பிரித்தானியாவில் தீவிரவாத அச்சுறுத்தல்: தயாராக இருக்கும் படி மருத்துவனைகளுக்கு கடிதம்
பிரித்தானியாவின் மான்செஸ்டரில் நடந்த தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, நாட்டில் தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால், ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் பொதுமக்களுக்கு சிகிச்சை மேற்கொள்வதற்கு தயாராக இருக்கும் படி அந்நாட்டில் உள்ள மருத்துவமனைகளுக்கு கடிதம் அனுப்பபட்டுள்ளது.
பிரித்தானியாவின் மான்செஸ்டர் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலால் தற்போது வரை 22-பேர் பலியாகியுள்ளனர். 23-பேர் மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 18-பெரியவர்கள் மற்றும் 5-குழந்தைகள் அடங்குவர்.
இந்நிலையில் பிரித்தானியாவின் தேசிய சுகாதாரத் துறை(NHS) நாட்டில் உள்ள 27-முக்கிய மருத்துவமனைகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
அதில் மான்செஸ்டரில் நடந்த தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, மீண்டும் தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்பு இருப்பதாக புலனாய்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இதனால் நாட்டின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிட்டால் உடனடியாக பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான அனைத்து உபகரணங்கள் மற்றும் மருந்துகள் போன்றவைகளை தயார்நிலையில் வைத்துக்கொள்ளும் படி கூறியுள்ளது.
அதுமட்டுமின்றி மருத்துவமனைகளில் உள்ள அனைவரும் கட்டாயம் தங்களுடைய ஐடி கார்டை அணிந்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் மான்செஸ்டரில் நடந்த தீவிரவாத தாக்குதலால் பாதிப்பிற்குள்ளான மக்களை எலிசபெத் மகாராணி மருத்துவமனை சென்று நலம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments: