போதைப்பொருள் பயன்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள்
இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளதைப் போன்று அமைச்சர்கள் எவரேனும் போதைப் பொருள் பயன்படுத்துவது ஆதரங்களுடன் நிரூபிக்கப்பட்டால் அவர்களை அமைச்சுப் பதவியிலிருந்து மாத்திரமல்லாமல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அமைச்சரவை அமைச்சர்களில் சிலரும் போதைப் பொருள் பாவனையாளர்களாகக் காணப்படுகின்றனர் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளமை தொடர்பில் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகளை கைது செய்யும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனினும் கடந்த கால ஆட்சியாளர்களினால் ஏன் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை என்பதே எமது கேள்வியாகும். காரணம் அவர்களுக்கு போதைப் பொருள் கடத்தல்காரர்களை கைது செய்வதற்கான தேவை காணப்படவில்லை.
எவ்வாறிருப்பினும் பொது மக்கள் மத்தியில் பெருகி வருகின்ற போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பு மக்கள் பிரதிநிதிகளான
அமைச்சர்களிடத்திலும் பாராளுமன்ற உறுப்பினர்களிடத்திலும் காணப்படுகின்றது. இவ்வாறிருக்கையில் அவர்களே போதைப் பொருள் பாவனையாளர்களாக காணப்பட்டால் நாட்டின் எதிர்கால நிலைமை என்னவென்பது கேள்விக்குறியாகும்.
அத்தோடு ரஞ்சன் ராமநாயக்க கூறுவதை ஆதரத்துடன் நிரூபிக்க வேண்டும். மாறாக அவர் அதனை வெறும் கருத்தாக மாத்திரம் கூறிவிட்டார் அது பயனற்றதாகிவிடும். பாவனையாளர் யார் என்றாலும் ஆளுங்கட்சி, எதிர்கட்சி பாகுபாடின்றி அவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதோடு அவர்களது பாராளுமன்ற உறுப்புரிமையும் பறிக்கபட வேண்டும் என்றார்.
மேலும் இக்குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் குழு இன்று அவரை அழைத்து அது தொடர்பில் விசாரித்தது.
சபை முதல்வர், அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையிலான இந்தக் குழுவில் எரான் விக்ரமரத்ன, நிஷ்ஷங்க நாணயக்கார மற்றும் ஆஷூ மாரசிங்க ஆகியோர் அடங்குகின்றனர்.
இன்று பாராளுமன்றக்குழு அறையொன்றில் அவர்கள் ரஞ்சன் ராமநாயக்கவிடம் விடயங்களைக் கேட்டறிந்து கொண்டனர்.
இதனையடுத்து ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்ததாவது,
ஒழுக்காற்று நடவடிக்கைகளை நால்வர் உள்ளிட்ட குழுவினர் முன்னெடுத்தனர். நான் நடிகன் என்பதால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்கின்றனர். அமைச்சரவையின் முன்னாள் நீதி அமைச்சர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
விஜயதாஸ ராஜபக்ஸ குறிப்பிடுகின்றார்.
போதைப்பொருள் பாவனையாளர்களாக பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். நான் சொன்னதற்கு மேல் சென்று அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பெருமளவிலானோர் இருப்பது மொட்டில். எம்மில் சிலர் இருக்கின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் தகவல்களில்லை. ஜே.வி.பியின் 6 பேர் தொடர்பில் அவ்வாறு முறைப்பாடுகள் இல்லை.
விமல் வீரவன்ஸவின் கட்சியில் இருவர் இருக்கின்றனர். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் 10-க்கும் மேல் இருக்கின்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சியில் மூன்று, நான்கு பேர் இருக்கின்றனர். பிவிதுரு ஹெல உறுமயவில் கம்மன்பில மட்டுமே உள்ளார். அவர் தொடர்பில் தகவல் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு “நானே குற்றச்சாட்டை முன்வைக்கிறேன். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சிறுநீரக மாதிரியை வழங்க தயார்” என்றும் ரஞ்சன் ராமநாயக்க அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதேபோல் பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகத் தொண்டமான் அவர்களும் இதுவொரு தவறான விடயமென்றும், போதைப்பொருள் பரிசோதனைக்கு தானும் தாயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
No comments: