Header Ads

Header Ads

வடகொரியாவில் போர் மேகம்! மெரிக்க கப்பலுக்கு பாதுகாப்பளிக்க ஜப்பானின் ‘டெஸ்ட்ராயர்’ விரைந்தது

வடகொரியா, ஐ.நா. சபையின் தீர்மானங்களை மீறி, உலக நாடுகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அணுக்குண்டு மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதற்காக ஐ.நா. சபையும், அமெரிக்கா உள்ளிட்ட முக்கிய நாடுகளும் அந்த நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இப்போதும், 


அந்த நாட்டின் மீது புதிய பொருளாதார தடைகளை விதிக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது. வடகொரியாவின் அணுக் குண்டு, ஏவுகணை சோதனைகளை தடுத்து நிறுத்தியே ஆக வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். வடகொரியாவுக்கு மிரட்டல் விடுக்கிற நிலையில், யுஎஸ்எஸ் காரல் வின்சன் என்ற விமானம்தாங்கி கப்பலுடன் கூடிய கடற்படை அணியை கொரிய தீபகற்ப பகுதிக்கு அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது.


வடகொரியா அணு ஆயுத சோதனையை கைவிடாவிட்டால், பொருளாதார தடை விதிப்போம் என அதன் நட்பு நாடான சீனாவும் அறிவித்துள்ளது. வடகொரியா விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் 28-ம் தேதி நடந்த போது, அமெரிக்க வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் பேசுகையில், “அந்நாட்டு மக்களை அச்சுறுத்த வேண்டும் என்பது எங்களது நோக்கம் கிடையாது. எங்களின் பொறுமை முடிவுக்கு வந்து விட்டது. இனியும் பொறுமை காத்தால், அது வடகொரியாவின் அணு ஆயுதங்களை ஏற்றுக்கொண்டதாகத்தான் அர்த்தப்படும். 


வடகொரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கும் திட்டம் பரிசீலனையில்தான் இருந்து கொண்டிருக்கிறது’’ என்றார். வடகொரியா ஜப்பானை வம்புக்கு இழுக்கும் விதமாக அந்நாட்டு கடல் பகுதிகளிலும் ஏவுகணைகளை வீசி வருகிறது. வடகொரியாவின் அடாவடி செயலால் அண்மைக்காலமாக இப்பிராந்தியத்தில் போர் பதற்றம் நிலவி வருகிறது. அமெரிக்காவின் கார்ல் வின்சன் என்னும் விமானம் தாங்கி போர்க்கப்பலையும், 


ஒரு நீர்மூழ்கி கப்பலையும் தாக்குவோம் என்று அமெரிக்காவுக்கு வடகொரியா பகிரங்க மிரட்டல் விடுத்தது. இந்த நிலையில் ஜப்பானிய கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் கார்ல் வின்சன் உள்ளிட்ட அமெரிக்க போர் கப்பல்களுக்கு எரிபொருள் வினியோகம் செய்வதற்காக தனது கடற்படை கப்பல் ஒன்றை அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது. இந்த கப்பலுக்கு வடகொரியாவால் ஆபத்து ஏற்படலாம் என்பதால் ஜப்பான் அரசாங்கம் இசுமோ என்னும் போர்க்கப்பலை பாதுகாப்பு அளிக்க அனுப்பியது. இது ஜப்பானின் மிகப் பெரிய போர்க் கப்பல் ஆகும். 


போரில் ஈடுபடும் ஹெலிகாப்டர்களை கொண்ட இந்த கப்பல் ஜப்பானின் யோகோசுகா துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது. இரண்டாம் உலகப் போருக்கு பின்பு எந்த போரிலும் ஈடுபடுவதில்லை என்பதில் ஜப்பான் அரசு உறுதியாக உள்ளது. அதேநேரம் தற்போதைய சூழ்நிலையை கருத்தில்கொண்டு ராணுவம் தனது விருப்பத்திற்கு ஏற்ப செயல்பட ஜப்பான் அரசு சட்ட விதிகளை திருத்தி உள்ளது. இந்த திருத்தம் செய்யப்பட்ட பிறகு இன்னொரு நாட்டின் கப்பலின் பாதுகாப்பிற்காக போர்க்கப்பல் ஒன்றை அனுப்பி வைக்க ஜப்பான் எடுத்த முதல் நடவடிக்கை இதுவாகும். இசுமோ கப்பலில் உள்ள போர் வீரர்கள் தேவைப்படும் பட்சத்தில் குறைந்த பட்ச ஆயுத பிரயோகத்தில் ஈடுபடுவதற்கும் அதிகாரம் அளிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Powered by Blogger.