மத்திய மந்திரி பாஸ்வானுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மகள்
ராப்ரி தேவியின் கல்வியறிவு குறித்து விமர்சித்த மத்திய மந்திரி ராம் விலாஸ் பாஸ்வானுக்கு எதிராக அவரது மகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
மத்திய மந்திரியும் லோக் ஜனசக்தி கட்சி தலைவருமான ராம் விலாஸ் பாஸ்வான், பாட்னாவில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான அரசாங்கம் கொண்டு வந்த 10 சதவீத இடஒதுக்கீட்டு மசோதாவை எதிர்த்த ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை கடுமையாக சாடினார்.
“கோஷங்கள் எழுப்புவதிலும், படிப்பறிவில்லாதவரை முதலமைச்சர் ஆக்குவதிலும் மட்டுமே அவர்கள் (ராஷ்டிரிய ஜனதா தளம்) நம்பிக்கை வைத்துள்ளனர்” என யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் பாஸ்வான் பேசினார்.
1997ல் முதல்வராக இருந்த லாலு பிரசாத் யாதவ், கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் கைதாகும் நிலை ஏற்பட்டதால், பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மனைவி ராப்ரி தேவியை முதல்வராக்கினார். இந்த சம்பவத்தை பாஸ்வான் குறிப்பிட்டு பேசியதாக சர்ச்சை எழுந்தது.
பாஸ்வானின் இந்த கருத்துக்கு எதிராக, அவரது மகள் ஆஷா பஸ்வான், தனது ஆதரவாளர்களுடன் பாட்னாவில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினார். பதாகைகளை தாங்கி சாலையில் அமர்ந்து தர்ணா செய்தனர். அப்போது பேசிய ஆஷா, ‘ராப்ரி தேவியை என் தந்தை அவமதித்துள்ளார். என் தாய் கூட படிப்பறிவில்லாதவர். அதனால்தான் அவரை என் தந்தை கைவிட்டிருக்கிறார். எனவே, அவர் தனது கருத்தை திரும்ப பெற்று மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவரது அலுவலகத்தின் முன்னால் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவேன்’ என்றார்.
பாஸ்வானின் முதல் மனைவிக்கு பிறந்தவர் ஆஷா. ஆஷாவின் கணவர் அருண் சாது, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் கடந்த ஆண்டு இணைந்தார்.
பாஸ்வான் தன் முதல் மனைவி ராஜ் குமாரி தேவியை பிரிந்து வாழ்கிறார். ராஜ குமாரி தேவி, சமஸ்திபூர் மாவட்டத்தில் வசிக்கிறார். பாஸ்வான் தன் இரண்டாவது மனைவிக்கு பிறந்த மகன் சிரஜ் பாஸ்வானை அரசியல் வாரிசாக வளர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
No comments: