Header Ads

Header Ads

5 பேரை சுட்டு கொல்ல துப்பாக்கி திருடிய தமிழக போலீஸ்காரர் சிக்கினார்

தமிழ்நாட்டில் 5 பேரை சுட்டு கொல்ல துப்பாக்கி திருடிய தமிழக போலீஸ்காரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஜி.பாண்டீஸ்வரன் (31). இவர் எல்லைப் பாதுகாப்பு படை பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிந்தார். இதற்கிடையே பல்வேறு பிரச்சினைகள் காரணமாக கடந்த 2012-ம் ஆண்டு அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
அதன் பின்னர் மத்திய தொழில் பாதுகாப்பு பிரிவில் போலீஸ்காரராக மீண்டும் பணியில் சேர்ந்தார். அவருக்கு சத்தீஷ்கர் மாநிலம் பாண்டிவாடாவில் உள்ள பசேலி என்ற இடத்தில் பணி நியமனம் செய்யப்பட்டது. அவர் தேசிய சுரங்க வளர்ச்சி கார்ப்பரேசனில் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார்.
பசேலி சத்தீஷ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 470 கி.மீ. தொலைவில் உள்ளது. அங்கு பணியில் இருந்த பாண்டீஸ்வரன் உடன் வேலை பார்க்கும் மற்றொரு போலீஸ்காரர் பப்பு சோகாய் என்பவரின் ஏ.கே.47 ரக துப்பாக்கி மற்றும் 30 துப்பாக்கி குண்டுகள் உறைகளையும் திருடிவிட்டு விடுமுறையில் சென்று விட்டார்.
அதையடுத்து துப்பாக்கியை காணவில்லை என சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் புகார் செய்தார். ஆகவே, ஆயுத கிடங்கில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராவின் வீடியோக்களை போலீசார் சோதனை செய்தனர். அதில் ஏ.கே. 47 ரக துப்பாக்கி மற்றும் குண்டுகளை பாண்டீஸ்வரன் திருடியது தெரிய வந்தது.
எனவே, விடுமுறையில் இருந்த அவரை திரும்ப அழைத்து விசாரணை நடத்தப்பட்டது. அவரிடம் இருந்த 3 பெரிய ‘பேக்‘குகளில் சோதனை நடத்தப்பட்டது. ஒரு ‘பேக்‘கில் துணிமணிகள் இருந்தன. அதில் ஒரு துணியில் எண்ணை கறை இருந்தது.
அதை ரசாயன பரிசோதனை செய்த போது ஏ.கே. 47 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தும் கிரீசை துடைத்ததற்கான அடையாளம் என கண்டு பிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து துப்பாக்கியையும், குண்டுகளையும் திருடியதை பாண்டீஸ்வரன் ஒப்புக் கொண்டார். எனவே அவர் கைது செய்யப்பட்டார். இந்த தகவலை பாண்டிவாடா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் பல்லவா தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் பாண்டீஸ்வரன் குடும்பத்தினருக்கு நிலப்பிரச்சினை உள்ளது. அதில் சம்பந்தப்பட்ட 5 பேரை சுட்டுக் கொல்ல இந்த ஏ.கே.47 ரக துப்பாக்கியை அவர் திருடியுள்ளார். 5 பேரை கொன்ற பின் சத்தீஷ்கர் திரும்பி திருடிய துப்பாக்கி மற்றும் குண்டுகளை விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்தார்.
துப்பாக்கியை மாவோயிஸ்டு பயங்கரவாதிகளிடம் விற்க முயன்றாரா? அல்லது கள்ளத்துப்பாக்கி வியாபாரியிடம் விற்க திட்டமிட்டு இருந்தாரா என தெரிய வில்லை. இது குறித்து அவரிடம் தீவிரமாக விசாரணை நடக்கிறது.
திருடிய துப்பாக்கியை பிலாஸ்பூரில் உள்ள சிபாட் அருகே அவர் மறைத்து வைத்து இருந்தார். இங்கு 2013 முதல் 2015-ம் ஆண்டுவரை பணிபுரிந்துள்ளார். அந்த காலகட்டத்தில் இவரது வங்கி கணக்கில் இருந்து 200 முறை பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. எனவே இது போலீசாருக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிடங்கில் இருந்து அதிநவீன ஆயுதங்களை திருடி கடத்தியிருக்கலாம் என்றும் கருதுகின்றனர். எனவே அவருக்கு யார் யாருடன் தொடர்பு உள்ளது என்றும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

No comments:

Powered by Blogger.