Header Ads

Header Ads

பிரபாகரன் படை எங்கே போனது? காரணம் இன்றி யாழில் குவிக்கப்பட்ட இராணுவம்!

நாட்டில் இனவாதம் முற்றாக அழிக்கப்பட்டு விட்டது. நல்லிணக்க நாடாக இலங்கையை மாற்றுவோம் என்பதே இப்போதைய அரசின் குறிக்கோளாக காணப்படுகின்றது.
என்றாலும் உண்மையில் இன்று இலங்கை நல்லிணக்கத்திற்காக பாடு படுகின்றதா? இனவாதமும் தமிழர் அடக்கு முறைகளும் முற்றாக ஒடுக்கப்பட்டு விட்டதா என்ற கேள்விகள் மீண்டும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
ஆட்சி மாற்றம் பெற்ற பின்பும் இன்றும் பழைய கதையே தொடர்வதாகவும், ஆரம்பகாலத்தில் தமிழ்மக்கள் மீது காணப்பட்ட வெளிப்படையான அடக்குமுறையும், வெறுப்புணர்வும் தற்போது அவை மறைமுகமாக தொடர்வதாகவும் கூறப்படுகின்றது.
இந்த விடயங்கள் அண்மைக்கால வடக்கு அவதானிப்பு தெளிவு படுத்துவதாக குறிப்பிடப்படுகின்றது. ஏற்கனவே கார்த்திகை 27 இனைக் குழப்புவதற்காக பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன என்பது அறிந்த விடயம்.
அப்போது அடுத்தடுத்து வடக்கில் பல பிரச்சினைகள் தொடர்ந்தன. குறிப்பாக ஆவா என்று ஓர் குழு உள்ளே வந்து வடக்கில் பல அட்டூழியங்கள் செய்து கொண்டு வந்தன.
அதனால் வடக்கு மக்கள் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வாழ்ந்து வந்தனர். அதனைத் தொடர்ந்து பல கைதுகள் இடம்பெற்றதோடு வடக்கில் தீவிரவாதம் தலை தூக்குவதாகவும், பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு விட்டதாகவும் பல அரசியல் வாதிகள் கருத்து வெளியிட்டனர்.
காலப்போக்கில் அதற்கு என்னவாயிற்கு என்றும் தெரியவில்லை. ஆனாலும் இந்த விடயம் சற்று அடங்கிப்போனதற்கு ஓர் காரணம் ஆவாவிற்கும் முன்னாள் இராணுவத்திற்கும் தொடர்புகள் உண்டு என செய்திகள் வெளிவந்த பின்னரே என்பதும் சுட்டிக்காட்டப்படத்தக்கது.
அதனையும் தாண்டி பிரபாகரன் படை என ஒன்றும் உருவாக்கப்பட்டு அதன் மூலம் அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டது. இதனால் மீண்டும் வடக்கு பாதுகாப்பு தொடர்பில் பல கதைகள் பேசப்பட்டன.
பின்னர் இவை அனைத்துமே திட்டமிட்ட செயல்கள் என்ற கோணத்தில் செய்திகள் வெளிவர ஆரம்பிக்கவே அனைத்தும் அப்படியே அடங்கிப்போனது.
ஆனாலும் ஆவாவின் பின்னணி என்ன? பிரபாகரன் படை எங்கிருந்து வந்தது? எங்கே போனது? என்பது தொடர்பில் உண்மைத்தன்மைகள் வெளிப்படுத்தப்படவில்லை.
அதன் பின்னர் தொடர்ந்தும் வடக்கில் இராணுவம் நிலைநிறுத்தப் பட பலவகையான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன என்பது அறிந்த விடயமே.
எனினும் இவை அனைத்தும், இந்தத் திட்டங்களை வகுத்தவர்களுக்கு ஏமாற்றத்தை தருவதாக அமைந்து போனது என்பது வெளிப்படையாக தெரிந்த விடயமாக மாறிப்போனது.
அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விலும் பல குழப்பங்கள் ஏற்படுத்த முயற்சிகள் வகுக்கப்பட்டன. அதில் முக்கியமானதாக தனிச் சிங்களக் கொடிகள், சிலரால் வடக்கில் பறக்கவிடப்பட்டன.
மேலும் கிளிநொச்சி நகரில் தென்னிலங்கையில் இருந்து சென்றவர்களால் இராணுவத்தினருக்கு வாழ்த்துக் கூறி கோஷங்களும் எழுப்பப்பட்டன.
இந்தச் செயற்பாடுகள் மூலம் தமிழ் மக்களுக்கு ஆத்திரம் உண்டாக்கி அதன் மூலம் பதற்றத்தை தோற்றுவித்து விட முடியும் என்று எதிர்பார்த்து செய்யப்பட்ட சூழ்ச்சிகள் என்றே கூறப்பட்டது.
என்றாலும் அவையும் தோல்வியைத் தருவதாகவே அமைந்தது. அதனைத் தொடர்ந்து பொலிஸாரின் பாதுகாப்பு வண்டியின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இந்த சம்பவம் வடக்கினை பதற்றப்பிரதேசமாக சித்தரித்தரித்ததோடு கணக்கற்ற இராணுவ வீரர்கள் யாழில் குவிக்கப்பட்டிருந்தனர்.
எனினும் யார் துப்பாக்கிச் சூடு நடத்தியது? ஏன் நடத்தப்பட்டது? என்ற விடயம் எதுவும் இது வரை கண்டு பிடிக்கப்படவில்லை தெரிவிக்கப்படவும் இல்லை. திடீரென்று இவ்வாறானதோர் பதற்ற நிலை ஏன் உருவாகியது? என்பதும் வெளிப்படையில்லை.
நிலைமை இவ்வாறு இருக்க காரணமே இன்றி குவிக்கப்பட்ட பொலிஸாரும், இராணுவத்தினரும் காரணம் கண்டு பிடிக்கப்பட முன்னரே மீண்டும் கலைந்து சென்று விட்டனர்.
முக்கியமாக வடக்கில் பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை, பொலிஸார் வண்டிகள் மீது துப்பாக்கிச் சுடுகள் நாட்டில் பல்வேறு இடங்களிலும் நடைபெறும் ஒன்று என்று அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையிலும் ஓர் யுத்த பீதியை ஏற்படுத்துவது போன்று இராணுவம் வடக்கிற்கு படையெடுத்து சென்ற விடயம் வேடிக்கையானதோர் விடயமே.
இவ்வாறாக ஆரம்பத்தில் இருந்து சம்பவங்களை தொகுத்து நோக்கும் போது இதுவும் தென்னிலங்கையில் இருந்து திட்டமிட்டு வகுக்கப்பட்டதோர் திட்டம் என்றே தென்னிலங்கை அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த துப்பாக்கி பிரயோகத்தினால் யாழில் மீண்டும் ஓர் யுத்தம் ஏற்பட்டதைப் போன்று ஓர் தோற்றம் உருவாக்கப்பட்டது. அதனால் பொலிஸாரும், இராணுவமும் குவிக்கப்பட்டனர்.
என்றாலும் இவற்றினால் எந்த வித சலனமும் அடையாமல் பிரதமர் வடக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளார். வடக்கில் அமைதியற்ற தன்மை காணப்படுகின்றது என்பது அறிந்தும் கூட பிரதமர் வடக்கிற்கு சாதாரண விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.
இந்த விடயமானது வடக்கில் பாதுகாப்புக்கு உண்மையில் எந்தவித அச்சுறுத்தல் இல்லை என்பதனை நேரடியாக காட்டுவதாக கூறப்படுகின்றது.
ஆனால் ஏன் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றன? இதற்கு காரணம் யார்? அரசா இல்லை அரசிற்கு எதிரானவர்களா? யாராக இருந்தாலும் இவை அனைத்தும் அரசிற்கும் தெரிந்து நடக்கும் செயல் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இவை ஒரு புறமிருக்க அடங்கிப்போயிருந்த இனவாதம் மீண்டும் தலைதூக்கி விட்டது, மேலும் வடக்கு பாதுகாப்பு தொடர்பில் சமீப காலத்தில் பல்வேறு கருத்துகளும் வந்து சேருகின்ற சமயம்..,
வடக்கில் புதிய விகாரைகள் அமைக்கப்படுகின்றது, கிழக்கில் பௌத்த ஆதிக்கம் நேர்த்தியாக நடைபெற்று கொண்டு வருகின்றது.
ஆக மொத்தம் இவை அனைத்தும் இன்றும் வடக்கு கிழக்கு தமிழர்கள் அடக்கப்படுவதனையும், இலங்கையில் இனவாதம் முற்றாக முற்று பெற வில்லை என்பதை காட்டுவதாகவும்.,
வடக்கு கிழக்கை முற்று முழுதாக இராணுவக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பௌத்த மயமாக்குவதற்குமான செயற்பாடுகளே திட்டமிட்டு செய்யப்பட்டுக் கொண்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.

No comments:

Powered by Blogger.