பாகிஸ்தான் அரசின் முடிவில் தலையிட மறுத்த இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு!
இந்திய விமானி அபிநந்தனை விடுதலை செய்வது என்று பாகிஸ்தான் அரசு எடுத்த முடிவில் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு தலையிட மறுத்துவிட்டது.
எல்லையில் போர் பதற்றம் நிலவியபோது, இந்திய விமானி அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கினார். போர்க்கைதியாக பிடித்து வைக்கப்பட்ட அவரை, நேற்று முன்தினம் பாகிஸ்தான் விடுவித்து, இந்தியாவிடம் ஒப்படைத்தது.
இவரை விடுவிப்பது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு கொள்கை முடிவு எடுத்தது. இதை அந்நாட்டு பாராளுமன்றத்தில் இம்ரான்கான் அறிவித்தார். இதை பாகிஸ்தானில் பெரும்பாலானோர் ஆதரித்த போதிலும் சிலர் எதிர்த்தனர். எதிர்ப்பாளர்களில் ஒருவரான வக்கீல் முகமது சோயிப் ரசாக் என்பவர் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தலைமை நீதிபதி, விமானி அபிநந்தனை விடுதலை செய்ய பாகிஸ்தான் அரசு எடுத்த முடிவு சரிதான் என்று தீர்ப்பு கூறினார்.
அவர் தனது தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-
பிடிபட்ட அபிநந்தனை விடுதலை செய்வது தொடர்பாக பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் பிரதமர் இம்ரான்கான் அறிவித்த போது ஒரு உறுப்பினர் கூட அவரது முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நாட்டின் எல்லையில் தற்போது நிலவிவரும் பதற்றத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. பிரதமரின் முடிவை அனைத்து உறுப்பினர்களும் உறுதி செய்து உள்ளனர்.
ஆனால், சட்டத்தை தவறாக புரிந்துகொண்டு மனுதாரர் இந்த வழக்கை தாக்கல் செய்து இருக்கிறார். மனுதாரரின் அச்சம் தவறானது. வெளிவிவகார கொள்கை, ராணுவம் மற்றும் நாட்டின் பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பிரதமர் இந்த கொள்கை முடிவை எடுத்து பாராளுமன்றத்தில் அறிவித்து உள்ளார்.
பிரதமரின் இந்த முடிவில், பாகிஸ்தான் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 199-ன் கீழ் நீதித்துறை தலையிட முடியாது. அந்த அதிகாரம் ஐகோர்ட்டுக்கு இல்லை.
அரசு எடுக்கும் கொள்கை முடிவினால், யாருக்காவது அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டால் மட்டுமே அதில் நீதிமன்றங்கள் தலையிட முடியும். அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது.
தற்போது இந்திய விங் கமாண்டர் அபிநந்தனை விடுதலை செய்ய அரசு எடுத்த கொள்கை முடிவினாலும், அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைப்பதாலும், மனுதாரருக்கு அடிப்படை உரிமைகள் எந்த வகையில் பாதிக்கப்பட்டுள்ளது? என்ற எங்களது கேள்விக்கு சரியான, திருப்திகரமான விளக்கத்தை அவரால் அளிக்க முடியவில்லை.
சவாலான இந்த தருணத்தில் பாகிஸ்தான் பாராளுமன்றம் எடுத்துள்ள இந்த முடிவு தவிர்க்க முடியாது. பாராளுமன்றத்தின் முடிவை, அரசின் பிற அமைப்புகள் தலைவணங்கி, மரியாதை கொடுத்து ஏற்கவேண்டும். இந்த கொள்கை முடிவில் நீதித்துறை தலையிட முடியாது. இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்.
No comments: