நண்பர் கொலைக்குப் பழிதீர்க்கவே மான்செஸ்டர் தாக்குதல்?
மான்செஸ்டர் பயங்கரவாத தாக்குதல் குற்றவாளியின் நண்பர் கொலைக்கு பழி தீர்க்கவே நடந்துள்ளதாக அபேடி குடும்பத்திற்கு நெருக்கமானவர் ஒருவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மான்செஸ்டர் தாக்குதலில் ஈடுபட்ட சல்மான் அபேடி, பழிதீர்க்கும் ஆசையை பலமுறை தெரிவித்திருப்பதாக குறித்த நபர் தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் தன் பெயரையோ, அடையாளத்தையோ வெளியிட வேண்டாம் எனவும் அந்த செய்தி நிறுவனத்திடம் கோரியுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதம் மான்செஸ்டரில் பிரித்தானிய இளைஞர்கள் தாக்கியதில் அபேடியின் நண்பர் ஒருவர் பலியாகியுள்ளார் என்றும் அவரும் லிபியாவிலிருந்து வந்தவர் என்றும் கூறப்படுகிறது.
அபேடி குடும்பத்துக்கு நெருக்கமான குறித்த நபர் கூறும்போது, “மான்செஸ்டரில் 2016-ம் ஆண்டு மே மாதம் லிபியா நாட்டைச் சேர்ந்த அபேடியின் நண்பர் கொலை செய்யப்பட்டது மான்செஸ்டரில் வசிக்கும் லிபியா நாட்டுக்காரர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
குறிப்பாக சல்மான் அபேடி கொந்தளித்துப் போனார், இதனையடுத்து இதற்குப் பழிதீர்ப்பேன் என்று அவர் கூறிவந்தார்.
அக்கம்பக்கங்களிலிருந்த லிபியர்களை அமைதிப்படுத்த முடியவில்லை. அவர்கள் தங்களை வேண்டுமென்றே குறிவைக்கின்றனர் என்று உணர்ந்தனர். அதாவது இஸ்லாமியர்கள் என்பதால் தாக்கப்படுவதாக உணர்ந்தனர்.
2016-ல் பிரித்தானியாவில் இளைஞர்கள் தாக்குதலில் பலியான லிபியர் பெயர் அப்துல் வஹாப் ஹஃபீதா. அவரைக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் இன்னமும் விசாரணையில் உள்ளனர்.
இந்நிலையில் மான்செஸ்டர் தாக்குதலுக்கு இந்தச் சம்பவமும் பின்புலமாக இருக்கும் என்று ஐயம் எழுந்துள்ளது.
No comments: