ஜெனிவா கூட்ட தொடரில் இலங்கை விவகாரத்தில் திடீர் திருப்பம்?
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40வது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை தொடர்பில் புதிய பிரேரணை ஒன்றை கொண்டு வரவுள்ளதாக பிரித்தானியா அறிவித்திருந்தது.
எனினும், இம்முறை இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பிரேரணை எதுவும் கொண்டுவரப்பட மாட்டாது என தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்துள்ளார்.
அவ்வாறு புதிய பிரேரணை ஒன்று கொண்டு வரப்பட்டாலும் அது கடந்த கால பிரேரணைகளை விடவும் அழுத்தம் குறைந்த ஒன்றாகவே அமையும் எனவும் அவர் கூட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், “கடந்த கால ஆட்சியை போல அல்லாது இந்த ஆட்சியில் சர்வதேச நாடுகளின் ஆதரவு அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளது.
இலங்கையின் இக்கட்டான நிலைமைகளில் சர்வதேச நாடுகளின் உதவிகளை பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது. அதேபோல் இந்த அரசாங்கம் சீனா, ரஷ்யா பக்கம் இல்லாத ஆட்சியை கொண்டு நடத்துகின்றது.
இதன் காரணமாக மேற்குலக நாடுகளின் ஆதரவு இலங்கைக்கு அதிகமாகவே உள்ளது.
அதேபோல் கடந்த காலங்களில் இதற்கு முந்தைய கூட்டத்தொடர்களில் இலங்கை அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.
எனினும் மெதுவான பயணம் ஒன்றினை ஆரம்பித்தேனும் இலக்கை நோக்கி பயணிக்கின்றது என்ற காரணத்தை சர்வதேசம் ஏற்றுகொண்டுள்ளது என தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் கலாநிதி ஜெஹான் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த கூட்டதொடரின் போது இலங்கை தொடர்பில் மற்றுமொரு புதிய பிரேரணை கொண்டுவரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் தலைமையில் ஐந்து நாடுகள் ஒன்றிணைந்து இந்த பிரேரணையை முன்வைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது
No comments: