சொகுசு பஸ் டயர் வெடித்ததில் தீ பிடித்து எரிந்தது- 45 பயணிகள் உயிர் ??
திண்டுக்கல் அருகே இன்று அதிகாலை வடமாநில சொகுசு பஸ் டயர் வெடித்து தீப்பிடித்ததில் பேருந்து முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. அதிர்ஷ்டவசமாக 45 பயணிகள் உயிர் தப்பினர்.
மராட்டிய மாநிலம் லாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் கன்னியாகுமரிக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அதன்படி 45 பேர் ஒரு சொகுசு பஸ்சில் லாத்தூரில் இருந்து பெங்களூரு வழியாக கன்னியாகுமரிக்கு வந்தனர்.
இன்று அதிகாலை நேரம் இந்த பஸ் திண்டுக்கல் அருகே வேடசந்தூர் எவரெடி மில் பகுதியில் வந்து கொண்டு இருந்தது. இந்த பகுதி திண்டுக்கல் – சேலம் செல்லும் 4 வழிச்சாலை ஆகும்.
அப்போது பஸ்சின் முன் பக்க டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் பஸ் நிலை குலைந்ததோடு திடீரென தீ பற்றியது. அந்த சமயம் பயணிகள் தூக்க கலக்கத்தில் இருந்தனர். பயங்கர சத்தம் மற்றும் தீ பிடித்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
அவர்கள் உயிர் பிழைக்க அபய குரலிட்டனர். உடனே டிரைவர் பஸ்சை நிறுத்தி கீழே குதித்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர். பஸ் தீ பிடித்து எரிவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக பயணிகள் ஜன்னல்களை உடைத்து அவசரமாக குதித்தனர்.
அதோடு அங்கு இருந்தவர்களும் அசுர வேகத்தில் பயணிகளை காப்பாற்றினர். இதனால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. 45 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
இது குறித்து வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் பஸ் முழுவதும் எரிந்து நாசமானது.
கீழே குதித்ததில் ஒரு சில பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் முதல் உதவி சிகிச்சை பெற்றனர். விபத்து குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
No comments: