சென்னை கல்லூரி ஹாஸ்டலில் எலி சட்னி
சாப்பிட வைக்கப்பட்ட சட்னியில் எலி ஒன்று உயிருடன் நெளிந்த சம்பவம் சென்னையையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
சென்னை அருகே செம்மஞ்சேரியில் ஒரு தனியார் என்ஜினியரிங் காலேஜ் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த காலேஜ் மாணவர்கள் தங்க ஒரு ஹாஸ்டலும் உள்ளது. வெளியூர், வெளிமாநிலங்கள் என பல இடங்களிலிருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு தங்கி உள்ளனர்.
இந்த நிலையில் இவர்கள் இன்று காலை வழக்கம்போல் சாப்பிட உட்கார்ந்தார்கள்.
அப்போது அவர்களுக்கு தரப்பட்ட சட்னியில் எலி ஒன்று உயிருடன் தத்தளித்து கொண்டிருந்தது
இதை பார்த்து மாணவர்கள் கடுமையான அதிர்ச்சியும் பயமும் அடைந்தனர்.ஏற்கனவே இப்படித்தான் அவர்களுக்கு தரப்படும் சாப்பாட்டில், கரப்பான்பூச்சி இருந்ததாம்.
அதேபோல குடிக்க வைக்கப்படும் தண்ணீரில் தவளை ஒன்று மிதந்ததாம். இது சம்பந்தமாக பலமுறை கல்லூரி நிர்வாகத்திடம் புகார் சொல்லியும் பலனளிக்காத நிலையில், இப்போது எலி ஒன்று நெளிந்ததை கண்டு ஆத்திரம் அடைந்த மாணவர்கள் அந்த சாப்பாட்டை சாப்பிடவே இல்லை.
ஹாஸ்டலில் இருந்து கிளம்பி நேராக காலேஜூக்கு வந்தார்கள்.
ஆனால் கிளாசுக்கு போகவில்லை. அதனால் கல்லூரி வளாகத்திலேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுகாதாரமான சாப்பாடு தர வேண்டும் என்று கோரி மாணவர்கள் முழக்கமும் செய்தனர்.
இந்த தகவல் செம்மஞ்சேரி போலீசாரின் காதுகளுக்கு எட்ட, விரைந்து வந்த அவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் விசாரணையை நடத்தி வருகிறார்கள்.
No comments: