பெண்ணின் தலை துண்டு துண்டாக வெட்டி படுகொலை
சென்னை அடுத்த பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் தலையை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னையை அடுத்த பெருங்குடி குப்பை கிடங்கில் நேற்று முன்தினம் ஒரு பெண்ணின் வலது கை மற்றும் 2 கால்கள் கிடைத்தன.
நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் எதிரில் உள்ள குப்பை சேகரிப்பு மையத்தில் இருந்து லாரியில் கொண்டு செல்லப்பட்ட குப்பைகளை கொட்டியபோதுதான் இளம்பெண்ணின் கை, கால்கள் ஒரு பையில் வைத்து வீசப்பட்டது தெரிய வந்தது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் பள்ளிக்கரணை போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
கொலையுண்ட பெண்ணின் கையில் வளையல் ஒன்று கழற்றாமல் அப்படியே இருந்தது. கையில் டிராகன் படம் பச்சை குத்தப்பட்டு உள்ளது. இரண்டு சிறிய பொம்மைகளும் பச்சை குத்தப்பட்டு இருக்கிறது. காலில் மெட்டி அணிந்ததற்கான அடையாளம் காணப்பட்டன.
கை, கால்களை மட்டும் மீட்டு போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். கொலையுண்ட பெண்ணுக்கு சுமார் 35 வயது இருக்கும். துண்டு துண்டாக அவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
பெண்ணின் தலை மற்றும் உடல் பாகங்களை காணவில்லை. கொலையாளிகள் அவற்றை வேறு எங்காவது வீசி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
நுங்கம்பாக்கம்- கோடம்பாக்கம் பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் கை, கால்களை வீசிய கும்பல் உடலையும், தலையையும் சென்னையில் வேறு எங்காவது குப்பை தொட்டியிலேயே வீசி இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
இதைத் தொடர்ந்து சென்னை மாநகர பகுதியில் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.
வடசென்னை பகுதியில் உடலும், தலையும் வீசப்பட்டு இருக்கலாம் என்கிற சந்தேகத்தின் பேரில் நேற்று மாலை கொடுங்கையூரில் உள்ள குப்பை கிடங்கில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். ஆனால் அங்கு பெண்ணின் உடலோ, தலையோ கிடைக்கவில்லை.
இதையடுத்து சென்னையில் உள்ள மற்ற குப்பை கிடங்குகளிலும் தேடுதல் வேட்டை தொடர்கிறது.
மீட்கப்பட்ட கை, கால்களை வைத்து பார்க்கும்போது கொலையுண்ட பெண் பணக்கார வீட்டைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கள்ளக்காதல் தகராறு காரணமாக அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
அவர் வடமாநிலத்தைச் சேர்ந்த பெண்ணாக இருக்கலாமா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக சவுகார்பேட்டை, புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொலையுண்ட பெண் கோடம்பாக்கம் அல்லது நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் அல்லது மத்திய சென்னை பகுதியைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் முதலில் கருதப்பட்டது.
இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக சென்னை மாநகர் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களில் மாயமான பெண்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அதில் போலீசுக்கு உருப்படியான துப்பு எதுவும் கிடைக்கவில்லை.
இதன் காரணமாக கொலையுண்ட பெண்ணை கண்டுபிடிப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களுக்கும் பள்ளிக்கரணை போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர்.
வெளி மாவட்டங்களில் வசித்து வந்த பெண்ணை யாராவது கடத்தி வந்து சென்னையில் கொலை செய்து விட்டு உடலை துண்டு துண்டாக வீசி சென்றார்களா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாரிமுனை பகுதியில் கொடுங்கையூரைச் சேர்ந்த நகை கடை ஊழியர் ஒருவர் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டார். ஆனால் அவரது உடல் பாகங்கள் அந்த பகுதியிலேயே தனித்தனியாக வீசப்பட்டு இருந்தது. இதனால் ஒரே நாளில் அனைத்து உடல் பாகங்களையும் போலீசார் சேகரித்து விட்டனர்.
ஆனால் பெருங்குடியில் கைப்பற்றப்பட்ட பெண்ணின் கை, கால்கள் கிடைத்து 3 நாட்கள் ஆகியும் மற்ற உடல் பாகங்கள் கிடைக்காமலேயே உள்ளது. இதனால் போலீசார் இந்த வழக்கை சவாலாக எடுத்து துப்பு துலக்கி வருகிறார்கள்.
No comments: