தூக்கிலிடவிருந்தவரின் தண்டனையை நிறுத்தியது சுப்ரீம் கோர்ட்
பாகிஸ்தானில் நாளை மறுநாள் தூக்கிலிடவிருந்த போலீஸ்காரரின் மரண தண்டனையை நிறுத்தி வைக்குமாறு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பாகிஸ்தானில் லாகூர் பகுதியை சேர்ந்தவர் கிசார் ஹயாத் என்பவர் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். தன்னுடன் பணியாற்றிய சகப்போலீஸ்காரரை துப்பாக்கியால் சுட்டதாக கிசார் ஹயாத் கைது செய்யப்பட்டார். லாகூர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் கடந்த 2001-ம் ஆண்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து, லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். கடந்த 2008-ம் ஆண்டு தீவிரமான மனநோயாளியாக மாறிய கிசார் ஹயாத்துக்கு சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என கிசார் ஹயாத்தின் தாயார் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டார். இதற்கிடையில், 15-1-2019 அன்று காலை அவரை தூக்கிலிட நாள் குறிக்கப்பட்டது.
மனநிலை சரியில்லாதவரை தூக்கிலிட்டு கொல்வதற்கு சர்வதேச சட்டங்கள் இடமளிக்காததால் இந்த தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும் என பல்வேறு தர்ப்பினரிடம் இருந்தும் பிறநாடுகளில் உள்ள மனித உரிமை ஆர்வலர்களிடமிருந்தும் கோரிக்கை எழுந்தது.
இவற்றை எல்லாம் பரிசீலித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி சகிப் நசிர், கிசார் ஹயாத்துக்கு நிறைவேற்றப்படவிருந்த தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறைக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதி சென்று பார்வையிட வேண்டும். அங்குள்ள மனநல மருத்துவமனை எவ்வாறு செயல்படுகிறது? என்று அவர் தெரிந்துகொள்ள வேண்டும் என்று வழக்கு தொடர்ந்த கிசார் ஹயாத்தின் தாயார் மனுமீது நாளை சுப்ரீம் கோர்ட் விசாரிக்கவுள்ளது.
கிசார் ஹயாத்தின் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என சில அமைப்புகள் தொடர்ந்த வழக்கு விசாரணையும் நாளை நடைபெறுகிறது.
No comments: