மாணவர்கள் போல் நடித்த காஷ்மீர் பயங்கரவாதிகளால் இந்தியாவில் பரபரப்பு
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மாணவர்கள் என்று கூறி நாசவேலை செய்யும் நோக்கத்துடன் வீடு எடுத்து தங்கியிருந்த காஷ்மீர் பயங்கரவாதிகள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
புல்வாமா தாக்குதலையடுத்து நாடு முழுவதும் போலீசார் உஷார் நிலையில் உள்ளனர். பல மாநிலங்களில் சந்தேகப்படும் வகையில் நடமாடும் புதிய நபர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம், சஹரான்பூர் மாவட்டம், டியோபன்ட் பகுதியில் சந்தேகப்படும் வகையில் இரு மாணவர்கள் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருப்பதாக அம்மாநில பயங்கரவாத தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து, நேற்றிரவு அந்த பகுதியை முற்றுகையிட்ட போலீசார், மாணவர்கள் என்ற போர்வையில் அங்கு தங்கியிருந்த இருவரை கைது செய்தனர். அவர்கள் இருவரும் எந்த கல்லூரியிலும் சேர்ந்து படிக்கவில்லை. புல்வாமா தாக்குதலுக்கு காரணமாக இருந்த ஜெய்ஷ் இ முஹம்மத் பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்க்கும் பணிக்காக இங்கு வந்து தங்கியுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தை சேர்ந்த ஷாநவாஸ் அஹமத் டேலி மற்றும் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த அகிப் அஹமத் மாலிக் ஆகிய அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் மற்றும் பாகிஸ்தானுக்கு ஆதரவான சில பிரசுரங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
No comments: