இளம் பெண்ணின் அவசர முடிவு! குடும்பத்தார் செய்த பதறவைக்கும் செயல்....
காதலன் தற்கொலைக்கு முயன்றதை அறிந்த இளம்பெண் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
இந்த சம்பவத்தை மறைக்க அவருடைய குடும்பத்தினர் இளம்பெண்ணின் உடலை போலீசுக்கு தெரிவிக்காமல் தீ வைத்து எரித்ததால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தெரியவருவது;
மண்டியா மாவட்டம் நாகமங்களா தாலுகா கியாத்தனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சாந்தினி (வயது 17). ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணா தாலுகா சரவணபெலகோலா பகுதியை சேர்ந்தவர் வாசு (21). இவர் நாகமங்களா பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அப்போது அவருக்கும், சாந்தினிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர்.
இதற்கிடையே, வாசு பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் கார் டிரைவராக வேலைக்கு சேர்ந்தார். இந்த நிலையில், இவர்களின் காதல் விவகாரம் சாந்தினியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதற்கு அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், சாந்தினி தனது காதலை கைவிடாமல் தொடர்ந்து வந்தார்.
வீட்டில் எதிர்ப்பு அதிகரிக்கவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாந்தினி வீட்டை விட்டு வெளியேறி வாசுவுடன் பெங்களூருவுக்கு சென்றுவிட்டார். இருவரும் பெங்களூருவில் ஒரே வீட்டில் சில நாட்கள் வசித்தனர். இதுபற்றி அறிந்ததும் சாந்தினியின் பெற்றோர் பெங்களூருவுக்கு சென்று அறிவுரை கூறி சாந்தினியை வீட்டிற்கு அழைத்து சென்றனர். அதன்பின்னர் வாசுவும் பெங்களூருவில் வேலையை விட்டுவிட்டு நாகமங்களாவுக்கு சென்றுவிட்டார்.
வாசு, சாந்தினியின் வீட்டில் பலமுறை எடுத்துக் கூறியும் அவர்கள் காதலுக்கு சம்மதிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் மனமுடைந்த வாசு, கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் தங்கியிருந்த வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு பெல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி அறிந்ததும் அதிர்ச்சி அடைந்த சாந்தினி கடந்த 7–ந்தேதி இரவு தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் பற்றி வெளியே தெரிந்தால் குடும்பத்தினருக்கு அவமானம் என்று கருதிய சாந்தினியின் குடும்பத்தினர், சாந்தினி தற்கொலை செய்துகொண்டதை வெளியே சொல்லாமலும், போலீசுக்கு தெரிவிக்காமலும் அவருடைய உடலை தீ வைத்து எரித்துவிட்டனர்.
இந்த நிலையில், சாந்தினி தற்கொலை செய்து கொண்டதாகவும், அதனை மறைத்து அவருடைய குடும்பத்தினர் சாந்தினி உடலை தீவைத்து எரித்துவிட்டதாகவும் நேற்று முன்தினம் கிராம மக்களுக்கு தெரியவந்தது.
இதுபற்றி அறிந்த பகுதி மக்கள் நாகமங்களா துணை பொலிஸில் புகார் கொடுத்தனர். அவருடைய தலைமையில் நாகமங்களா பொலிஸார் கியாத்தனஹள்ளி கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது, சாந்தினி தற்கொலை செய்துகொண்டதும், இது வெளியே தெரிந்தால் அவமானம் என்று கருதிய சாந்தினியின் குடும்பத்தினர் அவருடைய உடலை தீ வைத்து எரித்ததும் தெரியவந்தது. இதுகுறித்து நாகமங்களா போலீசார் சாந்தினியின் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
No comments: