தமிழீழ விடுதலைப்புலிகளின் பேச்சாளர் இலங்கையில் ஜனாதிபதி சட்டத்தரணியானார்
இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பாக இந்தியாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் பேச்சாளராக கலந்துகொண்ட சிரேஷ்ட சட்டத்தரணி அருணாசலம் முத்துக்கிருஷ்ணன், ஜனாதிபதி சட்டத்தரணியாக பதவியேற்றுள்ளார்.
யாழ்ப்பாணம் கொக்குவிலைச் சேர்ந்த அருணாசலம் முத்துக்கிருஷ்ணன் 18.01.2019 (வெள்ளிக்கிழமை) அன்று பிரதம நீதியரசர் நளின் பெரேரா முன்னிலையில் ஜனாதிபதி சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இருந்து 1956 ஆம் ஆண்டில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் கலைபீட பட்டதாரியான இவர் லண்டன் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறையில் 1964 இல் சட்டமானிப் பட்டத்தினை பெற்றுக்கொண்டார்.
மேலும் லண்டன் மாநகரின் லிங்கன்ஸ் இன் இல் பரிஸ்டர் சட்ட உயர்விருதினை 1967இல் பெற்றுக்கொண்டார். இவர் இலங்கையின் சட்டத்துறையில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் சட்டத்தரணியாக பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் முன்னிலையாகியுள்ளார்.
இலங்கை உயர் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் தீவு முழுவதும் அமைந்துள்ள குடியியல் மேன்முறையீட்டு நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்களில் பல்வேறு வகையான குடியியல் வழக்குகளில் காத்திரமான வாதாடியாக பணியாற்றியுள்ளார்.
குறிப்பாக பிறிமா கம்பனி வழக்கு, வரலாற்று பெருமை மிக்க கதிர்காமம் முருகன் ஆலயத்தின் பங்குடமை தொடர்பான வழக்கு, யாழ்ப்பாணம் மற்றும் வட. மாகாணத்திற்கு பிரத்தியோகமான தேசவழமைச் சட்டம் தொடர்பான பல்வேறு வகையான வழக்குகள் மற்றும் பொதுவுடமைச்சொத்துசார் வழக்குகளில் பிரதான சட்டவாதியாக பணியாற்றி கட்சிக்காரர் சார்பில் வெற்றி பெற்றதோடு பல நீதியரசர்களின் பாராட்டுக்களையும் பெற்றவர்.
இன்றுவரை பல இளம் சட்டத்தரணிகளை நெறிப்படுத்தி சட்டத்தொழிலில் பிரகாசிப்பதற்கு வழிகாட்டியவர் ஆவார். இலங்கையில் தமிழ் நீதிபதிகளாக பணியாற்றியவர்கள் பலர் இவரின் கனிஷ்ட சட்டத்தரணிகளாவர்.
இலங்கையின் இனப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் நோக்குடன் ஆரம்ப காலங்களில் இந்தியாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் பேச்சாளராக கலந்துகொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம், கொக்குவிலைச் சேர்ந்த மலேசியன் பென்சனியர் ந.அருணாசலம் மற்றும் மாணிக்க ரட்ணம் தம்பதிகளின் புதல்வனான இவர் திருநெல்வேலியைச் சேர்ந்த யாழ்ப்பாணக் கல்லூரி விரிவுரையாளரான சாந்தகுமாரி முத்துக்கிருஷ்ணனை திருமணம் முடித்துள்ள இவர், நான்கு பிள்ளைகளின் தந்தையுமாவார்.
மூத்த மகன் கலாநிதி ராஜராஜன் பேராசிரியராக சிற்றி பல்கலைக்கழகம் பிரிட்டனிலும், இரண்டாவது மகன் வாகீஸ்வரன் லண்டனில் கணக்கியல் துறையில் பணிப்பாளராகவும், மகள் பிரசாந்தி வாசுவன் நிறைவேற்று முகாமையாளராக அவுஸ்ரேலியாவிலும் மற்றும் கடைசி மகன் குமாரீஸ்வரன் கட்டிட விரிவாக்கல் துறையில் நிர்வாகியாக அவுஸ்ரேலியாவிலும் பணியாற்றுகின்றனர்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் வரலாற்றில் முதலாவது ஜனாதிபதி சட்டத்தரணியாக கௌரவம் பெற்ற பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் நீதிமன்றங்களில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக குடியியல் (சிவில்) சட்டத்தரணியாக பணியாற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி அருணாசலம் முத்துக்கிருஷ்ணன் இலங்கையில் சட்டத்துறைக்கு ஆற்றிய சேவைகள் பாராட்டப்படுவதோடு இலங்கையில் சட்டத் துறைக்கு காத்திரமான பங்களிப்புச் செய்த தமிழ் சட்டத்தரணிகள் வரிசையில் இன்றுள்ள முக்கியமானவர்களில் முதன்மையான ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments: