இரத்த வெள்ளத்தில் உயிர்ப் பிச்சை கேட்ட நிரபராதியை அடித்தே கொன்ற மக்கள்
இரத்த வெள்ளத்தில் நபர் ஒருவர் கிராம மக்கள் மத்தியில் மண்டியிட்டு உயிர்ப் பிச்சை கேட்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம், ஜாம்செட்பூரில் உள்ள சோபர்பூர் எனும் மலைவாழ் கிராமத்தில் தான் இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது.அந்தப் புகைப்படத்தில் இருப்பவர் மூன்று குழந்தைகளின் தகப்பனான முகமது நயீம் என்பவர் ஆவார்.
வாட்ஸ் அப்பின் வழியே வதந்தியாகப் பரவிய ஒரு செய்திதான் இவரைக் கொன்றிருக்கிறது. அந்தச் செய்தியில் குழந்தைத் திருடர்கள் அதிகமாக உலாவி வருவதாகவும், தங்கள் குழந்தைகளை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்றிருந்திருக்கிறது.
காட்சிலா எனும் பகுதியைச் சேர்ந்த முகமது நயீம், தொழில்நிமித்தமாக நண்பர்கள் நால்வருடன் சோபர்பூரைக் கடந்துசென்றபோது, சந்தேகத்தின் அடிப்படையில் நால்வரையும் சுற்றிவளைத்த அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள், அவர்களை இழுத்துச் சென்று காட்டுமிராண்டித்தனமாக தாக்கி கொன்றுள்ளனர்.
இதில் மரணிக்கும் தருவாயில் நயீம் கையெடுத்து உயிர்ப்பிச்சை கேட்கும் கடைசி நிமிடங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களே இந்தச் செய்தியை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளன.
சம்பவம் நடந்த இடத்திற்கு காவல்துறையினர் வந்தபோதும், நயீம் படுகாயங்களுடன் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர்கள் மற்ற மூவரும் அந்தப்பகுதியின் அருகிலேயே கொடூரத்தாக்குதல்களுக்குப் பலியாகி கிடந்துள்ளனர்.
மக்களே சட்டத்தைக் கையில் எடுத்து, செய்யாத குற்றத்திற்கு, மரணத்தை அவர்களுக்கு தண்டனையாகக் கொடுத்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
No comments: