பாலியல் வல்லுறவு வழக்கில் நான்கு குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘நிர்பயா’ கூட்டுப் பாலியல் வல்லுறவு வழக்கில், குற்றவாளிகள் நால்வருக்கும் மரண தண்டனையை உறுதிசெய்தது டெல்லி மீயுயர் நீதிமன்றம்.
வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் நுணுக்கங்களைப் பயன்படுத்தி இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் நடைபெற்றதாகவும், மரணத் தறுவாயில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலம் பிரதிவாதிகள் நால்வரும் குற்றவாளிகளே எனச் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிப்பதாகவும் தெரிவித்தனர்.
டெல்லியில், தனது நண்பர் ஒருவருடன் கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் திகதி பேருந்து ஒன்றில் பயணித்துக்கொண்டிருக்கையில், ஆறு பேரடங்கிய குழுவால் கொடூரமான முறையில் 23 வயதேயான நிர்பயா வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார். இந்த ஆறு பேரில் ஒருவர் இளம் பராயத்தைச் சேர்ந்தவர்.
சிகிச்சைகளுக்காக சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிர்பயா, பதின்மூன்று நாட்களின் பின் 29ஆம் திகதி மரணமடைந்தார். இந்தச் சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையாக வெடித்தது.
இதையடுத்து பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு குற்றங்களுக்கான எதிரான புதிய சட்டங்களும் பிறப்பிக்கப்பட்டன.
குற்றவாளிகள் ஆறு பேரில் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இளம் பராயக் குற்றவாளி போதுமான நன்னடத்தைக் காலத்தை சீர்திருத்தப் பள்ளியில் கழித்ததனால் விடுதலை செய்யப்பட்டார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளங்கள் எதுவும் வெளிவராதிருக்க அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து, ‘நிர்பயா’ என்று பெயர் சூட்டி அந்தப் பேரிலேயே இந்த வழக்கு விசாரணை நடைபெற்று முடிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments: