பாடசாலையில் தமிழ்வழி கற்கும் மாணவர்களுக்கு இடம்பெறும் சிக்கல்! டக்லஸ் எழுப்பிய கேள்வி
பாடசாலை மாணவர்களுக்கான வரலாற்று பாடநூல்கள் தயாரிக்கப்படும்போது சிங்கள மொழியிலிருந்து தமிழ் மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்யப்படுவதால் அவை திரிபுபடுத்தப்படுவதுடன் இருட்டடிப்பும் செய்யப்படும் நிலை காணப்படுகின்றது.
அந்தவகையில் தமிழ் மொழி மூல வரலாற்றினை மொழிபெயர்ப்பின்றி, நேரடியாகவே தமிழில் எழுதுவதற்கு தமிழ் வரலாற்று பாட நிபுணர்களை ஏன் ஈடுபடுத்த முடியாது? என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இன்று சபையில் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் இன்று நிலையியற் கட்டளை 27/2ன் கீழான விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசமை நோக்கி இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் ,தற்போது பயன்பாட்டிலுள்ள தமிழ் மொழி மூல பாடசாலை வரலாற்றுப் பாடநூல்களில் பல்வேறு பிழைகள், திரிபுகள் மற்றும் மூடிமறைப்புகள் இடம்பெற்றுள்ளதாக தமிழ் வரலாற்று பேராசான்களால் தொடர்ந்து சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது.
இவ்விடயம் தொடர்பில் ஏற்கனவே கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி நான் பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 23/2ன் கீழ் எழுப்பியிருந்த கேள்வியின் பின்னர் இவ்விடயம் ஏற்றுக் கொள்ளப்பட்டு, எதிர்காலத்தில் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுமென அப்போதைய கல்வி இராஜாங்க அமைச்சரால் பதிலளிக்கப்பட்டது.
பின்னர், இவ்விடயம் தொடர்பில் தமிழ் வரலாற்று பேராசான்கள், ஆலோசகர்கள் அடங்கிய ஆலோசனைக் குழுவின் மூலமாக பல கட்ட கலந்துரையாடல்கள் கல்வி அமைச்சில் மேற்கொள்ளப்பட்டு, திருத்தப்பட வேண்டிய விடயங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. மேலும் இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோருக்கும் நான் கடிதங்கள் எழுதியிருந்தேன். இக் கடிதங்கள் பின்னர் கல்வி அமைச்சின் பார்வைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக எனக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
மேற்படி கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்த காலகட்டத்தில் தமிழ் மொழி மூல வரலாற்று பாடநூல்களின் 2017ஆம் ஆண்டின் நான்காவது பதிப்பு தயார் நிலையில் இருந்ததால் அதில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு வாய்ப்பில்லாமல் போயிற்று. எனினும், 2018ஆம் ஆண்டின் 6ஆம், 10ஆம் தரங்களுக்குரிய தமிழ் மொழி மூல வரலாற்றுப் பாடநூல்களின் ஐந்தாவது பதிப்பில் சுட்டிக்காட்டப்பட்டு, ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயங்கள் எதுவும் திருத்தப்படவில்லை என்றும் 7ஆம், 8ஆம் தரங்களுக்குரிய பாட நூல்கள் இன்னும் வெளிவரவில்லை என்றும் தெரிய வருகின்றது.
மேலும், சிங்கள மொழியில் எழுதப்படுகின்ற வரலாற்றுப் பாடங்களே தமிழில் நேரடியாக மொழிபெயர்க்கப்படுவதால், பல்வேறு சிரமங்களுக்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முகங்கொடுக்கின்ற சந்தர்ப்பங்களும் ஏராளமாகும் என்றே சுட்டிக்காட்டப்படுகின்றது. சிங்கள சொற்கள் அப்படியே மொழிபெயர்க்கப்படாமல் தமிழில் குறிப்பிடப்பட்டுள்ளன. அத்துடன் இந்த பாடநூல்கள் பட்டப் படிப்பு, பட்டப் பின் படிப்புகளுக்கான தரத்தினையே கொண்டிருப்பதும் பாடசாலை மாணவர்களுக்கு பெரும் சிரமங்களைக் கொடுக்கின்ற கடினத் தன்மை கொண்டதாக இருப்பதாகவும் வரலாற்று பேராசான்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
அதே நேரம், பாடசாலை சைவ நெறி பாட நூல்களில் காணப்படுகின்ற பிழைகள், தவறுகள் தொடர்பில் நான் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தேன். அதன் பிரகாரம், தற்போது வெளிவந்துள்ள 08, 09, 10ஆம் தரங்களுக்கான சைவ நெறி பாடநூலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஸ்ணன் மற்றும் உரிய அதிகாரிகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
தமிழ் மொழி மூல பாடசாலை மாணவர்கள் எமது வரலாற்றினை உரிய முறையில் அறிந்து கொள்வதற்கும், அதனூடாக தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கும் மேற்படி வரலாற்றுப் பாடநூல்களை திருத்தி, உண்மையான எமது வரலாற்றினை பறைசாற்றும் வகையில் தயாரிக்கப்படுவது அவசியமாகும்.
No comments: