திருப்பதியில் மஹிந்த சுவாமி தரிசனம்
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ரத சப்தமியை முன்னிட்டு இன்று அதிகாலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
பிரபல ஆங்கில நாளிதழ் சார்பில், பெங்களூருவில் கடந்த 9 ஆம் திகதி பன்னாட்டு உறவுகள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
இதையடுத்து அவர், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் ரத சப்தமி விழாவில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்வதற்காக, நேற்று மாலை பெங்களூருவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையம் சென்றடைந்தார்.
அங்கிருந்து, பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் புறப்பட்டு திருமலைக்குச் சென்றார்.
திருப்பதி மலையில் இரவு தங்கிய அவர், தன்னுடைய குழுவினருடன் இன்று அதிகாலை விஐபி தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தார். பின்னர் அவருக்கு கோயிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் பிரசாதங்கள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
அதன் பின்னர் கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ராஜபக்ஷ, “சுவாமி தரிசனம் சிறப்பாக நடைபெற்றது சுவாமி தரிசனத்திற்காக கோயிலுக்கு வந்த இடத்தில் அரசியல் குறித்து பேச விரும்பவில்லை” என தெரிவித்தார்
No comments: