சுதந்திர தின நிகழ்வில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் சந்தேகநபர்
பாதுகாப்பு படையணியின் பிரதானி அட்மிரல் ரவீந்திர குணவர்தன சுதந்திர தின நிகழ்வில் பங்கு பற்றியுள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கில் கைதுசெய்யப்பட்ட அவர் தற்போது பிணையில் உள்ளார்.
இன்றைய சுதந்திர தின நிகழ்வில் அவர் பங்கேற்றமை பல்வேறு கேள்விகளை ஏற்படுத்தியுள்ளன.
இலங்கையின் 71ஆவது சுதந்திர தின நிகழ்வு இன்று காலி முகத்திடலில் நடைபெற்றது. முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையுடன் ஆரம்பமான இந்நிகழ்வில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க என அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு பிணை வழங்கப்பட்டுள்ள அட்மிரல் ரவீந்திர குணவர்தனவும் இந்நிகழ்வில் பங்குபற்றியிருந்தார்.
பிணை வழங்கப்பட்டுள்ள அவர் எப்படி அவ்வாறு அரச நிகழ்வொன்றில் பங்குபற்றுவார் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கடந்த 2008ஆம் மற்றும் 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில், கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் செய்யப்பட்டனர்.
கடந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில், நல்லாட்சி அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் கடற்படையின் முன்னாள் பேச்சாளர் உள்ளிட்ட அறுவர் கைது செய்யப்பட்டபோதும், பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
No comments: