பெருந்தோட்டத் தொழிலாளர் சம்பள பிரச்சனை தொடர்பாக இந்திய முக்கியஸ்தரிடம் மனு கையளிப்பு
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா அடிப்படை சம்பளத்தை வலியுறுத்தி மலையக இளைஞர் அமைப்பினால் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் இன்று மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவில் தற்காலிக நலன்கருதி செய்து கொள்ளப்பட்டுள்ள புதிய கூட்டு ஒப்பந்தத்தில் மேலும் சில புதிய விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் சம்பள உயர்வை வழங்க வேண்டும் என கடந்த காலங்களில் கோட்டை புதையிரத நிலையத்திற்கு முன்பாக உண்ணாவிரதம் இருந்த இளைஞர்களினால் இந்த மனு கையளிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில், தொழிலாளர்களுக்கு வருடத்தில் 300 நாட்கள் வேலை உறுதி செய்யப்படுவதோடு, ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை நிதி என்பன அடிப்படை சம்பளத்திலிருந்து அல்லாமல் மாதத்தின் மொத்த சம்பளத்திற்கே ஒதுக்கபட வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் வேலை தளங்களில் வைத்து தொழிலாளார்கள் சுகவீனமுற்றால் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படுவதோடு, பெண் தொழிலாளர்களின் நலன்கள் விஷேட கவனத்தில் கொள்ளப்பட்டு தொழிற்சார் உரிமைகள் பேணப்படுதல் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் போது தொழில் பாதுகாப்பும், நலன்களும், சம்பளமும் , விடுமுறையும் கவனத்திற் கொள்ளப்படுவதோடு, தொழிற்லாளர்கள் காப்புறுதி திட்டத்திற்குள் உள்வாங்கப்பட வேண்டும். கழிப்பறைகள் முதலுதவிப் பெட்டிகள் உரிய இடத்தில் வைக்கபடல் வேண்டும். சர்வதேச தேயிலைத் தினம் கம்பனிகளின் சந்தைப்படுத்தலுக்கான தினமாக மட்டுமல்லாது தொழில் நலன் உரிமைகள் விழிப்பு நாளாக பிரகடனப்படுத்தப்படல் வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தவிதமான அரசியல் தொழிற்சங்க அமைப்புக்கள் மற்றும் குழுக்கள் சார்ந்து அல்லாமல் மலையக இளைஞர்களால் இந்த கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்
No comments: