இந்தியாவிற்கு சென்று பிரபாகரன் ராஜீவ் காந்தியைக் கொன்று விட்டு வந்தார் - சபையில் சர்ச்சை
இந்தியாவிற்கு சென்று பிரபாகரன் ராஜீவ் காந்தியைக் கொன்று விட்டு வந்தார் என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இன்றைய தினம் பாராளுமன்றத்தில் நிதியமைச்சரின் கருத்துக்கு பதில் கூறுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.
மேலும் தொடர்ந்த அவர்,
மகிந்த ராஜபக்ச பதவி ஏற்றதில் இருந்து, நாட்டில் தொடர்ந்து வந்த 30 வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கே பிரதான முக்கியத்துவம் கொடுத்து வந்தார்.
பிரபாகரன் நாட்டை அழித்துக் கொண்டு வந்தார். அவர் தலைமையிலான விடுதலைப்புலிகள் நாட்டை அச்சத்தில் ஆழ்த்தியிருந்தனர்.
இவற்றிற்கு முடிவு கட்டுவதிலேயே மகிந்த குறியாக இருந்தார். அதன் படி யுத்தத்தையும் நிறைவுக்கு கொண்டு வந்தார். இதன் காரணமாக நாட்டின் அபிவிருத்தியில் கவனம் செலுத்தவில்லை.
அது மட்டுமல்லாமல், விடுதலைப்புலிகள் விமான நிலையங்களை குண்டு வைத்து அழித்தனர். பிரபாகரன் இந்தியாவிற்கு சென்று ராஜீவ் காந்தியை கொன்று விட்டு வந்தார்.
இப்படியான ஓர் நிலை இலங்கையில் காணப்பட்டபோது எப்படி சர்வேச முதலீட்டாளர்கள் இலங்கை வருவார்கள். முதலீட்டாளர்கள் எவரும் இலங்கை வரவில்லை. அனைவரும் பயத்தில் இருந்தார்கள். அதனால் யுத்த நிறைவே முக்கிய தேவையாக இருந்தது.
ஆனாலும் யுத்தம் நிறைவடைந்த பின்னர், யுத்த காலகட்டத்திலும் மகிந்த நாட்டின் அபிவிருத்திக்காக பல சேவைகளைச் செய்து வந்துள்ளார் எனவும் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இதேவேளை பந்துலவின் குறித்த கருத்துகளால் அமைச்சர் கபீர் ஹாசிம் எதிர்க்கருத்துகளைத் தெரிவிக்க, பைத்தியக்காரத்தனமான கருத்துகளை வெளியிட வேண்டாம் தெரிந்தவற்றை மட்டும் பேசுங்கள் என பந்துல ஆவேசமாக தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து சபையில் அமைதியற்ற நிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments: