபடுத்த உதவிகரமாக இருப்பார். உத்யோகத்தில் இந்த நேரம் என்னாகுமோ, வேலையில் நீடிப்போமோ, நீடிக்க மாட்டோமோ என்ற ஒரு அச்சம் இருக்கும். தேவைப்பட்டால் உங்களுடைய முழு புத்திசாலித்தனத்தை பயன்படுத்துங்கள்.
இல்லாவிட்டால் அடக்கமாக, அமைதியாக இருந்து விடுங்கள். சில நேரங்களில் மௌனமாக இருப்பது நல்லது. கலைத்துறையினரே! காலதாமதமாக இருந்து வந்த விஷயங்களெல்லாம் நல்ல விதத்தில் முடியும். சம்பள பாக்கி கைக்கு வரும். விவசாயிகளே! மகசூலை அதிகப்படுத்த செயற்கை உரங்களை தவிர்த்து இயற்கை உரங்களை பயன்படுத்தப் பாருங்கள். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிட்டும் மாதமிது.
ராசியான தேதிகள்: மே 15, 20, 21, 22, 23, 24, 29, 30, 31 மற்றும் ஜூன் 1, 2, 8, 9, 10, 11.
சந்திராஷ்டமம்: ஜூன் 3, 4, 5ம் தேதி காலை 7.37 மணி வரை.
பரிகாரம்: காரைக்குடியில் அருள்பாலிக்கும் கொப்புடைய நாயகி அம்மனை தரிசித்து வாருங்கள். முதியோர்களுக்கு குடையும், செருப்பும் வாங்கிக் கொடுங்கள்.
மீனம்
தொலைநோக்குச் சிந்தனையும் மற்றவர்களுக்கு தொந்தரவு தராத குணமும் கொண்ட நீங்கள், சில இடங்களில் மௌனமாக இருந்து சாதிப்பவர்கள். கடந்த ஒருமாத காலமாக உங்களுடைய ராசிக்கு 2ம் வீட்டிலேயே அமர்ந்து உங்களுக்கு பணத்தட்டுபாட்டையும், கண் எரிச்சல், காது வலியை கொடுத்து வந்த சூரியன் இப்போது 3ம் வீட்டில் இந்த மாதம் முழுக்க அமர்வதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
சனிபகவான் உங்கள் ராசிக்கு 9ல் நிற்பதால் எதிலும் நிம்மதி, தெளிவு பிறக்கும். தைரியமும் உண்டாகும். மரியாதை கூடும். உறவினர்களுடன் இருந்து வந்த கருத்து மோதல்களும் நீங்கும். உடல்நிலை சீராகும். பெரிய நோய் இருப்பதைப்போன்ற பிரமை விலகும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் அமைதி நிலவும். உடல் ஆரோக்யம் சீராகும்.
வாகனத்தை சரி செய்வீர்கள். சிலர் புதியது வாங்குவீர்கள். ஓரளவு பணப்புழக்கம் அதிகரிக்கும். அசதி, சோர்வு நீங்கும். வீடு கட்ட லோன் கிடைக்கும். பிளான் அப்ரூவலாகும். குருபகவான் 7ம் வீட்டில் தொடர்வதால் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பழைய பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வழக்குகளை சுமுகமாகப் பேசி முடிக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
உங்களுக்காக பிரபலங்கள் எல்லா வகையிலும் உதவுவதற்கு முன் வருவார்கள். குழந்தை பாக்யமும் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மரியாதை கூடும். நட்பு வட்டமும் விரிவடையும். கணவன் மனைவிக்குள் இருக்கும் கருத்து மோதல்கள் குறையும். ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசி நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு நல்ல வரன் அமையும்.
மாணவர்களே! படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் உங்களுடைய பொதுஅறிவை வளர்த்துக் கொள்வீர்கள். கன்னிப் பெண்களே! உங்களுக்கிருந்த தாழ்வுமனப்பான்மை குறையும். காதல் விவகாரத்தை தள்ளிவிட்டு உயர்கல்வியில் கவனம் செலுத்துவீர்கள். பெற்றோரின் அனுபவ வார்த்தைகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
அரசியல்வாதிகளே! ஆதாரமின்றி எதிர்கட்சியினரை தாக்கிப் பேசவேண்டாம். உங்களுக்கு எதிராக கோஷ்டிப் பூசலில் ஈடுபட்டவர்கள் தலைமையால் தண்டிக்கப்படுவார்கள். வியாபாரத்தில் கடந்த மாதத்தை விட இந்த மாதத்தில் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். பழைய சரக்குகளும் விற்றுத் தீரும். மருந்து, பெட்ரோகெமிக்கல், ஸ்டேஷனரி, கமிஷன், புரோக்கரேஜ் வகைகளால் லாபம் அதிகரிக்கும்.
வேலையாட்களால் நிம்மதி குறையும். பங்குதாரர்களும் உங்களை புரிந்து கொள்ளாமல் பேசுவார்கள். கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் பாரபட்சமாக நடந்து கொள்வார்கள். கூடுதல் நேரம் ஒதுக்கி நீங்கள் உழைத்தபோதும் அதற்கு எவ்வித பாராட்டும் இல்லாமல் போகும்.
உங்களைவிட வயதில் குறைந்தவர்கள், படிப்பில், தகுதியில் குறைந்தவர்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். அதைக் கண்டு ஆதங்கப்படுவீர்கள். கலைத்துறையினரே! தள்ளிப்போன வாய்ப்புகள் இப்போது மீண்டும் தொடங்கும். உங்களுடைய கலைத்திறன் வளரும். விவசாயிகளே! இரவு, விடியற்காலை நேரத்தில் நிலத்திற்கு செல்லும் போது கவனமாக இருங்கள். ஆளுமைத் திறன் அதிகரிக்கும் மாதமிது.
ராசியான தேதிகள்: மே 15, 16, 17, 26, 28, 29 மற்றும் ஜூன் 1, 2, 3, 4, 10, 11, 12, 13, 14.
சந்திராஷ்டமம்: ஜூன் 5ம் தேதி காலை 7.38 மணி முதல் 6, 7ம் தேதி மாலை 6.15 மணி வரை.
பரிகாரம்: மதுரைக்கு அருகேயுள்ள திருமோகூர் சக்கரத்தாழ்வாரை தரிசித்து வணங்கி வாருங்கள். ரத்ததானம் செய்யுங்கள்.
- Dina Karan

No comments:

Powered by Blogger.