எதிரிக்கும் உதவும் ஒரே மனிதன் சூப்பர்ஸ்டார் மட்டும் தான் ராகவா லாரன்ஸ்
அகவன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ராகவா லாரன்ஸ், எதிரிக்கும் உதவும் ஒரே மனிதன் சூப்பர்ஸ்டார் மட்டும் தான் என்று புகழ்ந்தார்.
புதுமுக இயக்குநர் ஏழுமலை இயக்கி உள்ள திரைப்படம் `அகவன்’. இதன் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன், ரஜினியின் ஆரம்ப காலம் முதல் ரசிகராய் இருப்பவர். ஆன்மிகத்தை மையமாகக் கொண்ட இந்த படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா ரஜினி ரசிகர்கள் மத்தியில் நடைபெற்றது.
இந்த விழாவில் பாக்யராஜ், யுகபாரதி, ராகவா லாரன்ஸ், சின்னி ஜெயந்த், மதுரை அன்பு செழியன், பிக்பாஸ் பரணி, எங்கேயும் எப்போதும் சரவணன், நோபல், கராத்தே தியாகராஜன், ரவி மரியா ஆகியோர் கலந்து கொண்டனர். கிட்டத்தட்ட ரஜினி மன்ற விழாபோல் நடந்த இந்த விழாவில் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து பேசப்பட்டது.
நிகழ்ச்சியில் இறுதியாகப் பேசிய ராகவா லாரன்ஸ், ’ உலகத்திலேயே எனக்கு பிடித்தமான நபர் எனது தாய். என் தாய்க்கு அப்பறம் எனக்கு பிடித்த நபர் சூப்பர் ஸ்டார் ரஜினி சார் தான். சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் தங்கள் குடும்பத்தை பார்த்துக்கொள்ள வேண்டும். ஆன்மிகத்தில் ஆர்வம் செலுத்தவேண்டும் என்று சொல்வார். அதேமாதிரி ரவிச்சந்திரன் ஜெயித்து காட்டியிருக்கிறார். சூப்பர்ஸ்டார் யாருக்கும் துரோகம் நினைக்கமாட்டார். `அவர் துரோகம் பண்ணிட்டார்’ன்னு யாரும் சொல்லவும் முடியாது. யாரையும் தப்பா பேசமாட்டார், அவரை நிறைய பேர் திட்டும்போதுகூட அவரிடம் நான் அதைப் பத்திக்கேட்டா “தம்பி, அதெல்லாம் விடுங்க ஆண்டவன் பார்த்துப்பார்’னு சொல்லிடுவார். எதிரிக்கும் உதவும் ஒரே மனிதன் சூப்பர்ஸ்டார் மட்டும் தான்’ என பேசினார்.
தொடர்ந்து, தாயின் மகத்துவத்தைப் பற்றிப் பேசிய லாரன்ஸ் அவரது உரையின் முடிவில் தண்ணீர் கேட்டார். அதைத் தயாரிப்பாளர் தர வாங்கிக் குடித்தவுடன், “தண்ணீர் கேட்க காரணம் இருந்தது. என் ஓட்டு உங்களுக்குத்தான்” எனக் கூறினார் லாரன்ஸ். தண்ணீர் தந்தது ரஜினியின் கட்சி போல் பாவித்து ரஜினிக்குத்தான் என் ஓட்டு என்று சூசகமாகக் கூறினார்.
No comments: