’என் மகளின் வயதுதான் என் கணவருக்கும்!’ பிரான்ஸ் முதல் பெண்மணி!
பிரான்ஸ் நாட்டில் அதிபர் தேர்தல் பரபரப்பாக நடந்துமுடிந்திருக்கிறது. பிரான்ஸின் மிகவும் இளைய வயதில் அதிபராக இருக்கிறார் இமானுவேல் மக்ரான்.
அவருக்கு வயது 39! அவரின் பொதுவாழ்வு மட்டுமல்ல, அவரின் தனிப்பட்ட வாழ்வும் சுவாரஸ்யங்கள் கொண்ட திருப்பங்கள் கொண்டன. அதற்கு காரணம் அவரின் மனைவி பிரிஜ்ஜெட் மக்ரான்!
பிரான்ஸ் நாட்டின் முதல் பெண்மணியாகவிருக்கும் பிரிஜ்ஜெட் ட்ரானெக்ஸ், அப்போது பள்ளி ஒன்றில் நாடக ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரின் கணவர் ஒரு வங்கி ஊழியர். அழகான மூன்று குழந்தைகளும் இருந்தன.
அதே பள்ளியில் பிரிஜ்ஜெட்டின் மகள் ஆசிர்ரே (Auziere) படித்துக்கொண்டிருந்தாள். ஆசிர்ரே வகுப்பில் படித்த மற்றொரு மாணவர்தான் தற்போது பிரான்ஸ் அதிபராக தேர்வுசெய்யப்பட்டுள்ள இமானுவேல் மக்ரான். 15 வயதே நிரம்பிய மக்ரானுக்கு, பிரிஜ்ஜெட்டைக் கண்டதும் காதல் வயப்பட்டார்.
மக்ரானின் நடவடிக்கைகளில் தெரிந்த மாற்றங்களால் பெற்றோருக்கு தன் மகன் காதல் வயப்பட்டிருக்கிறான் எனப் புரிந்துகொண்டனர். ஆனாலும் அவன் யாரைக் காதலிக்கிறான் என்பது தெரியவில்லை.
ஒருவேளை, பிரிஜ்ஜெட்டின் மகள் ஆசிர்ரே மீது காதல் இருக்கலாம் என்று யூகித்தனர். ஆனால், அதற்கு பிறகுதான், அவன் தன் ஆசிரியரான பிரிஜ்ஜெட்டைக் காதலிக்கிறான் என்பது தெரிந்து. கடும் அதிர்ச்சி அடைத்தனர்.
தன் மகன் 18 வயது நிரம்பும் வரை, அவனை விட்டு விலகியிருக்குமாறு, பிரிஜ்ஜெட்டிடம் கேட்டனர். மக்ரானின் பெற்றோர். ஆனால், அதற்கு பிரிஜ்ஜெட், “என்னால் அதை உறுதியாக கூற முடியாது” என்றார்.
பள்ளிக் காலத்தில், பிரிஜ்ஜெட் எழுதிய நாடகங்களின் நடித்துவந்திருக்கிறார் மக்ரான். அதன்பிறகு, இருவரும் சேர்ந்து நாடகங்கள் எழுதி நடித்தனர். மக்ரானைப் பற்றி பிரிஜ்ஜெட் பேட்டி ஒன்றில் கூறுகையில், "15 வயதுள்ள மக்ரான், வயதுக்கு மிஞ்சிய புத்திசாலித்தனத்துடன் நடந்துகொண்டான்.
ஓர் இளைஞரைப் போல நடந்துக்கொள்வதைவிட, முதிர்ச்சியான மனிதனாகவே மக்ரான் நடந்துகொண்டான். கொஞ்சம் கொஞ்சமாக அவனின் அறிவுதிறன் என்னை ஆட்கொண்டது” என்கிறார். பிரிஜ்ஜெட் தனது முதல் கணவரை கடந்த 2006ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.
ஒரு கட்டத்தில், ஏதோ காரணத்தால் மக்ரானைவிட்டு விலகியிருக்கிறார் பிரிஜ்ஜெட். ஆனால், “என்னை விட்டு நீ எங்கும் விலகிசெல்ல முடியாது. நான் உன்னை மீண்டும் சந்திப்பேன். அப்போது நிச்சயம் நாம் திருமணம் செய்துகொள்வோம்" என்று கூறியிருக்கிறார் மக்ரான்.
அப்போது மக்ரானுக்கு வயது 17! சரியாக பத்து ஆண்டுகள் கழித்து, கடந்த 2007-ம் ஆண்டு, பிரிஜ்ஜெட்டைக் கரம்பிடித்திருக்கிறார் மக்ரான். இருவருக்கும் கிட்டதட்ட 25 வயது வித்தியாசம்!
இவர்களின் திருமணத்தின்போதே மக்ரான் ஒரு விஷயத்தைக் கூறியிருக்கிறார். ”எங்களின் திருமணம் சாதாரணமானதல்ல என்றோ, அசாதாரணமானது என்றோ குறிப்பிடப்படுவதை நான் விரும்பவில்லை.
இதுபோன்ற ஒரு தம்பதியர் வாழ்கிறார்கள் என்பதை மட்டுமே கேட்க விரும்புகிறேன்” என்று கூறினார். இப்போது மக்ரானின் தாய், 'பிரிஜ்ஜெட்டை மருமகளாக பார்ப்பதைவிட ஒரு தோழியாக பார்க்கிறேன்' என்று நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.
ஆனால், பிரான்ஸ் ஊடகங்கள் இவர்களின் திருமணம் குறித்து சர்ச்சை எழுப்பாமல் இல்லை. அதற்கு பிரிஜ்ஜெட், “அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்பிற்கு 70 வயது; அவரது மனைவிக்கு மெலானியா டிரம்பிற்கு வயது 46. இவர்களின் திருமண உறவைப் பற்றி யாரும் கேள்வி எழுப்பவில்லையே. எங்களுடைய திருமண வாழ்க்கையைப் பற்றி மட்டும் ஏன் கேள்வி எழுப்புகிறீர்கள்?”, என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.
கடந்த மாதம், மக்ரானும், ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “நான் அதிபராக தேர்வுசெய்யப்பட்டால், இல்லை.. இல்லை... நாங்கள் அதிபர் தேர்தலில் தேர்வுசெய்யப்பட்டால், பிரிஜ்ஜெட்டிற்கு தனித்துவமான கடமைகளும் பொறுப்புகளும் வழங்கப்படும்” என்று கூறினார்.
எந்தச் சூழலில் பிரிஜ்ஜெட்டை பிரித்துப்பார்க்காத மக்ரானுக்கு உள்ள அன்பின் சாட்சியே இந்த வரிகள்!
- Vikatan
No comments: