உருளைக்கிழங்கிற்குள் வெடிகுண்டு
ஹாங்காங்கின் நியூ பிராந்தியத்தில் உள்ள சாய் குங் மாவட்டத்தில் சிற்றுண்டிகள் செய்யும் தொழிற்சாலை உள்ளது. இங்கு நேற்று முன்தினம் உருளைக்கிழங்கு சிப்ஸ் தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ஒரு தொழிலாளியின் கையில் உருளைக்கிழங்கை போல் இருந்த மர்ம பொருள் ஒன்று சிக்கியது. அதை உற்று நோக்கியபோது அது கையெறி வெடிகுண்டு என தெரிந்தது. இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது.
உடனடியாக பொலிசார் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அந்த கையெறி வெடிகுண்டை சோதனை செய்ததில், அது முதலாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்டது என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் அந்த கையெறி வெடிகுண்டை பத்திரமாக செயலிழக்க செய்தனர்.
பொலிஸ் அதிகாரிகள் இது குறித்து கூறுகையில், “பிரான்ஸ் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்குகளுடன் முதலாம் உலகப்போரின் கையெறி வெடிகுண்டு இருந்தது. முன்னாள் போர்க்களத்தில் உருளைக்கிழங்குகள் பயிரிடப்பட்டு, அவற்றை சேகரித்தபோது எதிர்பாராதவிதமாக கிடைத்த கையெறி வெடிகுண்டை உருளைக்கிழங்கு என நினைத்து ஹாங்காங்குக்கு ஏற்றுமதி செய்துவிட்டனர்” என தெரிவித்தனர்.
No comments: