எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் அணு ஆயுத சோதனை நடத்தப்படலாம் - மிரட்டும் வடகொரியா
‘‘எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் அணு ஆயுத சோதனை நடத்தப்படலாம்’’ என அமெரிக்காவை மிரட்டும் விதமாக வடகொரியா எச்சரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும், அமெரிக்கா, ஐநாவின் பொருளாதார தடையை மீறியும் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை, அணு ஆயுத சோதனையை நடத்தி வருகிறது.
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்ற பிறகு, இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. தென் கொரியா மற்றும் ஜப்பானுடன் கூட்டு போர்ப் பயிற்சி என்ற பெயரில் அமெரிக்கா தனது போர் கப்பல்களை கொரிய பிராந்திய கடல் பகுதியில் நிலை நிறுத்தி உள்ளது.
இது வடகொரியாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. வடகொரியா மீதான ராணுவ நடவடிக்கைக்கு அதிக வாய்ப்பியிருப்பதாக அமெரிக்கா மிரட்டி வருகிறது. இதற்கு பதிலடி தரும் வரும் வடகொரியாவும் அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகள் நடத்தி தனது ராணுவ பலத்தை காட்டி வருவதால் போர் மூளும் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில், வடகொரியா 6வது முறையாக அணு ஆயுத சோதனை நடத்த இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘அமெரிக்கா தனது விரோத கொள்கையை நிறுத்திக் கொள்ளும் வரை, வடகொரியா தனது அணு ஆயுத பலத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும்.
அமெரிக்காவின் எந்த நடவடிக்கைக்கும் பதிலடி தர நாங்கள் தயார் நிலையில் இருக்கிறோம். எங்கள் தலைமை உத்தரவிடும் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் 6வது அணு ஆயுத சோதனை நடத்த தயாராக இருக்கிறோம்’’ என கூறி உள்ளார்.
No comments: