ஆனையிறவு ஏ-9 வீதியில் பாலம் புனரமைப்பினால் நான்காயிரம் குடும்பங்கள் பாதிப்பு
ஆனையிறவு ஏ-9 வீதியில் முன்னர் அமைக்கப்பட்டிருந்த பாலம் வீதி புனரமைப் பின்னர் மீண்டும் அமைக்கப்பட்டுள்ளதனால் ஆனையிரவு, பூனகரி, கிளாலி, கச்சாய்,கரைச்சி, கண்டாவளை உட்ப்பட 41 கிராமங்களைச் சேர்ந்த 4 ஆயிரம் குடும்பங்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக அவர்களின் வாழ்வாதார மீன் பிடி மற்றும் விவசாயத்தை செய்ய முடியாமல் முற்றாக வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
இதற்கான தீர்வினை பெற்றுத்தர கோரி இன்று திங்கட்கிழமை வடக்குமாகாண ஆளுனர் செயலகத்தில் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.
அவர்கள் கையளித்த மகஜறில் குறிப்பிட்டுள்ளதாவது:-
காலங்காலமாக அதிக மீன்வளம் காணப்படும் பகுதியாக ஆனையிறவு பகுதி உள்ளது. இந்த பகுதியில் சமுத்திரகடலும் சேத்துக்கடலும் இணைவதால் இப்பகுதியில் கடல் வாழ் உயிரினங்கள் அதிகமாக உள்ளது.
முல்லைத்தீவுக்கடலும் சங்குப்பிட்டிக்கடலும் சேரும் இடத்தை ஊடறுத்து ஏ-9 பாதையும் புகையிரதப்பாதையும் செல்கின்றது. ஏ-9 வீதியில் மக்கள் போக்குவரத்திற்காக அமையப்பெற்ற இப்பாலமானது முல்லைத்தீவு கடல் மற்றும் கேரதீவு கடல் நீரோட்டத்திற்காக 1962 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 30 ஆம் திகதி நிரந்தர பாலம் அமைக்கப்பட்டு காணி விவசாய நீர்ப்பாசன அமைச்சர் சீ.பி.டி.சில்வாவினால் திறந்து வைக்கப்பட்டது.
இப்பாலமானது 1974 ஆம் ஆண்டளவில் செப்பனிடும் பொழுது அகற்றப்பட்டு நீரோட்டம் தடைப்பட்டுள்ளது. 1962 ஆம் ஆண்டு இப்பாதை போடப்பட்ட பொழுது கடல்நீர் ஊடறுத்து செல்வதற்குரிய குழாய்கள் அங்கு பொருத்தப்பட்டிருந்தன.
சமூத்திரக்கடல் நீர் சேத்துக்கடலுக்கு செல்லும் போது அங்குள்ள மீனினங்களும் செல்கின்றது. அத்தோடு கடல்நீர் வெள்ள பெருக்கு காலத்தில் வந்து வற்றுக்காலத்தில் மீளத்திரும்பி செல்வதால் சேத்துக்கடலின் உவர்தன்மையும் நீருடன் கலந்து சமூத்திரக்கடலுக்கு செல்கின்றது.
மேலும் இந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் அனைவரினதும் வாழ்வாதாரமும் கடற்தொழிலை நம்பியே இருந்ததால் அவர்கள் நிறைவாழ்வு வாழ்ந்து வந்தார்கள்.
பின்னர் 1974 ஆம் ஆண்டு பாதை செப்பினிடும் போது முறையான ஆய்வுகளும், ஆராச்சிகளும் மேற்கொள்ளப்படாமையினால் பாதை மூடப்பட்டது. இதனால் இப்பகுதியில் உள்ள சிறுகடல் மீனவர்கள் பாதிப்புகளை எதிர்நோக்கி வந்தனர்.
அத்தோடு சூழல் பாதிப்புகளான வரட்சி, வெப்பம் அதிகரித்தல், உவர்தன்மை அதிகரிப்பினால் கண்டல் தாவரம் அழிவடைந்தமை, அங்கு வாழும் மக்கள் நோய் தாக்கங்களுக்கு உள்ளாகியமை போன்ற சூழலியல் பிரச்சினைகளை எதிர்நோக்கி வந்தனர்.
தொடர்ந்து உள்நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக இதில் கவனம் செலுத்தவில்லை. பின்னர் ஏ-9பாதை புகையிரதபாதை புனரமைப்பின் போதும் இது கவனத்தில் கொள்ளப்படவில்லை.
ஆனையிறவு பாலத்தை ஊடறுக்கும் ஆற்றுத்தொடுவாய் யாழ்நகரைச் சுற்றி பண்ணைப்பாலம் கல்முனை அரியாலை, சங்குப்பிட்டிப்பாலம் கிளாலி ஆனையிறவு, சுண்டிக்குளம், பூனையம்தொடுவாய் வழியாக சமுத்திரத்தை சென்றடைந்து மீள்சுழற்சியில் சுற்றிவரும். இதனால் மக்களுடைய வாழ்வாதாரமும் நிறைவாக இருந்தது.
குடிநீர் பிரச்சினைகளும் ஏற்படவில்லை அத்தோடு கடல்பகுதி அளவுக்கதிகமாக தரவையாக மாறவும் இல்லை. தற்போது வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள வரட்சி மற்றும் வெள்ளம் காரணமாக மீண்டும் இப்பாலம் தொடர்பான பிரச்சினை எழுந்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி, கரைச்சி கண்டாவளை மற்றும் பூனகரி ஆகிய பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிட்டத்தட்ட 41 கிராமங்களை சேர்ந்த 3500 தொடக்கம் 4000 விவசாயிகள் மற்றும் மீனவர்கள் தமது வாழ்வாதார ரீதியில் பெரும் பாதிப்புகளையும் பிரச்சினைகளையும் எதிர்நோக்கியுள்ளனர்.
இயற்கையான ஆற்றுநீரோட்ட சுழற்சியை தடுத்தமையினால் கீழ்வரும் பிரச்சினைகளை இப்பகுதியில் வாழும் மீனவர்களும், விவசாயிகளும் எதிர்நோக்குகின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சிறுகடல் நீரில் உப்புத்தன்மை அதிகரித்துள்ளமை, இப்பகுதிக் கிணறுகளிலிருந்து பாவிக்கப்பட்டு வந்த குடிநீர் உவர்தன்மையாகியதுடன் சிகப்புக்காவி படிந்துள்ளமை.
பெரும்கடல் மீனினம் இப்பகுதிக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளமை, கடல் தாவரங்கள், சங்கினங்கள் சிப்பியினங்கள் அழிந்துள்ளமை.
கோடை காலங்களில் கடல்நீரின் நிலைவற்றும் வேளையில் வெப்ப அதிகரிப்புடன் தரவையும் உருவாகின்றது. தரவையில் உள்ள தூசுகள் மாசுக்கள் காற்றின் வேகத்திற்கேற்ப இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு சுற்றாடல் பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்று மகஜரில் மேலும் குறிப்பிட்டு காட்டப்பட்டுள்ளது.
No comments: