பிறந்த குழந்தையை கொன்றுவிட்டு நாடகமாடிய வைத்தியசாலை
ஒவ்வோர் மனிதனின் வாழ்விலும் அவர்களின் திருமணமும், குழந்தை பிறப்பும் இன்றியமையாதவை. திருமணத்திற்கு பிறகு கருவுற்ற மனைவியோடு, கணவனும், அவர்தம் குடும்பத்தினரும் பத்து மாதங்கள் முடிந்து குழந்தை பிறப்பு வரை தங்கள் மனங்களில் ஆயிரம் ஆயிரம் கனவுகளைச் சுமந்திருப்பர். நம் குழந்தை யார் முகச்சாயலில் இருக்குமென தம்பதிகள் தங்களுக்குள்ளாக செல்ல வாக்குவாதங்களில் ஈடுபடுவர். அப்படியான குழந்தை பிறப்பு நேர்ந்து தனது கணவரோடு சேர்த்து குழந்தையையும் நேசத்தோடு காணும் மனைவியின் உள்ளார்ந்த உணர்வுகளை ஆயிரம் வார்த்தைகளை கோர்த்து எழுதினாலும் நம்மால் விவரிக்க இயலாது.
ஆனால், அப்படியான ஓர் பெரு உணர்வினை விக்ரம் – பவித்ரா தம்பதியினர் உணராமலேயே சோகக்கடலில் மூழ்கியுள்ளனர். காரணம், கோவை மாவட்டம், அவாரம்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஏழாம் தேதி தனது மனைவியை பிரசவத்திற்காக அனுமதித்துள்ளார் விக்ரம் என்ற மென்பொறியாளர். அன்றிரவே அழகான ஆண் குழந்தையும் பிறந்துள்ளது.
ஆனால், மருத்துவமனை நிர்வாகத்தார் குழந்தையை பார்க்கவிடாமல் பல்வேறு காரணங்களை கூறி தாமதப்படுத்தியதுடன், இறுதியாக உங்கள் குழந்தை இறந்துவிட்டது என்ற அதிர்ச்சி செய்தியினை தெரிவித்து குழந்தையின் உடலை அவரிடம் கொடுத்துள்ளனர். விக்ரமும் அவரது குடும்பத்தாரும் குழந்தையின் உடலை பார்த்ததில் குழந்தையின் தலையில் ரத்தக் கசிவை பார்த்த அவர்கள் இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டுள்ளனர்.
அப்போது மருத்துவமனை நிர்வாகத்தார் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளனர். அதன் பின்னரே, பிரசவத்தின் போது செவிலியர் குழந்தையை கீழே தவற விட்டதால் குழந்தை பரிதாபகரமாக இழந்துள்ளது.இதனை திட்டமிட்டே விக்ரமிடம் மறைத்துள்ளனர் மருத்துவமனை நிர்வாகத்தார்.
இதனையறிந்த விக்ரமும் அவரது குடும்பத்தாரும் போராட்டத்தில் ஈடுபட்ட சமயத்தில் இறந்த குழந்தையை கையில் ஏந்தியவாறு விக்ரம் அலைந்தது பார்ப்பவர்களின் நெஞ்சை பதற வைக்கும் விதமாக இருந்தது.
No comments: