Header Ads

Header Ads

பாலச்சந்திரனை கொலை செய்தது இராணுவம்! பாராளுமன்றத்தில் ஆதாரத்துடன் சிறீதரன் எம்.பி

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனுக்கு பிஸ்கட் கொடுத்துவிட்டு சுட்டுக்கொன்றதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று முன்தினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், யாழ். சென்ற அமைச்சர் ராஜித சேனாரத்ன தமிழ் மக்கள் அதிகாரப் பகிர்வை கேட்கவில்லை. அபிவிருத்தியையே கேட்கின்றனர் என்ற கருத்தை கூறியுள்ளார்.

என்ன நோக்கத்தில் இவ்வாறான கருத்தை அவர் அங்கு விதைக்கின்றார், தமிழர்களின் 100 வருட கால உரிமைப் போராட்டத்தை அபிவிருத்தி என்ற சொல்லுக்குள் மறைக்க வேண்டாம்.

அண்மையில் வடக்குக்குச் சென்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த கால சம்பவங்களை மறப்போம் மன்னிப்போம் என்றார்.

அதேபோல் இந்த நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச இந்தியாவில் பெங்களூர் நகரில் ஓர் ஊடகச் சந்திப்பில் பிரபாகரனின் மகனான சிறுவன் பாலச்சந்திரன் ஒரு விடுதலைப்புலி உறுப்பினர்.

அவருக்கு 5 பேர் பாதுகாப்பு வழங்கியிருந்தனர். இசைப்பிரியா ஒரு ஊடகவியலாளர் அல்ல. அவரும் ஒரு புலி உறுப்பினர் என்று கூறி அவர்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தியுள்ளார்.

பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படித்த பாடசாலையின் அதிபராக இருந்தவன் நான்.

பாலச்சந்திரன் தரம் 7இல் கல்வி கற்றுக்கொண்டிருந்த நிலையிலேயே இராணுவத்திடம் சரணடைந்த போது அவர்களால் பிஸ்கட் கொடுத்து சாப்பிட வைத்த பின்னர் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இதற்கான சாட்சிகளை கார்டியன் பத்திரிகை படத்துடன் வெளியிட்டிருந்தது, இந்த படத்தைக் கூட இராணுவமே எடுத்திருந்தது. இந்நிலையில் சாட்சி இருந்தும் இவர்கள் பொய் கூறுகின்றார்கள்.

தென்னாப்பிரிக்காவில் இடம்பெற்ற அடக்குமுறையில் 20 வீத வெள்ளையினத்தவர் 80 வீத கறுப்பினத்தவரை துன்புறுத்தினர்.

ஆனால் அங்கு அவர்களுக்கு தீர்வு கிடைத்த பின்னர் 20 வீத வெள்ளையர்களை கறுப்பின மக்கள் மன்னித்தனர்.

இங்கும் அதைக்கூறியே மறப்போம், மன்னிப்போம் என இவர்கள் கூறுகின்றனர். யார் யாரை மன்னிப்பது என்பதே இன்றும் கேள்வியாக உள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற குற்றங்களில் நீதி நிலைநாட்டப்பட்டால் மாத்திரமே இதனைப் பற்றி சிந்திக்க முடியும்.

இலங்கையில் 72 வீதமான சிங்கள இனம் தமிழின அழிப்புச் செய்துள்ளது, இங்கு யார் யாரை மன்னிப்பது. யார் எதனை மறப்பது என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும்.

நாம் அரசுக்கு ஆதரவளிக்கின்றோம், என்பதற்காக எல்லாவற்றையும் சொல்லிவிடலாம், செய்து விடலாம் என நினைக்கக் கூடாது.

இனவாதத்தாலும் வன்முறைகளாலும் அழிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி வழங்கும் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒப்பந்தங்கள் சட்டங்கள் கிழித்தெறியப்பட்ட வரலாறுகளே இந்த நாட்டில் உள்ளன.

தற்போது அரசியலமைப்பு பேரவை தொடர்பில் இங்கு அரச, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை பார்த்தால் அந்த வரலாறு மீண்டும் ஏற்படுத்தப்படப் போவதாகவே தெரிகின்றது.

100 வருடங்களாக தமிழர்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். இந்த நாட்டில் நியாயமான மனிதர்கள் யாருமே இல்லையா? மகா வம்சத்தில் ஊறிப்போயுள்ள சிலரால் எமது நல்லெண்ணங்கள் புரிந்து கொள்ளப்படவில்லை.
யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழர்கள் திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் வைக்கப்பட்டுள்ளனர்.

அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனோருக்கான, தமது காணிகளுக்கான போராட்டங்களில் தமிழ் மக்கள் ஈடுபட்டுள்ளது தொடர் கதையாகியுள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி கையாலாகாதவராகவும் செயற்பட முடியாதவராகவும் உள்ளார். எனவே அரசியலமைப்புப் பேரவை கேலிக்குரியதாக மக்களை ஏமாற்றுவதற்குரியதாக மாறிவிடக்கூடாது என குறிப்பிட்டுள்ளார்

No comments:

Powered by Blogger.