புத்தாடை வாங்க பணம் இல்லாத கணவன் கோபத்தில் தூக்கு மாட்டிய இளம் மனைவி
ஓடாவி வேலை செய்துவரும் ஜீவராசா நிர்மலேஸ்வரன் (32) என்பவரை திருமணம் செய்துள்ள செல்லத்தம்பி புஸ்பராணி(26) என்பவர் நான்கரை வயது பெண் குழந்தையொன்றுக்கு தாயாவார்.
ஓடாவித் தொழில் செய்து வரும் நிர்மலேஸ்வரனுக்கு சில நாட்களாக தொழில்கள் எதுவும் சரிவராததால், நேற்று (15/01) தைப்பொங்கல் பெருநாளை கொண்டாடக்கூட வசதியின்றி இருந்துள்ளார்கள். இந்த நிலையில் கணவரிடம் புத்தாடை வாங்க பணம் தருமாறு கேட்டு முரண்பட்டுள்ளார்.
14/01/2019 அன்று காலை விழித்தெழுந்ததும், புத்தாடை பிரச்சினை மீண்டும் எழுந்துள்ளது.
நான்கரை வயது மகளுடன் வீட்டின் விறாந்தையில் இருந்து கொண்டிருந்த கணவருடன், தொடர்ந்து நச்சரித்துக்கொண்டு இருந்த மனைவியிடம் புதுவருடத்துக்கு கடனுக்கு வாங்கிய ஆடைகளுக்கே இன்னும் பணம் கொடுத்து முடியல்ல.
கொஞ்சம் பொறுமையாயிரு! சித்திரைக்காவது எடுத்துத் தருகிறேன் என்று கூறியபோது, கணவனோடு சண்டையிட்டு, “இரு உனக்கு காட்டுறன் வேல ” என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்று கதவை பூட்டியுள்ளார்.
குழந்தையோடு விளையாடிகொண்டிருந்த கணவன், வீட்டுக்குள் சென்ற மனைவியை பத்துநிமிடமாகியும் காணவில்லை என்பதால், புஸ்பா, புஸ்பா என கணவரும், அம்மா, அம்மா என குழந்தையும் அழைத்த போது, பதிலேதும் கிடைக்காததால் வீட்டின் யன்னலை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற கணவன்,
படுக்கையறை காற்றாடியில் சாறியொன்றினால் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்திருப்பதை கண்டு, அயலவர்களை சத்தமிட்டு அழைத்து, கழுத்தில் கட்டப்பட்டிருந்த சாறியை கத்தியினால் அறுத்து, அவசரமாக சந்திவெளி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, கடமையிலிருந்த வைத்தியர் மூலம், இவர் இறந்துவிட்டார் என்ற தகவலை பெற்றுள்ளனர்.
விடயத்தை ஏறாவூர் பொலிசாருக்கு தெரிவிக்க, அவர்கள் மூலம் மரணவிசாரனை அதிகாரிக்கு தெரிவிக்கப்பட, நீதிபதியின் கட்டளைக்கு அமைவாக தடயவியல் பொலிசாருடன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரனைகளை மேற்கொண்டு, பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டதை தொடர்ந்து பிரேத பரிசோதனையின் பின்னர் சடலத்தை கணவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
No comments: