மட்டனுக்காக தந்தை – மகனை தாக்கிய போலீஸ் அதிகாரிகள்
சேலம் பனமரத்துப்பட்டி அருகே 2 கிலோ மட்டன் கறி தராத தந்தை மற்றும் மகனை போலீஸ் அதிகாரிகள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள கம்மாளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மூக்குத்திக்கவுண்டர் (வயது 75). இவர் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையம் அருகில் கறிக்கடை நடத்தி வருகிறார்.
இந்த கடையில் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவபெருமாள் அவ்வப்போது வந்து இலவசமாக கறி வாங்கி செல்வது வழக்கம்.
இதேபோல் நேற்று மூக்குத்திக் கவுண்டர் கடையில் வியாபாரம் நடந்து கொண்டு இருந்தது. அப்போது அந்த கடைக்கு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவபெருமாள் உள்பட 3 போலீசார், போலீஸ் வாகனத்தில் வந்தனர்.
பின்னர் வாகனத்தில் இருந்தபடியே 2 கிலோ மட்டன் போடுடா என கறிக்கடைக்காரரிடம் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவபெருமாள், அதிகாரமாக கேட்டதாக கூறப்படுகிறது.
அப்போது உங்களை விட எனக்கு வயது அதிகம், நீங்கள் என்னிடம் மரியாதையாக பேசுங்கள் என்று சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபாலிடம் கடைக்காரர் தெரிவித்தார்.
இதனால் கோபம் அடைந்த, சப்-இன்ஸ்பெக்டர், சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார், வாகனத்தில் இருந்து இறங்கி வந்து மூக்குத்திக்கவுண்டர் மற்றும் அவருடைய மனைவி பழனியம்மாள் ஆகியோரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், அந்த முதியவரை மட்டும் அடித்து உதைத்து வாகனத்தில் வலுக்கட்டாயமாக ஏற்றிக்கொண்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றதாக தெரிகிறது.
இதை அறிந்த அவருடைய மகன் விஜயகுமார் (35) போலீஸ் நிலையம் சென்று, எதற்காக எனது தந்தையை அடித்தீர்கள் என கேட்டார். இதைக்கேட்ட அங்கிருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் விஜயகுமாரையும் தாக்கியதாக தெரிகிறது. மேலும் அங்கு வந்த பழனியம்மாளையும் போலீசார், தகாத வார்த்தைகளால் திட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது.
பின்னர் தந்தை, மகன் இருவரிடமும் ஒரு வெள்ளை தாளில் கைரேகை வாங்கி கொண்டு போலீசார் விடுவித்து விட்டனர். காயம் அடைந்த மூக்குத்திக் கவுண்டர், விஜயகுமார் ஆகியோர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
அதே நேரத்தில் போலீசார் தாக்கியதால் தந்தை, மகன் காயமடைந்தது குறித்து அன்னதானப்பட்டி போலீஸ் அதிகாரிகள் மாநகர போலீஸ் கமிஷனருக்கு தகவல் தெரிவித்தனர்.
இது தொடர்பாக கமிஷனர் சங்கர் விசாரணை நடத்தினர்.
இந்த தகவலை அறிந்த சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவபெருமாள், தனது வேலைக்கு பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதற்காக உடனடியாக கறிக்கடைக்கு சென்று அங்கிருந்த பழனியம்மாளிடம் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டு விட்டு சென்றனர்.
சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மன்னிப்பு கேட்கும் வீடியோ காட்சி வாட்ஸ் அப்பில் பரவி வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவபெருமாள் ஆகியோரை சேலம் மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றி கமிஷனர் சங்கர் உத்தரவிட்டார்.
No comments: