இந்து கோவிலை ஆக்கிரமித்து அமைக்கப்படும் பௌத்த விகாரை! அம்பலமான உண்மையால் வெடிக்கும் சர்ச்சை
முல்லைத்தீவு மாவட்டம் கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள அதாவது பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரை சட்டவிரோதமாகவே அமைக்கப்பட்டுள்ளது என தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக பெறப்பட்ட தகவலின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
செம்மலை கிராம மக்கள் ஆண்டாண்டு காலமாக வழிபட்டு வந்த குறித்த பிள்ளையார் ஆலயத்தில் யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் புதிய ஒரு பௌத்த ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் தற்போது அந்த பௌத்த ஆலயத்தில் பிரம்மாண்ட புத்தர் சிலை ஒன்றும் அமைக்கப்பட்டு வருகின்றது.
அத்தோடு குறித்த பிள்ளையார் ஆலயத்திற்கு வழிபாட்டுக்குச் செல்லும் செம்மலைக்கிராம மக்களுக்கு குறித்த சட்டவிரோத விகாரையை அமைத்துள்ள பௌத்த பிக்குவால் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.
இவ்வாறான ஒரு சம்பவம் அண்மையில் இந்த ஆலயத்தில் இடம்பெற்றது அதாவது பௌத்த பிக்குகள் வழிபாட்டுக்கு சென்ற செம்மலை கிராம மக்களுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதன் விளைவாக முறுகல் நிலை ஒன்றும் தோன்றியிருந்தது.
இந்த நிலையில் இந்த விகாரை அமைக்கப்படுவது தொடர்பாக கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் செம்மலை கிராம அபிவிருத்தி சங்கத்தினால் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கோரப்பட்ட தகவலுக்கு அமைவாக இங்கே அமைக்கப்பட்டுவரும் விகாரை எந்தவிதமான சட்ட திட்டங்களுக்கும் உட்பட்டு அமைக்கப்படவில்லை என்ற தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
2018 ஆம் ஆண்டு ஒன்பதாம் மாதம் 14 ஆம் திகதி தகவல் அறியும் உரிமைச் சட்டம் (விண்ணப்ப இலக்கம் MU/MPP/DS/EB/Info/24) மூலம் கோரப்பட்ட தகவலுக்கு அமைவாக கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தினால் இந்த விகாரை அமைக்கப்பட்டிருப்பது தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளவில் விகாரை எதுவும் இருக்கவில்லை.
இதை அண்டிய பிரதேசத்தில் பௌத்த மதத்தை வழிபடுகின்ற பௌத்தர்கள் நிரந்தரமாக வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.இவ்வளாகத்தில் விகாரை அமைப்பதற்கான காணி எதுவும் ஒதுக்கப்படவில்லை.
பௌத்த மதகுரு தங்கியிருக்கும் அரச காணியில் அவர் தங்கியிருப்பதற்கான காணி அனுமதிப்பத்திரம் பிரதேச செயலகத்தினால் வழங்கப்படவில்லை.
தற்போது குறித்த பௌத்த மத குருவினால் குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானங்களுக்கு பிரதேச செயலகத்தால் எந்தவித அனுமதியும் வழங்கப்படவில்லை.
குறித்த விகாரை அமைப்பதற்கு அரச காணி ஒன்றை கோரி பிரதேச செயலகத்திடம் விண்ணப்பங்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை.
விகாரை அமைந்துள்ள பகுதிக்கு அண்மையில் 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நடைபெற்ற கிறவல் அகழ்விற்கு பிரதேச செயலகத்தினால் எந்தவித அனுமதியும் வழங்கப்படவில்லை.
கிராம அலுவலர்கள் ஊடாக இப்பிரதேசத்தில் இருக்கின்ற காணிகளின் உண்மையான காணி உரிமையாளர்கள் தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. அனுமதிப்பத்திர பிரதிகள் சேகரிக்கப்படுகின்றன. இதன் பின்னர் வனவள திணைக்களம் வனஜீவராசிகள் திணைக்களம் என்பனவற்றுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்படும் என கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த தகவல்களின் அடிப்படையில் குறித்த விகாரையானது அத்துமீறி பிள்ளையார் ஆலய வளாகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளது. என்பது உத்தியோகபூர்வமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தற்போது மிகவும் வேகமான முறையில் பிரம்மாண்ட புத்தர் சிலை ஒன்றை அமைப்பதற்காக வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றது. இதனால் இப்பகுதியில் இனங்களுக்கிடையில் முரண்பாட்டை ஏற்படுத்தக் கூடிய வகையில் இந்த விகாராதிபதி செயற்பட்டு வருகின்றார்.
அத்தோடு இந்த பிள்ளையார் ஆலயத்துக்கு 'கணதேவி தேவாலய' என்று பெயர் பலகையும் பிக்குவால் நாட்டப்பட்டுள்ளது. இந்த பெயற்பலகை நாட்டப்பட்டுள்ளமை தொடர்பில் பிள்ளையார் ஆலய நிர்வாகத்தால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதியப்பட்டபோதும் பொலிஸார் பிக்குவுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
No comments: