Header Ads

Header Ads

இணையதள வன்முறைகள் ஆண்களை விட பெண்களுக்கு 27 மடங்கு அதிகமாக நடக்கிறது.

சமூக வலைத்தளங்களின் அசுர வளர்ச்சிப் பசிக்கு குடும்ப பெண்களும் தப்பவில்லை. இத்தகைய இணையதள வன்முறைகள் ஆண்களை விட பெண்களுக்கு 27 மடங்கு அதிகமாக நடக்கிறது.
சமூக வலைத்தளங்கள் தவிர்க்கமுடியாத அங்கமாக சமூகத்துடன் இணைந்துவிட்டன. கணினி வழியாக பரிமாறிக்கொள்ளப்பட்டு வந்த தகவல்கள் கையடக்க கைப்பேசிக்குள் சுலபமாக புகுந்துவிட்டன. அவற்றுள் எவை அவசியமானவை? எவை அவசியமற்றவை? என்பதை வகைப்படுத்தி பிரித்து பார்க்கும் சிந்தனைத் தெளிவு இல்லாமல் அனைத்து தகவல்களையும் பார்வையிடும் நிர்பந்தத்திற்கு பெரும்பாலானவர்கள் உள்ளாகிவிட்டார்கள். அடுத்தவர்கள் அனுப்பும் தகவல்களை அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் சமூக வலைத்தளத்திலேயே மூழ்கி கிடப்பவர்கள் அதிகரித்துவிட்டார்கள்.
பயனுள்ள விஷயங்களை அறிந்து கொள்வதற்கு நேரத்தை செலவிடுவதற்கு பதில், வீண் விஷயங்களில் கவனம் செலுத்தி பொழுதை போக்குவது பேஷனாகவே மாறிக்கொண்டிருக்கிறது. சமூக வலைத்தளங்களின் அசுர வளர்ச்சிப் பசிக்கு குடும்ப பெண்களும் தப்பவில்லை. ஒரே வீட்டில் வசித்தாலும் தனித்தனி தீவுகளைப்போல் தனிமையில் சமூக வலைத்தளங்களில் மூழ்கி கிடப்பது குடும்ப கட்டமைப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறிக்கொண்டிருக்கிறது. சமூகவலைத்தளங்கள் சமூகத்தை எந்த அளவிற்கு தன் பிடிக்குள் அடி பணிய வைத்திருக்கிறது என்பதை உணர்த்தும் சர்வே இது!
‘சமூக வலைத்தளங்களில் தினமும் எத்தனை மணி நேரத்தை செலவிடுகிறீர்கள்?’ என்ற கேள்விக்கு, 68 சதவீதம் பேர் “தினமும் 4 முதல் 5 மணி நேரத்தை ஒதுக்குகிறோம்” என்று கூறி இருக்கிறார்கள். “நேரத்தை கவனத்தில் கொள்ளாமல் டேட்டா தீர்ந்து போகும் வரை அதிலேயே மூழ்கி கிடப்போம்” என்று பத்து சதவீதம் பேர் பதில் சொல்லியிருக்கிறார்கள். “வீட்டில் இருக்கும் நேரத்தில் வீடியோ பார்ப்பது, சாட்டிங் செய்வது என்று பொழுதை போக்கிவிட்டு மனைவி, குழந்தைகளுடன் முகம் கொடுத்து பேச நேரம் கிடைப்பதில்லை” என்றும் 8 சதவீதம் பேர் வருத்தப்பட்டிருக்கிறார்கள். டேட்டா தீர்ந்துபோன பிறகும் மற்றவர்களின் வை-பை மூலம் நெட் பயன்படுத்துவதாக 9 சதவீதம் பேர் சொல்கிறார்கள்.
இதில் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால் சமூக வலைத்தளங்களில் ஐந்தாறு மணி நேரத்தை செலவிடுபவர்களில் பெரும்பாலானோர் திருமணமானவர்கள். அவர்கள், அதன் பிறகு குடும்பத்தோடு செலவிட தங்களுக்கு ஒரு மணி நேரம்கூட கிடைப்பதில்லை என்றும் கூறுகிறார்கள். கிடைக்கும் ஓய்வு நேரத்தில் எல்லாம் சமூக வலைத்தளத்துடனேயே தொடர்பில் இருப்பதாக 5 சதவீதம் பேர் கூறி இருக்கிறார்கள்.
‘இரவு 11 மணிக்கு மேல் இணைய தளத்தை பயன்படுத்துவீர்களா?’ என்ற கேள்விக்கு, 26 சதவீதம் பேர் ‘ஆம்’ என்று பதில் அளித்திருக்கிறார்கள். 39 சதவீதம் பேர் ‘இல்லை’ என்று கூறி இருக்கிறார்கள். 35 சதவீதம் பேர் எப்போதாவது இரவில் இணையதளத்தை பயன்படுத்துவதாக சொல்லியிருக்கிறார்கள்.
‘வீட்டில் உள்ளவர்களுடன் குடும்ப விஷயங்களை பேசுவதற்கு தினமும் எவ்வளவு நேரத்தை ஒதுக்குகிறீர்கள்?’ என்ற கேள்விக்கான பதிலில், சமூக வலைத்தளம் எந்த அளவுக்கு குடும்பத்தினர் மத்தியில் இடைவெளியை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. 21 சதவீதம் பேர் குடும்ப விஷயங்கள் பற்றி பேசுவதற்கு 1 மணி நேரத்திற்கும் குறைவாகத்தான் செலவிடுவதாக கூறி இருக்கிறார்கள்.
2 மணி முதல் 3 மணி நேரம் வரை பேசுவதாக 23 சதவீதம் பேர் சொல்லி இருக்கிறார்கள். 2 முதல் 4 மணி நேரம் வரை ஒதுக்குவதாக 27 சதவீதம் பேர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். உறவு பந்தத்திற்கு ஆறுதல் அளிக்கும் விதமாக 29 சதவீதம் பேர் 4 மணி நேரத்திற்கும் அதிகமாக பேசுவதாக கூறி இருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் அதிக நேரத்தை செலவிடுவது விவாகரத்து அதிகரிப்பதற்கும் காரணமாக இருப்பதும் தெரியவந்துள்ளது.
‘மகளின் செல்போனின் பாஸ்வேர்டு தெரியுமா?’ என்ற கேள்விக்கு, 52 சதவீதம் பேர் தெரியும் என்கிறார்கள். 42 சதவீதம் பேர் ‘தெரியாது’ என்று கூறி இருக்கிறார்கள். மீதி உள்ள 6 சதவீதம் பேர் கட்டாயப்படுத்தி கேட்டால் சொல்வாள் என்று பதிலளித்திருக்கிறார்கள். அதேபோல் மனைவியின் செல்போன் பாஸ்வேர்டு பற்றிய கேள்விக்கு 56 சதவீதம் ஆண்கள் ‘தெரியும்’ என்கிறார்கள். 25 சதவீதம் பேர் ‘தெரியாது’ என்றும், 11 சதவீதம் பேர் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறி இருக்கிறார்கள். “நாங்கள் கேட்டாலும் அவள் சொல்வதில்லை” என்று 8 சதவீதம் பேர் கூறியுள்ளார்கள்.
‘டீன் ஏஜ்’ பருவத்தினர் சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்துவதும் சர்வேயில் கண்டறியப்பட்டிருக்கிறது. 26 சதவீதம் பேர் செக்ஸ் சார்ந்த விஷயங்களையும், செக்ஸ் ரீதியான தமாஷ்களையும் பகிர்ந்துகொள்வதாக சொல்கிறார்கள். காதலர்களும் சமூகவலைத்தளங்கள் மூலம் அரட்டை அடிப்பதை பிரதானமாக கொண்டிருக்கிறார்கள். அப்போது செக்ஸ் சார்ந்த விஷயங்களும் எட்டிப்பார்க்கத்தான் செய்கிறது. சர்வேயில் பங்கெடுத்த பெண்களில் 24 சதவீதம் பேர் காதலிக்கும் நபருக்கு தங்களின் நிர்வாண படங்களை அனுப்புவதாக கூறி அதிர்ச்சியடைய வைத்திருக்கிறார்கள். தங்களுடைய முகத்தை மறைத்து படம் அனுப்புவதாக 5 சதவீதம் பேர் கூறியுள்ளனர். 71 சதவீதம் பேர் அப்படிப்பட்ட படங்களை அனுப்புவதில்லை என்று கூறி சற்று நிம்மதி பெருமூச்சுவிட வைத்திருக்கிறார்கள்.
குளிக்க செல்லும்போதுகூட சமூகவலைத்தளங்களில் தங்கள் பிரியமானவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சிலர் அங்கிருந்துகொண்டே புகைப்படங்களை பகிர்வது, வீடியோ கால் செய்து பேசுவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். 7 சதவீதம் பேர் குளியல் அறையில் இருந்து வீடியோ காலில் காட்சிகளை பகிர்ந்துகொள்வதாக கூறி இருக்கிறார்கள். ஸ்கிரீன் ரெக்கார்டிங் போன்ற அப்ளிகேஷன்களை பயன்படுத்தி தனிமையில் இருக்கும்போது எடுக்கப்படும் காட்சிகளை பதிவுசெய்து பின்னர் எடிட்டிங் செய்து மற்றவர்களுக்கு அனுப்பலாம் என்பது நிறைய பெண்களுக்கு தெரியவில்லை.
தனக்கு விருப்பமான அவர் மட்டும்தான் பார்த்து ரசிப்பதாக தவறாக நினைத்து விடுகிறார்கள். இந்த மாதிரியான ஆபாச வீடியோ பதிவுகளை எடுக்கும் ஆண்கள் முதலில் பாத்ரூமில் தங்களை அதுபோன்ற கோணத்தில் படம் பிடித்துக்கொள்கிறார்கள். அதனை காண்பித்து அதுபோன்ற கோணத்தில் தனக்கு விருப்பமான பெண்ணிடம் வீடியோ பதிவு செய்து அனுப்பும்படி சொல்கிறார்கள். அப்படி எடுக்கப்படும் படங்கள் பல கைமாறி அந்த பெண்ணுக்கு விபரீதத்தை உருவாக்கிவிடுகிறது.
போலி கணக்குகள் தொடங்கி அதன் மூலம் தங்களுக்கு பிடிக்காதவர்களை அவமானப்படுத்தவும் நிறைய பேர் சமூகவலைத்தளங்களை பயன்படுத்துகிறார்கள். ‘உலகில் 9 கோடி பெண்கள் சைபர் கிரைம் குற்ற வழக்குகளால் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்’ என்று ஐ.நா.வின் பிராட்பேண்ட் கமிஷன் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இணையதளங்கள் மூலமாக பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அதிகரித்து கொண்டிருக்கின்றன.
இத்தகைய இணையதள வன்முறைகள் ஆண்களை விட பெண்களுக்கு 27 மடங்கு அதிகமாக நடக்கிறது. சமூகவலைத்தளங்களில் போலி கணக்குகள் தொடங்கி இருப்பதை சர்வேயில் 17 சதவீதம் பேர் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். பெற்றோருக்கு தெரியாமல் இருப்பதற்காகவும், தாங்கள் காதலிக்கும் நபருக்கு தெரியாமல் இருப்பதற்காகவும் போலி கணக்குகள் தொடங்கி இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். இது சமூக அமைப்பு ஒன்று மேற்கொண்ட சர்வே தகவலாகும்.
சமூகவலைத்தளங்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவதே சமூகத்திற்கும், உபயோகிப்பவர்களுக்கும் நன்மை சேர்க்கும்.

No comments:

Powered by Blogger.