வெளிநாட்டவர் மூவர் இலங்கையில் செய்த மோசடி – மக்களிடம் பொலிஸார் விடுத்த வேண்டுக்கோள்
ஏ.டி.எம். இயந்திரங்கள் மூலம் பணம் பெற்று வந்த சீனர்கள் இருவரும் ருமேனியா நாட்டவர் ஒருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
போலி அட்டைகளை தயாரித்து அவர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த மோசடி குறித்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய கொழும்பு கோட்டை, சதாம் வீதி பகுதியில் சீனர் ஒருவரும் ஜனவரி 20 ஆம் திகதி வெள்ளவத்தைப் பிரதேசத்தில் மற்றுமொரு சீனர் ஒருவரும் பெப்ரவரி மூன்றாம் திகதி பாணந்துறை பிரதேசத்தில் ருமேனியாவாசி ஒருவரும் குற்ற விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்களிடமிருந்து போலியாக தயாரிக்கப்பட்ட சுமார் 200 கடன் மற்றும் டெபிட் அட்டைகள் மற்றும் 12 இலட்சத்துக்கும் அதிகமான பணம் தகவல்களை திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் இரண்டு ஆகியவற்றை குற்ற விசாரணை பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
சீனர்கள் இருவரும் கோட்டை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுத்தப்பட்டனர்.
இதனையடுத்து, அவர்களை பெப்ரவரி 13 ஆம் திகதி வரையும், ருமேனியாவைச் சேர்ந்தவரை பாணந்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதை அடுத்து, அவரை பெப்ரவரி 18 ஆம் திகதி வரையும் விளக்கமறியல் வைக்க நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன.
குறிப்பாக CCTV கமராக்களில் அகப்படாதிருக்கும் வகையில் தலைக்கவசம் அணிந்தவாறு, ATM இயந்திரங்களுக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடும் நபர்கள் தொடர்பில், உடனடியாக பொலிஸ் அதிகாரிகளிடம்
அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ அறிவிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இந்நடவடிக்கைகள் குற்றவியல் சட்டம் மற்றும் கொடுப்பனவு உத்தி தடுப்பு சட்டங்களின் கீழ் குற்றமாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
No comments: