Header Ads

Header Ads

பள்ளி விடுதியில் தங்கியிருந்த சிறுமிக்கு குழந்தை பிறந்தது

ஒடிசா மாநிலத்தில் பழங்குடியினருக்காக நடத்தப்படும் பள்ளி விடுதியில் தங்கியிருந்த 14 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டம் தரிங்காபாடி என்ற இடத்தில் மாநில அரசின் பழங்குடியினர் மற்றும் கிராம வளர்ச்சித் துறை சார்பில் பழங்குடியினர் மாணவிகளுக்கான விடுதி நடத்தப்பட்டு வருகிறது.
இந்த விடுதியில் அங்குள்ள சேவா ஆஷ்ரம் பள்ளியில் படிக்கும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மாணவிகள் தங்கி உள்ளனர்.
இவர்களில் 8-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவி ஒருவர் நேற்று முன்தினம் இரவு விடுதியில் இருந்த நிலையில் திடீரென குழந்தை பெற்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த விடுதி நிர்வாகத்தினர் அந்த மாணவியையும், குழந்தையையும் இரவோடு இரவாக காட்டுக்குள் துரத்தி விட்டனர்.
அந்த சிறுமி குழந்தையோடு காட்டுக்குள் தங்கி இருந்தார். இதை பார்த்த கிராம மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
விடுதி மேற்பார்வையாளர்கள், சமையலாளர் உள்ளிட்ட 6 ஊழியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். மாணவி கர்ப்பத்துக்கு காரணம் அருகில் உள்ள கல்லூரியில் படிக்கும் 3-ம் ஆண்டு மாணவர் என்று தெரியவந்தது. அவரை கைது செய்துள்ளனர்.
விடுதியில் இருந்த மாணவி எப்படி அந்த வாலிபரை சந்தித்தார் என்பது மர்மமாக உள்ளது. இதுபற்றி முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

No comments:

Powered by Blogger.