உண்மையான பௌத்தர்கள் இந்த நாட்டை ஆண்டனரா?
இன்றும் நாளையும் வெசாக் நாட்கள். வண்ண வண்ணமான நிறங்களிலும் பல அழகிய வடிவங்களிலும் வெசாக் கூடுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. முன்பெல்லாம் வெசாக் தினங்களை நாங்கள் கேள்விபட்டிருக்கிறோம். இப்போது வடகிழக்கில் நிலைகொண்டுள்ள இலங்கை இராணுவத்தினர் வெசாக் கூடுகளை வைக்கின்றனர். எங்கள் நகரங்களை எல்லாம் வெசாக் கூடுகளின் நகரங்களாக்கின்றனர் இலங்கை இராணுவத்தினர்.
வடகிழக்கில் இலங்கை இராணுவத்தினர் வெசாக் கூடுகளை மாத்திரம் அமைப்பதில்லை. அவர்கள்தான் புத்தர் சிலைகளையும் வைக்கிறார்கள். அவர்கள்தான் பௌத்த விகாரைகளையும் வைக்கிறார்கள். வெசாக் தினங்களில் வண்ண வண்ண வெளிச்சங்களை இராணுவத்தினர் பாய்ச்சுகின்றனர். ஆனால் இலங்கை இராணுவத்தின் மனதில் அந்த வெளிச்சங்கள் இல்லை. ஏனெனில் அவர்களின் இருதயங்கள் போரினாலும் ஆக்கிரமிப்பினாலும் மண் அபகரிப்பினாலும் தமிழர் விரோதத்தினாலும் நிறைந்திருக்கிறது?
அதிலும் இந்த இராணுவத்தினர் புத்தரை வணங்கி, புத்தரின் பெயரால், புத்த பாடலை ஓதி, பிரித் கட்டியல்லவா எம் மீது போர் தொடுத்தனர். அகிம்சை, அமைதி, துறவு, ஞானம் என்ற புத்தரின் வழிமுறைகளுக்கும் போதனைகளுக்கும் சிந்தனைகளுக்கும் மாறானதல்லவா யுத்தம்? புத்தரின் பெயரால் முன்னெடுக்கப்பட்ட யுத்தத்தில் எங்கள் மீது இரக்கமற்ற ரீதியில் குண்டுகளை வீசி,எங்கள் குழந்தைகளையும் பெண்களையும் மிக கோரமாக கொன்றார்களே.
இவைகள் புத்தரின் போதனைகளையும் வழிமுறைகளையும் பின்பற்றுபவர்களின் வெளிப்பாடல்ல? எங்கள் நிலங்களை எல்லாம் ஆக்கிரமித்து அதில் புத்தர் சிலகைளையும் விகாரைகளையும் கட்டி எழுப்பி எங்கள் இருப்பை இல்லாமல் செய்வது புத்தரின் எண்ணங்களுக்கு மாறானதல்லவா? அவர் எவருடைய நிலத்தையும் அபகரிக்க விரும்பாமல் துறவு பூண்டு அனைத்தையும் துறந்தவரல்லவா? அவரின்பெயரால் எம் நிலத்தை அபகரிப்பது புத்தருக்குச் செய்யும் அநியாயமல்லவா?
அப்படி எல்லாவற்றையும் துறந்த ஒரு துறவியின் பெயரால் யுத்தம் செய்தவர்கள் இது பௌத்த நாடு என்று முழக்கமிடுகின்றனர். இன்றைக்கும் ஒரு இனத்தை ஒடுக்கவும் அவர்களை அழிக்கவும் முற்படுபவர்களில் பலர் நான் பௌத்தன் என்று அடையாளப்படுத்துகின்றனர். சிங்கள பௌத்த நாடு சிதைந்து போகும் என்றே அவர்கள் மதவாத கூச்சல் எழுப்புகின்றனர். புத்தர் சிலைகளின் முன்பாகவும் விகாரைகளிலும் தமிழ் சனங்களுக்கு எதிராக வார்த்தை யுத்தம் செய்கின்றனர்.
கோபத்தை துறந்து, சாந்தத்தை அணிந்து, மௌனத்துடன் அமர்ந்துவிட்ட புத்தரின் பெயரால் ஒரு சனத்தின்மீது, ஒரு இனத்தின்மீது கோபம் கொண்டு அவர்களை அழிக்க வேண்டும், ஒடுக்க வேண்டும் என உறுதிபூணுவதுதான் பௌத்தமா? ஆசையை வெறுத்த புத்தரின் பெயரால் ஒரு சனத்தின், ஒரு இனத்தின் உரிமையைக் கொடுக்கக்கூடாதென பறிப்பதுதான் பௌத்தமா? இவையெல்லாம் புத்தருக்கு மாறான செயல்கள். இவை எல்லாம் புத்தரின் போதனைகளுக்கும் வழிமுறைகளுக்கும் மாறான செயல்.
எனவே, பௌத்தர்கள் என போலியாக தம்மை அடையாளப்படுத்தியபடி திரிபவர்களின் முகத்தில் வெளிச்சத்தை காண முடியாது. அவர்கள் எங்கெல்லாம் புத்தர்சிலைகளை வைத்தும், வெசாக் வெளிச்சக்கூடுகளைக் கட்டினாலும் அவர்களின் முகத்தில் வெளிச்சம் பிறக்காது. அவர்கள் விகாரைகளை கட்டி எழுப்பி அங்கு நின்று எத்தனை உரைகளை நிகழ்த்தினாலும் அவர்களின் உரைகளில் ஞானம் இருக்காது. உண்மையில் புத்தரை பின்பற்றியிருந்தால் அவர்கள் ஞானம் உடையவர்களாக இருப்பார்கள். புத்த பெருமான் உண்மையான பௌத்தர்களுக்குத்தான் ஞானத்தை கொடுப்பார்.
உண்மையான பௌத்தர்கள் இந்த நாட்டை ஆண்டிருந்தால் குருதியாறு பாய்ந்திராது. உண்மையான பௌத்தர்கள் இந்த நாட்டை ஆண்டிருந்தால் அவரவர் உரிமை அவரவரிடம் இருந்திருக்கும். உண்மையான பௌத்தர்கள் இந்த நாட்டை ஆண்டிருந்தால், தமிழ்மக்கள் உரிமையற்றவர்களாக இருந்திரார்கள்., தமிழ் மக்கள் அழிக்கப்பட்டிருக்க மாட்டார்கள்., தமிழ் மக்களின் உரிமை மறுக்கப்பட்டிராது., தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்த நேரிட்டிருக்காது.
இங்கு காணப்படுவதெல்லாம், புத்தர் உள்ளிருக்காத வெறும் சிலைகளும் இருள் நிரம்பிய வெளிச்சக்கூடுகளுமே. ஏனெனில் புத்தர் எங்கள் நிலத்தை ஆக்கிரமிக்க மாட்டார். எங்கள் நிலத்தை ஆக்கிரமித்திக்கும் ஞானமற்றவர்கள் வைக்கும் கூடுகளில் இருள்தானே நிரம்பியிருக்கும். உண்மையான பௌத்தர் இந்த நாட்டை ஆண்டிருந்தால், புத்தரின் பெயரால் இன அழிப்பும் நில அபகரிப்பும் உரிமை மறுப்பும் இடம்பெற்றிராது. இப்படி புத்தரின் பெயரில் குற்றங்கள் நடந்திராது.
-தீபச்செல்வன்-
No comments: