தலைவர் பிரபாகரனின் வாரிசு இவர்தானாம்
பிரிவினைவாதத்தை தொடர்ந்தும் வலியுறுத்திவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சமஷ்டி கோரிக்கையை ஏற்றுக்கொண்டிருந்தால் மஹிந்த ராஜபக்சவிற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்துக்காட்டியிருக்க முடியுமென மஹிந்தவாதிகள் புதிய கதையொன்றை தெரிவித்திருக்கின்றனர்.
எனினும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பதவிக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு நாட்டு மக்களுக்கு துரோகமிழைப்பதாக மஹிந்த வாதியான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம்சாட்டியிருக்கின்றார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தை கலைத்து, முன்கூட்டிய பொதுத் தேர்தலுக்கு உத்தரவிட்டு சிறிலங்கா ஜனாதிபதி விடுத்த விசேட வர்த்தமானி அறிவித்தல் சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றம் நேற்றைய தினம் தீர்ப்பளித்திருந்தது.
இந்தத் தீர்ப்பை மறைமுகமாக விமர்சித்து வரும், மஹிந்தவாதிகள், இது மக்களுக்கான அடிப்படை உரிமைகளை மீறும் செயல் என்ற வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருக்கின்றனர்.
இந்த நிலையில், ஸ்ரீலங்கா உச்ச நீதிமன்றம் நேற்றைய தினம் வழங்கிய தீர்ப்பு தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில், மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் ஊடக சந்திப்பொன்றை நடத்தினர்.
( “மக்கள் நீதிமன்றத்தின் முன் தீர்க்கப்பட வேண்டிய ஒரு பிரச்சினை இன்று நீதிமன்றம் வரை சென்றுள்ளது. அலோஸியசின் பணத்திற்கு விலைபோன 118 உறுப்பினர்களைக் கொண்ட, குரங்குகளைப்போல் அங்குமிங்கும் பாயும் உறுப்பினர்களைக் இந்த நாடாளுமன்றத்தை தொடர்ந்து நடத்திச் செல்வதா இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானிப்பதற்கான சிறந்த இடம் மக்கள் மனமே. அந்த வழக்கை விசாரிப்பதற்கான சிறந்த மனமே. அந்த வழக்கை மக்கள் முன் கொண்டுசெல்ல வேண்டாமென உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமது அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு மக்களுக்கு இருந்த வாய்ப்ப இன்று இல்லாமல் போயுள்ளது”.)
நீதிமன்ற தீர்ப்பை அடுத்து பெரும் நெருக்கடியை சந்தித்துள்ள மஹிந்த தரப்பு தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க ஆதரவு வழங்கியதை மையப்படுத்தி, சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டும் வகையிலான பிரசாரங்களை தீவிரப்படுத்தியிருக்கின்றனர்.
இதன் ஒரு கட்டமாக மஹிந்தவாதியான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் கூற்றுக்கள் ரணில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் நாட்டை காட்டிக் கொடுத்துவிட்டதாக பாரதூரமான குற்றச்சாட்டை முன்வைத்தார்.
(“ ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து சில செயற்பாடுகளை மேற்கொள்கின்றார். அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் அது சார்ந்தாகவே அமையும். தமிழ் பிரிவினைவாதிகளின் கோரிக்கைகளைக் ஏற்றுக்கொண்டால், நாடாளுமன்றத்தில் 113 பேரின் ஆதரவைப் பெறுவது ஒன்றும் மஹிந்த ராஜபக்சவுக்கு பெரிய காரியமாக இருந்திருக்காது. சமஷ்டி யாப்பினை வழங்குவோம். வடக்கு கிழக்கில் உள்ள தொல்லியல்துறை சார்ந்த இடங்களை பாதுகாக்கும் வர்த்தமானி அறிவித்தலை விளக்கிக்கொள்கிறோம். அந்த இடங்களை தேவையான வகையில் பயன்படுத்திக்கொள்வதற்கு மாகாண, பிரதேச சபைகளுக்கு அதிகாரத்தை வழங்குவோம்.
வன பாதுகாப்பு வர்த்தமானி அறிவித்தலை விளக்கிக்கொள்கிறோம் என அனைத்திற்கும் இணக்கம் தெரிவித்தே ரணில் விக்ரமசிங்க, தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளார். இவ்வாறான நாட்டுக்கும் எதிரான பிரிவினைவாத கோரிக்கைகளுக்கு இணங்கிச் செல்வாராயின் மஹிந்த ராஜபக்சவுக்கு 113 பேரின் ஆதரவை பெறுவது ஒன்றும் பெரிய விடயமல்ல. மஹிந்த செய்யாத விடயங்களையே ரணில் செய்வார். வெளிநாட்டு சக்திகளுக்கும், தமிழ்க் கூட்டமைப்பிற்கும் ரணிலை மீண்டும் பதவிக்குக் கொண்டுவர வேண்டிய தேவை காணப்படுகின்றது. வெளிநாட்டு தூதரகங்களுக்கு அவர்களின் நிகழ்ச்சி நிரலை இங்கு செயற்படுத்துவதற்கான தேவை இருக்கின்றது”.)
மஹிந்தவாதிகளின் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சிறிலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் வாரிசாக அடையாளப்படுத்தினார்.
(“வெளிநாட்டு சக்திகளுடன் ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளவர்களே உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாகக்கல் செய்தனர். அரச சார்பற்ற நிறுனங்கள் மற்றும் வெளிநாட்டு சக்திகளின் தேவையை நிறைவேற்றும் வகையில் அவர்கள் செயற்பட்டுள்ளனர். மக்களின் வாக்குரிமையை பறித்த விடயத்தை, ஜனநாயகத்தின் வெற்றியென ஐக்கிய தேசியக் கட்சியினர் கூறுகின்றனர். ஜே.ஆர் இதனையேச் செய்தார். மஹிந்த ராஜபக்ச தேர்தல்களை ஒத்திவைக்கவில்லை. ஜனநாயகத்தின் பாதுகாவலர்கள் என தம்மை அடயாளப்படுத்திக்கொள்ளும் மக்கள் விடுதலை முன்னணி ரணிலை பாதுகாக்க முயற்சிக்கின்றது.
மக்கள் விடுதலை முன்னணிக்கு மிகப்பெரிய கனவு ஒன்று காணப்படுகின்றது. ஒக்டோபர் 26ஆம் திகதி சதியில் ஈடுபட்ட அனைவரையும் சிறையில் அடைக்க வேண்டுமாம் அவர்களுக்கு. அவ்வாறு செய்த பின்னர் பொதுமக்கள் அவர்களை இராஜாக்களைப் போல் மதித்து அரசாங்கத்தை ஒப்படைப்பார்கள் என்ற கனவு அவர்களுக்கு. பிரபாகரனிடம் இருந்து நாட்டை மீட்ட மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக அவர்கள் செயற்படுகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுகின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரனின் வாரிசான சுமந்திரனுடன் இணைந்து மக்கள் விடுதலை முன்னணி செயற்டுகின்றது. நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்துவதும் சுமந்திரனே. இந்தந நாட்டை பிரபாகரனின் வாரிசுகளிடம் கையளிக்கவா எண்ணுகின்றீர்கள்”.)
எவ்வாறாயினும் மேற்குலக நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்படும் தமிழ் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான மத்தியாபரனம் ஏப்ரஹாம் சுமந்திரன், தமிழ் மக்களின் அபிலாசைகளை ஐக்கிய தேசிய முன்னணியிடம் காட்டிக் கொடுத்துவிட்டதாக தமிழர் தரப்பினால் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகியுள்ளார்.
இந்த நிலையிலேயே மஹிந்தவாதியான சுசில் பிரேமஜயந்த, அவரை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரின் வாரிசாக சிங்கள மக்கள் மத்தியில் அடையாளப்படுத்த முற்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments: