யாழிலும் தமிழர்களை புதைத்துள்ளார்கள்; நாடாளுமன்றில் ஸ்ரீதரனின் அதிரடி
மன்னார் மனித புதைகுழியைப் போன்று மண்டைதீவிலும் மனிதப் புதைகுழிகள் உண்டு எனவும், அவற்றை தோண்டியெடுத்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் சபையில் இன்று வலியுறுத்தினார்.
குறிப்பாக யாழ்ப்பாணம் மண்டைதீவில் தோமையார் தேவாலயம் அருகிலுள்ள கிணற்றிலும் செம்பாட்டு பிள்ளையார் கோயில் அருகிலுள்ள கிணற்றிலும் தமிழ் இளைஞர்கள் இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டு புதைக்கப்பட்டனர் எனவும், அவற்றை தோண்டியெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றம் இன்று (புதன்கிழமை) பிற்பகல் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடியது. இன்றைய அமர்வில், இரசாயன ஆயுதங்கள் சமவாய (திருத்தச்) சட்டத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோது அவர் இவ்விடயத்தை வலியுறுத்தினார்.
குறிப்பாக போர்க்காலத்தில் நீர்வேலி, மண்கும்பான் மற்றும் வேலணை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுமார் 120 இற்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் இராணுவத்தால் அழைத்துவரப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டு கிணறுகளில் போட்டு மூடப்பட்டதாக சிறீதரன் எம்.பி. கூறினார். அவற்றை இராணுவத்தினர் சீமெந்து இட்டு மூடியுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
No comments: