கிளிநொச்சியில் பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி!
முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தம் உறவுகளுக்காக இன்று அமைதியான முறையில் அஞ்சலி நிகழ்வுகளை தமிழர்கள் அனுஷ்டித்திருந்தனர்.
யுத்தம் எனும் போர்வையில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு அவர்கள் உறவுகள் நினைவு கூறும் நாளாகவே இந்த மே 18 ஆம் திகதியினை தமிழ்மக்களும் பாதிக்கப்பட்ட மக்களும் நோக்குகின்றனர்.
ஆனாலும் இந்த தமிழர் துயர் நினைவு கூறும் நாளினை இனவாதமாக சித்தரிக்கும் செயற்பாடுகளும், அதனை அரசியல் இலாபமாக மாற்றிக் கொள்ளும் செயற்பாடுகளும் நடைபெற்றன.
தென்னிலங்கை அரசியல் வாதிகள் பலரின் கருத்து, முள்ளிவாய்க்கால் நினைவு தினம் மீண்டும் விடுதலைப்புலிகளை மீள் உருவாக்கும் செயல் என்பதே. எனினும் அது பெரிதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை.
இவை இவ்வாறு இருக்க இந்த முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்வுகளில் குழப்பத்தினை ஏற்படுத்தவும் பலர் முயன்றுள்ளதாக கூறப்படுகின்றது.
கிளிநொச்சி நகருக்கு சென்ற தென்னிலங்கையைச் சேர்ந்த சிலர் அங்கே பௌத்த ஆதிக்கத்தை காட்டும் வகையில் செயற்பாடுகளைச் செய்துள்ளனர்.
சிங்கலே பௌத்த அமைப்பு எனக்கூறப்படும் அவர்கள், கிளிநொச்சி நகரில் பௌத்தத்தை மட்டும் மையமாகக் கொண்ட கொடியினை தேசிய கொடியாக சித்தரித்து அவற்றினை கிளிநொச்சி நகர் முழுதும் பறக்க விட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து இவ்வாறு செய்தவர்கள் அதனை சமூக வலைத்தளங்கள் ஊடாக நேரடியாக பகிர்ந்தும் உள்ளனர். அவ்வாறு பகிர்ந்துள்ள காணொளியில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது..,
“முழு இலங்கையும், சிங்க இராச்சியம் என வெளிப்படுத்தவே இந்த கொடியினை நாம் கிளிநொச்சி நகர் எங்கும் பறக்க விட்டோம். 5000 இற்கும் மேற்பட்டவர்கள் இதனை செய்வதற்கு வருவதாக கூறினார்கள் ஆனால் அவர்கள் வரவில்லை.
சிலர் மட்டுமே வந்தார்கள். இது வேதனை தருவதாக அமைந்தாலும் எமது செயலை வெற்றிகரமாக செய்தோம் அதனால் மகிழ்ச்சியே.
நீண்ட நாட்களாக செய்ய திட்டமிட்டிருந்த இந்தச் செயலை நாம் வெற்றிகரமாக செய்து முடித்தோம். கிளி நொச்சி (தெமலு) தமிழர் இடத்திற்குள் நுழைந்து எமது சிங்க லே கொடியினை பறக்க விட்டோம்.
கிளிநொச்சி பொலிஸ்நிலையம், நீதிமன்றத்திற்கு முன்னாலும் கொடிகளைப் பறக்க விட்டோம். எவரும் எதிர்க்க வில்லை தொடர்ந்து எமது செயற்பாடுகள் தொடரும்.
கிளிநொச்சியில் கொலையாளிகளுக்கு தமிழர்கள் நினைவு கூறும் அதே நேரம், நாம் எமது வெற்றியையும், வீரர்களையும் கொண்டாடியுள்ளோம்.
யாருக்கும் பயப்படவும் இல்லை யாருடைய உதவியையும் நாட வில்லை எனவும் அந்த காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு கிளிநொச்சி நகரில் இராணுவ வீரர்கள் வாழ்க, வாழ்க என கோஷங்களையும், நடு வீதியில் கூச்சல்களை எழுப்பியும் இராணுவ வீரர்களை நினைவு கூறும் நடவடிக்கையிலும் சிங்கலே அமைப்பினர் இன்று ஈடுபட்டுள்ளனர்.
அமைதியாக முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நினைவுகூறலை செய்து கொண்டிருக்கும் போது இவ்வாறாக அதனை குழப்பும் நோக்கத்தோடு இந்தச் செயல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதன் மூலம் கிளிநொச்சியில் பதற்றத்தை ஏற்படுத்தி, முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் குழப்பத்தையும் ஏற்படுத்த முயற்சி நடைபெற்றுள்ளதாகவும், இது முற்றிலும் இனவாதத்தின் செயற்பாடு எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் அவர்கள் இந்தச் செயலை நேரடியாக ஒளிபரப்பியதோடு வார்த்தை பிரயோகங்களில் இனவாதத்தை வெளிப்படையாக கக்கியும் இருந்தமை அவதானிக்க முடியுமானதாக இருந்தன.
தேசிய கொடியினை மாற்றும் செயற்பாட்டினை செய்தது, மற்றும் இனவாதத்தினை தூண்டும் வகையில் செயற்பட்டமை குற்றமே. வேதனையில் உள்ள மக்களிடையே இவ்வாறு நடந்து கொள்வதும் தண்டிக்கப்பட வேண்டியதே.
ஆனாலும் இந்தச் செயலுக்கு பின்னணியில் இருப்பவர்கள் யார்? என கண்டறிந்து அனைவரையும் தண்டிப்பது அரசின் கடமை. அல்லது அமைதியான நாடு மீண்டும் கடந்த காலத்தை மீட்டிப்பார்க்க வைக்கும் எனவும் கூறப்படுகின்றது.
No comments: