எலி மருந்து கொடுத்து தாய் தற்கொலை முயற்சி
பெரம்பலூர் அருகே 4 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற் கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள அந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி சிவகாமி (வயது 35). இவர்களுக்கு திருத்திகா (10), கோபிகா (6) என 2 மகள்களும், இரட்டை குழந்தைகளான கபில் (5), கரன் (5) என்ற 2 மகன்களும் உள்ளனர்.
பிரபு சென்னையில் உள்ள சமோசா தயாரிக்கும் நிறுவனத்தில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார். இதனால் சிவகாமி தனது 4 குழந்தைகளுடன் அந்தூரில் வசித்து வந்தார்.
சிவகாமி சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இதற்காக மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வருகிறார். கடந்த 2 மாதங்களாக மருந்து, மாத்திரை வாங்க பணமில்லாமல் சிவகாமி தவித்து வந்தார்.
மேலும் அவர் தனது மாமியாருடன் சண்டை போட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சிவகாமி நேற்றிரவு சுக்கு காபியில் எலி மருந்தை (விஷம்) கலந்து தனது குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு, அவரும் குடித்து விட்டார். சிறிது நேரத்தில் அவர்கள் அடுத்தடுத்து மயங்கினர்.
இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம், பக்கத்தினர் 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக குன்னம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments: