குழந்தையை சுவற்றில் அடித்து கொன்ற தந்தை; அதிர்ச்சி காரணம்
மது குடிக்க பணம் தராததால் மனைவி மீது ஏற்பட்ட ஆத்திரத்தில் குழந்தையை சுவற்றில் அடித்து கொன்ற கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கோட்டக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன் (வயது 30). கட்டிட தொழிலாளி. இவர் அதே கிராமத்தை சேர்ந்த பொன்னி (24) என்பவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2½ வயதில் பிரத்தீப் ராஜ் என்ற மகனும், 4 மாதத்தில் மீரா என்ற பெண் குழந்தையும் இருந்தனர். மதியழகனுக்கு குடிபழக்கம் இருந்தது.
அவர் தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தகராறு செய்தார். மேலும் சரியாக வேலைக்கு செல்லவில்லை. இதனால் பொன்னிக்கும் மதியழகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 3 நாட்களாக மதியழகன் வேலைக்கு செல்லவில்லை. நேற்று மாலை அவர் கோபத்துடன் வீட்டுக்கு வந்தார். அப்போது கணவன், மனைவிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மதியழகன் தொட்டிலில் தூங்கிகொண்டிருந்த கைகுழந்தை மீராவை தூக்கினார். பின்பு குழந்தையின் கால்களை பிடித்துக் கொண்டு நெல் கதிர் அடிப்பதுபோல் சுவற்றில் ஓங்கி அடித்தார். இதில் குழந்தையின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதை பார்த்ததும் மதியழகன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
உயிருக்கு போராடிய குழந்தை மீராவை தூக்கிக் கொண்டு தாய் மற்றும் உறவினர்கள் மரக்காணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் குழந்தையை பரிசோதித்து பார்த்த போது ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டதும் பொன்னி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
பின்பு குழந்தை கொலை செய்யப்பட்டது குறித்து மரக்காணம் போலீசில் பொன்னி புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ் பெக்டர் (பொறுப்பு) சரவணன் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து தப்பி ஓடிய மதியழகனை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
அப்போது மதியழகன் போலீசில் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-
காணும்பொங்கலையொட்டி நண்பர்களுடன் மதுகுடிக்க விரும்பினேன். இதற்காக வீட்டுக்கு சென்று மனைவி பொன்னியிடம் மதுகுடிக்க பணம் தருமாறு கேட்டேன். ஆனால் அவர் மதுவாங்க பணம் தர மறுத்து விட்டார். இதனால் அவள் மீது எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
உடனே நான் தொட்டிலில் தூங்கிகொண்டிருந்த கைகுழந்தை மீராவை தூக்கி சுவற்றில் ஓங்கி அடித்தேன். இதில் குழந்தை இறந்து விட்டது.
இவ்வாறு மதியழகன் போலீசில் கூறியுள்ளார். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெற்ற குழந்தையை தந்தை சுவற்றில் அடித்து கொலை செய்த சம்பவம் மரக்காணம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
No comments: